வாழ்வு… மரணம்… வாழ்வு

Mr.Samoonஇணையத் தளத்திற்கு எழுத வேண்டுமென உட்கார்ந்திருந்தேன். நேற்று (16.08.2015) எனது தம்பி என்னைவிட இரண்டு வயதுகள் இளையவர் இறந்து விட்டார். திடீரென இறந்தார். கருணை நிறைந்த இறைவனிடம் போய்ச் சேர்ந்தார். அந்த மன நிலையிலிருந்து விடுபடாத நிலையில் மரணம் பற்றியே எழுதுவோம் எனத் தீர்மானித்தேன். எனது தந்தை இறந்து ஏறத்தாழ 44 வருடங்களின் பிறகு எனது குடும்பத்தில் இன்னொருவரை அல்லாஹ் அழைத்துக் கொண்டான். வாழ்க்கையின் தவிர்க்க முடியாத நியதி இது. எனினும் மரணம் என்பது மொத்தமான அழிவு அல்ல. இன்னொரு உலகுக்கான வாயில். ஆனால் அது எப்படியான வாயில்?! அந்த வாயில் எங்கே கொண்டு போய்விடும்?! இந்தப் பின்னணியில்தான் ஒரு முஸ்லிம் முதன்மையாக மரணத்தைப் பயப்படுகிறான்.

இப்பிரபஞ்சத்தின் சூட்சும முடிச்சுகள் ஆயிரம் ஆயிரம். அவற்றை மனிதன் அவிழ்க்கிறான். பிரபஞ்சத்தை சற்று விளக்கமாகப் புரிந்து கொள்கிறான். அவனால் அவிழ்க்க முடியாத சூட்சும முடிச்சுகள் எத்தனை எத்தனையோ?! அவற்றிலொன்று மரணம். மரணம் என்பது என்ன? மரணித்த மனிதனில் எல்லாம் இருக்கிறது. அவனது கண்ணும், செவியும் அவனது உறுப்புகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் அவனால் இயங்க முடியவில்லை. “உயிர்” என்ற பொருள் மட்டும் அவனிடமிருந்து போய் விட்டது. “உயிர்” என்பது என்ன? அது ஒரு சடமா? நோய் என்பது சட உடம்போடுதான் தொடர்புபடுகிறது. அப்படி இருக்க அந்த உயிர் ஏன் வெளியேறுகிறது. மனிதனால் புரிந்து கொள்ள முடியவில்லை. இறைவனின் ஒரு புரிந்து கொள்ள முடியா திட்டம் இது. மறை உலகத்தோடு சம்பந்தப்படும் இந்த உண்மையை எப்படி நோக்க வேண்டும். இறை தூதர் (ஸல்) விளக்குகிறார்கள்:

“ஆசைகளை உடைக்கும் நிகழ்வை அதாவது மரணத்தை நினைவு கூறலை அதிகரித்துக் கொள்ளுங்கள்.” (அல் முன்தகா மில் அல் தர்கீப்-வ-அல்-தர்ஹீப் – இமாம் முன்திரி – யூசுப் அல் கர்ளாவி – 2077. ஸுனன் இப்னு மாஜா, ஸுனன் திர்மிதி)

இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்:

“நான் இறை தூதர் (ஸல்) அவர்களிடம் பத்தாமவராகப் போய்ச் சேர்ந்தேன். அப்போது அன்சார்களில் ஒருவர்: அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் யார் உயர்ந்த புத்திசாலி, மிகவும் திட சங்கற்பத்தோடு செயற்படுபவர்?! என வினவினார். அப்போது இறை தூதர் (ஸல்): அவர்களில் மரணத்தை அதிகம் நினைவு கூர்பவர்; அதற்காக அதிகம் தயாராகுபவர். அவர்கள்தான் புத்திசாலிகள். உலகத்தில் பெருமையோடும், மறுமையில் கண்ணியத்தோடும் அவர்கள் போய்ச் சேர்கிறார்கள் என்றார்கள்.” (மேற்படி நூல்: 2078 – இப்னு அபி-அல் துன்யா “மரணம்” என்ற நூல், தபரானி அல் முஃஜம் அல் ஸகீர்)

மனிதன் எத்தனை ஆசாபாசங்களோடு உலகில் வாழ்கிறான். பிள்ளை பாசத்தை உள்ளத்தில் சுமந்து, அழகிய வீடு, நல்ல உணவு, பிள்ளைகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் என்ற இந்த நல்ல ஆசைகளைச் சுமக்கிறான். ஓடி, ஓடி உழைக்கிறான். பிழையான வழிகளையும் அதற்காகப் பயன்படுத்துகிறான். இந்த வாழ்க்கைச் சந்தடியில் இறைவனை மறந்து விடுகிறான். அவனுக்கான கடமைகளையும் மறந்து விடுகிறான். ஆனால் இவர்கள் சின்ன மனிதர்கள். ஏழை மனிதர்கள். சாதாரண மனிதர்கள். இவர்களது இந்த எளிய ஆசைகளை நிறைவு செய்யும் வகையில் சமூகத்தை ஒழுங்கு படுத்துவது எம் எல்லோரதும் கடமை. அவர்கள் தமது இயல்பான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூட தம்மை வருத்தி, இரவு, பகலாக உழைத்துக் கஷ்டப் படும் சமூக சூழல் இருக்கக் கூடாது.

இன்னொரு மனிதன் அவனது ஆசைகள் கட்டுக்கடங்காதவை. ஊரையே அடித்து தன் வீட்டுப் பானையில் போட்டுக் கொள்ள முனைபவன் அவன். வீடும், பங்களாவும், காரும், வேனும், டிவியும், லெப்டொப்பும், கேஸ் அடுப்பும், மைக்ரோ அவனுமாக வாழ்பவன் அவன். போதவில்லை, போதவில்லை என உலக ஆசைகளின் பின்னே திரிபவன்.

இவர்கள் எல்லோருக்கும் இறை தூதர் (ஸல்) சொல்கிறார்கள்:

மரணத்தை அதிகம் நினைவு கூறுங்கள் அப்போது உங்கள் மன உலக ஆசைகள் கட்டுப்பாட்டிற்கு வரும். அளவு மீறிய ஆசைகள் உடைந்து போகும்.

மரணம் உங்களை விரட்டுகிறது. நீங்கள் ஓடுகிறீர்கள். ஆனால் ஒருபோதும் உங்களால் வெல்ல முடியாது. நீங்கள் பிடிபட்டுப் போவீர்கள்.

உலகத்தில் சிறப்போடு, பெருமையோடு வாழ்ந்து விட்டுச் செல்ல வேண்டும். மன இச்சைகளுக்கு ஆட்பட்டு, அடியுண்டு, பிறருக்கு முன்னால் தலை சொறிந்து நின்று நோயுற்று அழிந்து போகக் கூடாது. மறுமையில் கண்ணியத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இறை தூதர் (ஸல்) கூறுகிறார்கள்:

“புத்திசாலியாக வாழ்!
திடசங்கற்பத்தோடு எடுத்த காரியத்தை சாதிக்கும் உறுதியோடு வாழ்!
அதற்கு வழி:
மரணத்தை அதிகம் அதிகம் நினைவு கூறு!
அதற்குத் தயாராவதையே முதன்மைப்பட்ட வேலைத்திட்டமாகக் கொள்!”

இறுதியாக இறை தூதர் (ஸல்) சொல்லும் இதனையொட்டிய இன்னொரு கருத்தைச் சொல்லி நிறைவு செய்வோம்:

அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: இறை தூதர் (ஸல்) சொல்வதை நான் கேட்டேன்: முதியவனின் உள்ளம் இரு விடயங்களில் இளமையாகவே இருக்கிறது. ‘‘உலக ஆசை, தொடர்ந்து நீண்டு செல்லும் எதிர்பார்ப்பு” (ஸஹீஹ் அல் புகாரி – கிதாப் அல்-ரிகாக் ஹதீஸ் இலக்கம் – 6420)

நன்மைகள் செய்ய வாழ்வில் எதிர்பார்ப்பு வைப்பது பிழையல்ல. ஆனால் இன்னும் காலமிருக்கிறது என நன்மைகள் செய்வதைப் பிற்போடுவது, உலக வாழ்வு பற்றிய எண்ணம் தவிர வேறெதுவுமற்று உலகத்தில் நீண்ட காலம் வாழ வேண்டும் என எதிர் பார்ப்பது வெறும் உலகப் பற்று தவிர வேறெதுவுமில்லை.

முதுமை நோக்கிச் செல்லச் செல்ல உலகப் பற்று இளமையாக இருந்துவிடக் கூடாது. உலகை மேலும், மேலும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் உலகில் நீண்ட காலம் வாழ்வோம் என்ற எதிர் பார்ப்பும் எம்மை மயக்கிவிடக் கூடாது.

எப்போதும் செயல்களில் அடுத்த உலக விடயங்களைக் கவனத்திற் கொண்டு வாழ வேண்டும். இந்த உலகைத் துறக்க முடியாது. ஆனால் இவ்வுலகு எம்மை ஆட் கொண்டு விடவும் கூடாது.

தம்பியின் மரணத்தை ஒட்டி எழுதிய சில கருத்துக்கள் இவை. இதனை வாசிப்போர் தம்பிக்காகப் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறேன்:

தனது 11 வயதிலேயே தந்தையை இழந்து அநாதையாகத் தன் சிறுபிராயத்தைக் கழித்து சரியாகப் பராமரிக்க யாருமின்றி, பசிக்கும் பட்டினிக்கும் ஆட்பட்டு, அல்லலுற்றுக் கஷ்டப் பட்டு வாழ்ந்து எப்போதும் அன்பான உள்ளத்தைச் சுமந்து நின்ற அந்த ஆன்மா அமைதி அடையுமாக.

யா அல்லாஹ் அவரை மன்னித்து ஏற்றுக் கொள்வாயாக!

Reply