உஸ்தாத் ஷெய்க் முபாரக் – பன்முகப்பட்ட பணிகள்

மரணம் எப்போதும் வலியையும் வேதனையையும் தரும். மரணித்தவர்கள் உறவினர்களாகவோ நெருக்கமானவர்களாகவோ இருந்து விட்டால் அந்த வேதனையும் வலியும் மனிதனின் மனதில் பாரமாக இறங்கும். அந்த வகையில் ஷெய்க் உஸ்தாத் முபாரக் அவர்களது மரணச் செய்தி வேதனையைத் தந்தது. அவரது ஜனாஸாவில் கூட கலந்து கொள்ள முடியாத நிலை அந்த வேதனையை மேலும் அதிகரித்தது.

எமது சமூகம் படிப்படியாக பல அறிவுத் தலைமைகளை இழந்து வருகிறது. ஆரம்பத்தில் மஸ்ஊத் ஆலிம், மௌலவி ரூஹுல் ஹக், மௌலவி ரியாள் போன்றவர்களை சமூகம் இழந்தது. அண்மையில் கலாநிதி சுக்ரியையும் இந்த வரிசையில் இழந்தது. இத் தலைமைகளின் இடைவெளிகள் சரியாக நிரப்பப் பட்டனவா என்பது கவனமாக சிந்திக்கப்பட வேண்டியதொரு கேள்வியாகும்.

மனிதர்களில் அதிகமானவர்கள் தமது குடும்பத்தை சுமந்து வாழ்வதோடு இவ்வுலகைவிட்டு மறைந்து விடுகிறார்கள். குடும்பத்தை உரிய முறையில் கட்டியெழுப்பி சமூகத்திற்கும் பாரமின்றி இறை வழிகாட்டல்களுக்கு ஏற்ப வாழ்ந்து மறைந்தால் அல்லாஹ்விடம் கூலி பெற்றுத் தரும் செயற்பாடாகவே அது அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மனிதர்களில் சிலர் தமக்காக மட்டும் வாழாது தாம் வாழும் சமூகத்தைச் சுமக்க முயல்கிறார்கள். நாட்டைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்பு செய்கிறார்கள். இத்தகையவர்களை வரலாறு மறப்பதில்லை. மனிதர்களும் அவர்களைத் தொடர்ந்து நினைவு கூறுகிறார்கள். அவர்கள் தமது வாழ்வையே சகதா செய்கிறார்கள். அது அவர்களுக்கு சதகா ஜாரியாவாகவே அமைந்து விடுகிறது. இந்தகையவர்களில் ஒருவரே ஷெய்க் மௌலவி முபாரக் அவர்களாவர்.

இப்போது நாம் இழந்துவிட்ட ஷெய்க் முபாரக் என்ற ஆளுமையிடம் வருவோம். அவரைப் புரிந்து கொள்ள முயல்வோம். மௌலவி முபாரக் அவர்கள் எனது ஆசிரியர். தப்ஸீர், உலூமுல் குர்ஆன் என்ற பாடங்களை நளீமிய்யாவில் அவரிடம் நான் கற்றேன். அந்தப் பின்னணியிலும் அவர் பற்றிய இன்னும் பல தகவல்களின் பின்னணியிலும் இச் சிறிய கட்டுரையை அவரது ஞாபகார்த்தமாகவும் ஒரு மாணவன் செய்ய வேண்டிய நன்றிக் கடன் என்ற வகையிலும், பலருக்கு அவரது வாழ்வு முன்னுதாரணமாக இருக்கலாம் என்ற வகையிலும் எழுதுகிறேன்.

ஷெய்க் முபாரக் 1949ல் பிறந்து 2020வரை 71வருட காலம் இவ்வுலகில் வாழ்ந்தார். அவர் மல்வானயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவரது தந்தை ஓர் ஆலிம். தாயும், தந்தையும் அரபு மொழியிலேயே கையெழுத்திடுவார்கள். இந்த வகையில் குடும்பம் ஒரு மார்க்கச் சூழலைக் கொண்டிருந்தது என்பது தெளிவாகிறது. அத்தோடு மல்வானை ஆன்மீகப் பின்னணி கொண்ட ஊர் என்ற வகையிலும் உஸ்தாத் முபாரக் அவர்களது வாழ்வில் அதற்கொரு தாக்கமிருந்திருக்க முடியும் என நம்ப முடிகிறது. மௌலவி முபாரக் அவர்களது சிறுபராயம் பற்றி எனக்குத் தெரியவில்லை. ஆயினும் சூழல் மனிதனில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கம் விளைவிக்கக் கூடியது என்ற வகையிலேயே இதனைக் குறிப்பிட்டேன்.

உஸ்தாத் முபாரக் அறிவு ஆளுமையாக

உஸ்தாத் முபாரக் அவர்களது சிந்தனைப் பின்புலம் நான்கு வகையில் அமைந்தது எனக் கருத முடிகிறது.

1) மஹரகமை கபூரிய்யா மத்ரஸாவில் அவர்கள் கற்றார்கள். 1963ல் அந்த மத்ரஸாவில் இணைந்து 1970 வரை கற்கிறார்கள். கபூரிய்யா மாணவர்களது அறிவு நிலையை விசாலப் படுத்தும் போக்கைக் கொண்டிருந்த மத்ரஸா என்பது பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட உண்மையாகும். இந்த வகையில் ஷெய்க் முபாரக் அவர்கள் விசாலப் பார்வை கொண்டவராகப் பட்டம் பெற்று வெளியாகினார்கள் என்பதோடு இப்போக்கு அவரிடம் நீடித்து நிலைத்தது என்பதே உண்மையாகும்.

2) 1978ம் ஆண்டு மதீனா பல்கலைக் கழகத்திற்குச் சென்று கற்கிறார்கள். அங்கு கலைமானிப் பட்டத்தோடு வெளியாகினார்கள். அப்பல்கலைக் கழகம் அவரில் ஒரு நல்ல தாக்கத்தை விளைவித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இஸ்லாமியப் பார்வையில் பிரச்சினைகளை அணுகுதல், அது சார்ந்த ஆய்வு முறைமைகள் பற்றிதொரு திறனை அவரிடத்தில் பல்கலைக் கழகம் வளர்த்திருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. அல்லாமா இப்னு பாஸ் போன்ற அறிஞர்களோடு உறவாடியதன் ஊடாகவும் இந்தத் திறன்களை அவர் வளர்த்துக் கொண்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

3) ஷெய்க் விரிந்த வாசிப்பைக் கொண்டவர் என்பது நான் அவதானித்த ஒரு விடயம். நூல்களை வாசிப்பதில் அவர் இன்பமே காண்பார். எல்லாவகை நூல்களையும் அவர் வாசிப்பார். தான் சார்ந்திருக்கும் சிந்தனை முறைமையின் உள்ளே மட்டுமே அல்லாது ஏனைய ஆய்வு முறைமைகளைக் கொண்ட நூல்களையும் அவர் வாசிப்பார். தமிழில் வரும் நூல்கள், சஞ்சிகைகளையும் அவர் வாசிப்பார். அவரது வீட்டில் உள்ள வாசிகசாலையைப் பார்த்தால் கூட இதனை நன்கு புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு விரிந்த வாசிப்பின் மூலம் தனது அறிவை அவர் விசாலப் படுத்திக் கொண்டார். தன்னை விட வித்தியாசமாகச் சிந்திப்பவர்களையும் அவர் புரிந்து கொண்டார்.

4) அறிவு என்பது பாடசாலை, பல்கலைக் கழகங்கள், புத்தகங்கள் ஊடாக மட்டும் பெறப்படுவது மட்டுமல்ல. சூழலும் ஒரு மனிதனை அறிவுரீதியாக வளர்க்கிறது. சூழல் என்பதன் பொருள் குறிப்பிட்ட நபர் பழகும் அறிஞர்கள், மாணவர்கள், நண்பர்கள், பொதுமக்கள், சமூகப் பொது ஓட்டம் என்ற எல்லாவற்றையும் குறிக்கிறது.

இந்த வகையில் ஷெய்க் முபாரக் அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது சமூக உறவாடல் கீழ்வரும் பகுதிகளைக் கொண்டிருந்தது.

1) மத்ரஸாவிலிருந்து வெளியாகிய ஷெய்க் அவர்கள் பண்டாரவளைப் பள்ளியில் பிரதம கதீபாக அமர்கிறார். அது அவரை மக்களோடு பழகும் நிலையை ஏற்படுத்தி அவர்களது பிரச்சினைகளையும் போக்குகளையும் புரியும் நிலையை அவருக்குக் கொடுத்திருக்கும்.

2) 1971 முதல் 1973 வரை அவர் ஆசிரியராகவும் பணி புரிகிறார். மினுவாங்கொடை கல்லொழுவ முஸ்லிம் வித்தியாலயம் மற்றும் திஹாரிய தாருஸ் ஸலாம் முஸ்லிம் வித்தியாலயம் என்பவற்றில் அவர் கற்பிக்கிறார். இது இன்னொரு வித்தியாசமான சூழல். மத்ரஸாவை விட்டு வித்தியாசமான ஆசிரியர்களோடு பழகும் சந்தர்ப்பமும் பாடசாலை நிகழ்ச்சிகளில் ஈடுபடும் வாய்ப்பும் இப்போது அவருக்குக் கிட்டுகிறது.

3) இலங்கைத் தேசிய கல்வி நிறுவனத்தின் (NIE) இஸ்லாம், அறபு புத்தக வெளியீட்டின் ஆலோசகராகவும் அவர் பணி புகிறார். இந்நிலையில் அவர் அரச நிறுவனமொன்றில் பணி புரிய வேண்டிய நிலைக்கும் அங்கு பலரோடு கலந்துரையாட வேண்டிய நிலைக்கும் உட்பட வேண்டி இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

4) நழீமிய்யாவில் ஏறத்தாழ இரண்டரை வருடங்களாக விரிவுரையாளராக அவர் பணியாற்றியுள்ளார். அங்கு கலாநிதி சுக்ரி, ஷெய்க் ஷஹீதுல்லாஹ் கவ்ஸர் போன்றவர்களோடு நெருக்கமாகப் பழகினார். மாணவர்களோடும் உறவாடினார். இதுவும் அவரது அறிவு வாழ்வில் சந்தேகமின்றி ஒரு தாக்கத்தை விளைவித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு மனிதனின் பாடசாலை, பல்கலைக்கழக, புத்தக அறிவு என்பது இவ்வாறு சமூக உறவாடல்களால் செம்மைப் படுத்தப்படுகிறது. அந்த மனிதனும் பட்டைத் தீட்டப்படுகிறான். அனைத்து மனிதர்களது வாழ்விலும் இது தவிர்க்கப்பட முடியாத உண்மையாகும்.
எமது உஸ்தாத் ஷெய்க் முபாரக் அவர்கள் அடுத்த சிந்தனை முறைமைகளோடு சுமூகமாக உறவாடவும், மிகவும் கவனமாகவுவம், நிதானமாகவும் தனது சிந்தனைகளையும், கருத்துக்களையும் முன்வைக்கவும் இப்பின்னணியே காரணமாக அமைந்தது என நினைக்கிறேன்.

இந்த அறிவுப் பின்னணியோடும் ஆழ்ந்த பக்குவத்தோடும் அவர் பல நிறுவனங்களோடு இயங்கினார். சோனக இஸ்லாமியக் கலாச்சார நிலையத்தில் அவர் அங்கத்தவராக இருந்தார். ஷரீஆ வங்கிகளில் ஆலோசகராக இருந்தார். மல்வானை இப்னு பாஜ் பெண்கள் அரபுக் கல்லூரியின் பிரதிப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

ஷெய்க் முபாரக் அவர்களது அறிவுப் பங்களிப்பு

ஷெய்க் முபாரக் அவர்களது அறிவுலகிற்கு நாம் வந்தால், அதனை மூன்று வகையாக நோக்கலாம்.

1) அவரது நூல்கள்: ஏழுக்கும் அதிகமான நூல்களை அவர் எழுதியுள்ளார்.
ஹஜ்ஜும் அதன் விதிமுறைகளும், ஜனாஸாவும் அதன் சட்டங்களும்,
இத்தாவும் அதன் விதிமுறைகளும், பள்ளிவாசல்களின் சட்டதிட்டங்கள்,
காதியானியிஸம், துஆ ஒழுங்குகளும் அதன் விதிமுறைகளும்
வெளிவராத இன்னொரு நூல், “ஸரண்திப் கண்ட சான்றோர்கள்” என்பதாகும். இதனை அவர் அரபு மொழியில் எழுதியுள்ளார். தமிழிலும் இதனைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்தன என நினைக்கிறேன்.

2) உரைகள்: இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் 1980 முதல் 1994 வரை இஸ்லாமிய சட்டவரையறைகள், ஹஜ் விளக்கம் போன்ற தலைப்புகளை நடாத்தினார். கொழும்பு கோட்டை, வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி போன்ற இடங்களில் தொடராக குத்பாக்கள் நிகழ்த்தினார். உண்மையில் ஷெய்க் முபாரக் போன்ற ஆளுமைகள் அறிவு, ஆய்வுப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாதவர்கள். அவர்களது வேலைப்பளு அவ்வாறானதாகும். சமூகத்தைத் தாங்கி நிற்கும் இத்தகையவர்கள் பல்வேறு பணிகளில் மூழ்கி இருந்தவாறுதான் இப்படியான அறிவுப் பணிகளையும் செய்ய வேண்டியுள்ளது.

இங்கு நான் அவரது அறிவுப் பணியைத் தொகுத்துத் தந்தேனே தவிர அதனை ஆராயச் செல்லவில்லை. உண்மையில் அவரது புத்தகங்கள், உரைகள் என்பவற்றைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி ஆராயும் வேலையை ஓர் இளம் ஆய்வாளர் செய்ய வேண்டும்.

இங்கு ஓர் அபிப்பிராயத்தை முன்வைப்பது பொருத்தமென நினைக்கிறேன். இலங்கை முஸ்லிம்களின் மார்க்க, சிவில், அறிவு ஆளுமைகளின் அறிவுப் பங்களிப்பு பற்றியும் சமூக சீர்திருத்தப் பங்களிப்பு பற்றியும் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்படல் மிகவும் அவசியமானது. அப்போதுதான் சிறுபான்மை சமூக ஒழுங்கின் அறிவு, சீர்திருத்த ஓட்டம் தெளிவாகும். அடுத்து வரும் பரம்பரைகளும் அதனைப் பின்பற்றி வளர்த்துச் செல்வது சாத்தியமாகும். அவ்வாறில்லாத போதுதான் இஸ்லாமிய உலகின் சிந்தனையாளர்களோடும் அவர்களது சீர்திருத்தப் பணிகளைக் கற்பதோடும் மட்டும் நிற்கும் நிலை தோன்றுகிறது. அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்த சந்தர்ப்பம் உள்ளது.

சமூகப் பணி

மேலே விளக்கிய பல அவரது சமூகப் பணியாகவே அமைந்திருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவரது சமூகப் பணிகளில் அடிப்படையானவை கீழ்வரும் மூன்று பணிகள் எனக் கருத முடிகிறது.

1) மஹரகம கபூரிய்யாவை ஏறத்தாழ 32 வருடங்களாக கொண்டு நடத்தியமை. சவால்கள் மிகுந்த காலப் பிரிவிலும் கூட அதனை அவர் மிகவும் கவனமாக நடாத்திச் சென்றார். பல நூற்றுக்கணக்கான ஆலிம்களை உருவாக்குவதன் ஊடாக சமூகத்திற்கு ஒரு பெரும் பங்களிப்பை அவர் செய்தார்.

2) அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாவைக் கொண்டு செல்வதில் பெரும் பங்களிப்பு செய்தமை. இந்தவகையில், 1991 முதல் 2003 வரை தலைவராகவும் 2003 இலிருந்து இறுதிவரை அதன் பொதுச் செயலாளராகவும் அவர் கடமையாற்றினார். அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவுக்கு முஸ்லிம் சமூகத்தை வழிநடாத்தியதில் ஒரு நீண்ட வரலாறுண்டு. அந்த வரலாற்றுத் தொடரில் ஷெய்க் உஸ்தாத் முபாரக் அவர்கள் ஒரு காத்திரமான பங்களிப்பை செய்தார் என்பது அனைவரும் சுட்டிக்காட்டும் ஓர் உண்மையாகும்.

3) சீர்திருத்தப் பணி: முஸ்லிம் சமூகத்தின் உள்ளே இருந்த தவறுகள், குறைகள், பிளவுகள் என்பவற்றைக் களைந்து சீராக்குவதில் ஷெய்க் முபாரக் அவர்கள் நீண்டதொரு உழைப்பை மேற் கொண்டார்கள். உரைகள், கலந்துரையாடல்கள், நிறுவனங்களுக்கிடையிலான கருத்துப் பரிமாறல்கள், ஊர்களின் பள்ளிவாயில் நிர்வாக சபைகள் உடனான கலந்துரையாடல்கள் என்பவற்றினூடாக இதனை அவர் செய்தார்.

இந்த வகையில், ஷெய்க் உஸ்தாத் முபாரக் அவர்கள்,
ஓர் அறிவு ஆளுமை, ஒரு சீர்திருத்த ஆளுமை, ஒரு தலைமைத்துவ ஆளுமை என்ற பாத்திரங்களை ஏற்று இந்த சமூகத்தை வழிநடாத்துவதில் பெரியதொரு பங்களிப்பை செய்தார்.

என்னைப் பொறுத்தவரையில் உஸ்தாத் முபாரக் அவர்களிடம் மூன்று விடயங்களை அவதானித்தேன்.

1) மாற்றுக் கருத்துக் கொண்டோர்களையும் மதித்து ஏற்று உரையாடும் உயர்ந்த பண்பு அவரிடமிருந்தது. இதனை மாற்றுக் கருத்துக் கொண்டோருடனான அவரது உறவுகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் என்னோடு அவர் நெருங்கிய உறவு கொண்டிருந்தார். எனது தப்ஸீர் பற்றிய அழகியதொரு உறையாற்றினார். எனது நூல்களை வாசித்துக் கருத்துக்கள் சொன்னார்.

2) எளிமையான வாழ்வும், ஆழ்ந்த ஆன்மீகப் பண்பும் அவரோடு நெருங்கி உறவாடிய எல்லோரும் அவரிடம் அவதானித்ததாகும்.

3) ஆழ்ந்த தியாகமும், அர்ப்பணித்த வாழ்வும்: அவர் தனக்காக வாழவில்லை, சமூகம், அதன் பிரச்சினைகள் என்றே வாழ்ந்தார். அவரது நேரமும் காலமும் அதற்காகவே செலவாகியது.

அல்லாஹ் அன்னாரின் பணிகளை ஏற்று அங்கீகரிப்பானாக. அவருக்கு உயர்ந்த சுவர்க்க வாழ்வைக் கொடுப்பானாக என எல்லோரும் சேர்ந்து பிரார்த்திப்போம். வாழ்வில் பெரிதாக எதனையும் அனுபவிக்காத அந்த உயர்ந்த மனிதர் நோயுடன் போராடிக் கொண்டே இறை அருளைச் சேர்ந்தார். கருணை மிக்க இறைவன் அவருக்கு உயரிய அந்தஸ்தை வழங்குவானாக.

Reply