அல்குர்ஆன் – ஒரு பொதுப் பார்வை

அல்குர்ஆன் அடிப்படையில் ஒரு ஆன்மீக நூல், ஓர் ஒழுக்க நூல். தன்னை பின்பற்றுவோரின் செயற்பாடுகள் ஆன்மீக அடிப்படை கொண்டதாக இருக்க வேண்டும் என்றே அது வேண்டுகிறது.

அல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் இரண்டாவது வசனம் கீழ்வருமாறு கூறுகிறது:
“அந்த வேத நூல் அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அது இறை பிரக்ஞை கொண்டோருக்கு வழிகாட்டியாகும்.”

இறை பிரக்ஞை – தக்வா என்ற இச் சொல்லை ஏறத்தாழ 36 முறைகள் இந்த அத்தியாயம் பிரயோகிக்கிறது. ஹஜ், நோன்பு என்ற வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல்கள், குடும்ப ரீதியான வழிகாட்டல்கள், தற்காப்புக்கான யுத்தம் பற்றிய விளக்கங்கள் போன்ற வாழ்வின் பல்வேறு பகுதிகள் பற்றி இந்த அத்தியாயம் விளக்குகிறது. அந்த இடங்களில் எல்லாம் இறை பிரக்ஞை – தக்வா என்ற சொல்லைத் தவறாது இந்த அத்தியாயம் பிரயோகிக்கிறது. அதாவது இந்த சட்டங்கள், வழிகாட்டல்கள் இறைவனுக்காக என்ற இறை பிரக்ஞையோடு நிறைவேற்றப்பட வேண்டும் என்று இப் பிரயோகங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இன்னொரு வகையில் சொன்னால் சட்டங்களாக அக் குறிப்பிட்ட வழிகாட்டல்களை நோக்காது ஆன்மீகப் பின்னணி கொண்ட ஒழுக்கங்களாக அவற்றை நோக்க வேண்டும் என்பதைத்தான் அல்குர்ஆன் இங்கே அவதானப் படுத்துகிறது.

இப் பின்னணியில் தான் இந்த அத்தியாயத்திலும் இன்னும் பல இடங்களிலும் அல்குர்ஆன் நபிமார்களின் பணி பற்றிக் கூறும் போது மூன்று பணிகளைக் கூறுகிறது.

1) இறை வசனங்களை ஓதி கருத்துகளை முன்வைத்தல்.

2) ஆன்மீக ரீதியாகத் தூய்மைப்படுத்தல்.

3) அல்குர்ஆனையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்தல்.
(பார்க்க அல்குர்ஆன் 2:151)

இவ்வாறுதான் ஒரு தூதர் தூய்மைப்படுத்தல் கற்பித்தல் ஊடாகத் தனது வழிகாட்டல்கள் நடைமுறையாக வேண்டும் என எதிர்பார்க்கிறார். இந்த வகையில் வெற்றி என்பது ஆன்மாவின் தூய்மைப்படுத்தல் ஊடாகவே சாத்தியமாகும் எனவும் அல் குர்ஆன் உறுதிப் படுத்துகிறது.

உள்ளத்தைத் தூய்மைப்படுத்தியவன் வெற்றியடைந்தான். அதனைத் தீமைகளில் அமிழ்த்தி விட்டவன் தோல்வியடைந்தான்.
(அல்குர்ஆன் 91:9,10)

அல்குர்ஆனில் மிகப் பல இடங்களில் வலியுறுத்தப்படும் கருத்து இதுவாகும்.

அல்குர்ஆன் இப் பின்னணியைக் கொண்டதற்குக் காரணம் அதன் மையக் கருத்து இறைவனின் படைப்புத் திட்டத்தை விளக்குவதாக அமைந்திருப்பதாகும்.

பிரபஞ்ச ஓட்டம், மனிதன் படைக்கப்பட்ட ஒழுங்கு, மனித வாழ்வின் இலக்கு என்ற இந்த விஷயங்களை விளக்குவதை மையப் படுத்தியதாகவே அல்குர்ஆன் அமைந்துள்ளது. இந்த வகையில் இறைவன், இறைத்தூது, மறுமை நாள் என்ற தலைப்புகளையே திருப்பித் திருப்பி அல்குர்ஆன் விளக்கும். இறைவன் பற்றிய பேசாத அத்தியாயமே அல்குர்ஆனில் கிடையாது. மறுமை நாள் பற்றிச் சொல்லாத அத்தியாயங்கள் அல்குர்ஆனில் மிக அருமை. மனிதர்களின் உள்ளங்களில் இந்த உண்மைகள் ஆழப் பதிய வேண்டும் என்பதுவே இப் போக்கிற்கான காரணமாகும். இப் பின்னணியிலேயே மறுமையில் வெற்றி பெறுவதை இலட்சியமாகக் கொண்டே மனிதன் இவ்வுலகில் வாழ வேண்டும். அதற்கான வழிமுறை ஆழ்ந்த இறை தொடர்பும் உயர்ந்த ஒழுக்க வாழ்வுமாகும் என்ற கருத்தையே அல்குர்ஆன் திருப்பித் திருப்பி விளக்குகிறது. அதேவேளை அல் குர்ஆனின் பார்வையில் ஒழுக்கம் என்பது முழு வாழ்வையும் தழுவியதாகும் என்பது இங்கு புரியப் பட வேண்டும்.

உண்மை இவ்வாறிருந்த போதிலும் அல்குர்ஆன் என்பது ஒரு வன்முறை சார்ந்த நூல். அதனை பின்பற்றுவோர் வன்முறையாளர்கள். அவர்கள் இவ்வுலகைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வர முயல்கிறார்கள். அதிகாரத்தைப் பிரயோகித்து அடுத்த மனிதர்களைத் தமது மார்க்கத்தினுள் அவர்கள் இழுக்கிறார்கள் என்றிவ்வாறு சிலர் எழுதவும் பேசவும் முற்படுகிறார்கள். அல்குர்ஆனைக் கவனமாக, முழுமையாகப் படிக்காததன் விளைவே இதுவாகும். அல் குர்ஆனின் சில வசனங்களையோ அல்லது சில அத்தியாயங்களையோ படித்து விட்டுத்தான் சிலர் இக்கருத்துக்களைக் கூறுகிறார்கள்.

அல்குர்ஆனை ஓரளவு முழுமையாக, ஓரளவு ஆழமாகக் கற்றவர்கள் ஏற்கனவே நாம் விளக்கிய முடிவுக்கே வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இங்கே அதனை விரிவாக விளக்குவது சாத்தியப் படாது என்பதால் கீழே அல்குர்ஆனின் அமைப்பு பற்றி ஒரு விளக்கத்தைத் தருகிறேன்.

அல்குர்ஆனின் இரு பகுதிகள்: மக்கா அத்தியாயங்கள், மதீனா அத்தியாயங்கள்.

மக்கா அத்தியாயங்கள்: நம்பிக்கை, ஒழுக்கங்கள் என்பவற்றை விளக்குவதாக அமைந்துள்ளன.

மதீனா அத்தியாயங்கள்: சட்டதிட்டங்கள், யுத்தங்கள் போன்றவற்றை விளக்கும்.

90க்கும் அதிகமான அத்தியாயங்கள் மக்காவைச் சேர்ந்தவை. 20 அல்லது அதற்கு சற்று அதிகமான அத்தியாயங்களே மதீனாவில் இறங்கியவையாகும். எனவே சட்டதிட்டங்கள் பற்றிப் பேசிய அத்தியாயங்கள் அல்குர்ஆனில் 6% வீதத்திற்கும் குறைவானதுவே உள்ளன என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

யுத்தம் பற்றி விளக்கிய அத்தியாயங்கள்:
அத்தியாயம் – 08
அத்தியாயம் – 09
அத்தியாயம் – 47
அத்தியாயம் – 59
அத்தியாயம் – 61

இந்த அத்தியாயங்களில் அதிகமான வசனங்கள் யுத்தங்கள் பற்றிப் பேசுகின்றன. ஆனால் அல்குர்ஆனின் அவை ஐந்து அத்தியாயங்கள் மட்டுமேயாகும்.

இவைதவிர அத்தியாயம் 2, அத்தியாயம் 3, அத்தியாயம் 33 என்பவையும் யுத்தங்கள் பற்றி விளக்கி உள்ளன. அவை கொஞ்சம் வசனங்களாகவே உள்ளன. இவ்வாறு யுத்தங்கள் பற்றிப் பேசும் அத்தியாயங்கள் அல்குர்ஆனின் மிகச் சிறியதொரு பகுதி.

அல்குர்ஆனில் பெரும்பகுதி யுத்தத்தோடு சம்பந்தப்பட்டவையல்ல. ஏற்கனவே விளக்கிய பகுதியோடு அது தொடர்பு பட்டதாகும். எனவே அல்குர்ஆன் மனித வாழ்வின் உண்மைகள், ஆன்மீக, ஒழுக்க நெறி நூலேயன்றி அது வன்முறையின், யுத்தங்களின் நூலன்று என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

Reply