முஸ்லிம் அரசியல் களம் – சில அவதானங்கள்

புதியதொரு பாரளுமன்றத்தை நாம் தெரியப் போகிறோம். இந்நாட்டுப் பிரஜைகள் நாம். முஸ்லிம் சிறுபான்மையினர். நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் எமக்குள்ளன. அத்தோடு நாம் எம்மை பலப்படுத்திக் கொள்வது அக் கடமையை ஆற்ற எம்மைத் தகுதியுள்ளவர்களாக ஆக்கும். பலவீன சமூகம் அடுத்த சமூகங்களுக்காக உழைப்பது எப்படிப் போனாலும் தன்னைக் காத்துக் கொள்வதே அதற்குப் பெரும் சிரமமாகும். அரசியல் பலம் எம்மைப் பலப்படுத்துவதற்கான முக்கிய சாதனங்களில் ஒன்று .
இந்நிலையில் எமது அரசியல் தலைமைகளிடமிருந்தும், கட்சிகளிடமிருந்தும் நாம் எதிர்பார்ப்பது என்ன?

1.இன உணர்வு கூர்மையடையாமல் தமது நடத்தைகள், பேச்சுக்களை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் உள்ளவர்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
இன உணர்வு திட்டமிட்டு மிகக் கவனமாக வளர்க்கப்பட்டு வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

அது மிக மெதுவாக வளர்ந்தாலும் வளர்ந்து வருகிறது என்ற உண்மையை எப்போதும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
எனவே ஓரளவு நீண்ட எதிர்காலத்தில் எமது பௌதீக, மானசீக வாழ்வுக்கானவை அச்சுறுத்தல் தோன்ற இடமுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
இச்சூழலில் எமது தலைமைகளிடம் இந் நிலையிலிருந்து சமூகத்தைக் காக்கும் திட்டம் அல்லது திறனுள்ளதா?
இங்கு எதிர்காலத்தில் இரு விடயங்கள் மீள் பரிசீலனைக்குட்படுத்த வேண்டும்:

அ) தனிக்கட்சி அரசியல்
ஆ) முஸ்லிம்களை மட்டுமே எமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும் என்ற சமூக மனநிலை.

இம் முறை கண்டி போன்ற பிரதேசங்களில் சகோதர சமூகத்தில் உள்ள ஒருவரைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தைப் நன்கு பயன்படுத்துவதன் மூலம் இதனை ஆரம்பித்து வைக்க முடியும்.

தேசிய பங்களிப்பு, அரசியல் மைய நீரோட்டத்தில் கலத்தல் என்ற அதிமுக்கிய அம்சம் குறித்த எமது திட்டம், பொறி முறை என்ன? என்பது தலைமைகளிடமிருந்து எதிர்பார்க்கப்படும் இன்னொரு அம்சம்.

2. முஸ்லிம் சமூகத்தின் மானசீக இருப்பு – மார்க்கம், கலாச்சாரம், தனித்துவம் என்பவற்றைக் காப்பது என்றால் என்ன? அதற்கான திட்டமும், வழி முறையும் எமது அரசியல் தலைமைகளிடம் காணப்படல் முதன்மையான அம்சங்களில் ஒன்று.

3. எமது பௌதீக இருப்பைப் பலப்படுத்தல்: இது இரு கருத்துக்களைக் கொடுக்கும்

அ) கல்வி, பொருளாதார ரீதியாகப் பலம் பெறல்.
ஆ) முஸ்லிம் கிராமங்களின் கீழ்க் கட்டமைப்பைப் பலப்படுத்தல்.

இறுதியாகச் சொன்ன முஸ்லிம் சமூகத்தோடு நேரடியாகச் சம்பந்தப்படும் விவகாரங்களை கையாள்வது முதற்சொன்ன பகுதியோடு முரண்பட்டுச் செல்லாது அவதானமாக இருப்பதுவும் அவசியமாகும்.

இத்தகைய போக்கு கொண்ட ஒப்பீட்டு ரீதியாக சிறந்த தலைவர்களை நாம் தெரிவு செய்வோமாக.

முஸ்லிம் அரசியற் களத்தில் இரு புதிய அம்சங்களை இம்முறை காண்கிறோம்.

ஒரு புதிய அரசியல் பிரவேசம் : NFGG என்ற புதிய கட்சி பாராளுமன்றத் தேர்தலில் இறங்கும் முடிவுக்கு வந்தமை. அந்தவகையில் முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்துள்ளமை.

இக்கட்சியில் இஸ்லாமிய சிந்தனைப் பின்னணி கொண்டோரும் இணைந்துள்ளனர்.

இந்தப் பிரவேசம் முஸ்லிம்களுக்கு ஒரு புதிய அரசியல் தலைமையை உருவாக்குமா என்பது காலம் சொல்ல வேண்டிய பதில். எனினும் அதனைச் சாத்தியப்படுத்த அவர்கள் கையாள வேண்டிய முறைகள் பற்றிய சில ஆலோசனைகளை முன்வைப்பது அவசியம் எனக் கருதுகிறோம்.

01) பாராளுமன்ற அங்கத்துவம் கிடைத்த போதும் அமைச்சுப் பதவிகள் எதனையும் ஏற்காதிருத்தல்.

உடனேயே வேகமாக அரசியலில் முன்னேறுவது அபாயகரமானது. நான் எங்கே காலடி வைக்கிறேன் என்பதை அவதானித்து மிகவும் நிதானமாகவும், அவதானமாகவும், மெதுவாகவும் செல்வது மிக அவசியம்.

இந்நிலையில் வேலைப் பழு குறைவாக இருப்பதால் மக்களோடு அதிகமதிகம் தொடர்பு வைக்கவும், தொடர்ந்தும் களத்திலிருக்கவும் பெரியளவு உதவும்.

02) இஸ்லாமிய அரசியல் என்ற கருத்தில் இஸ்லாமிய வார்த்தைப் பிரயோகங்கள், கதையாடல்களைத் தவிர்த்தல். இன்னொரு வகையில் சொன்னால் இஸ்லாத்தை அரசியல் களத்திற்கு இழுக்காதிருத்தல்.
இது பல விடயங்களுக்காக மிக அவசியமானது.

அ) சிறுபான்மை சமூகமொன்றில் இது பிழையான மனப் பாதிப்புகளை அடுத்த சமூகங்களில் ஏற்படுத்தும். சிங்கள, தமிழ் தீவிரவாதத்திற்கு அது துணை புரியும்.

ஆ) அடுத்த கட்சிகளின் முஸ்லிம் அரசியல் வாதிகளும் இஸ்லாம் பேசத் தூண்டப் படுவார்கள், அது பெரும் பாலும் தப்பும், தவறுமாக அமையும்.

இ) அரசியல் பற்றிய வரைவிலக்கணம் சொன்ன இஸ்லாமிய சட்ட அறிஞர்களும் கூட“மக்களை தீமைகள், சீர்கேடுகளை விட்டு அப்புறப்படுத்தி நலன்களை சாதித்துக் கொடுத்தல்” என்றே சொன்னார்கள்.

சிறுபான்மை முஸ்லிம் அரசியலில் முழுமையாகப் காணப்படுவது நன்மைகளைச் சாதித்தலேயாகும். அதுவே சிறுபான்மை அரசியல் தத்துவத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.

இப்பின்னணியில் அதற்கான வேலைத்திட்டங்களையும் தயாரிப்பதுவும், அவற்றை சாதிப்பதுவுமே முழுமையாகக் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயமாகும்.

இந்தக் கருத்தோட்டத்தின் இன்னொரு அம்சமே இஸ்லாமிய இயக்கங்களோடு தொடர்பு வைக்காதிருத்தலும், அவ்வியக்கங்கள் களமிறங்காமல் இருத்தலுமாகும். இது இரு சாராரையும் பாதுகாப்பதற்கு மிக முக்கியமாக உதவும்.

இஸ்லாமிய உலகிலேயே தஃவாவையும், அரசியலையும் கலக்கக் கூடாது என்ற கருத்து வலுப்பெற்று நடைமுறையாகி வரும் சூழல் இது சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரையில் இது மிக முக்கியமானது.

03) முஸ்லிம் சமூகம் வரலாறு நெடுகிலும் இணக்க அரசியல் போக்கையே கடைப்பிடித்து வந்தது. காங்கிரஸின் முன்னால் தலைவர் மர்ஹும் பிணக்க அரசியலாக அதனை மாற்ற முயன்றார். ஆனால் அது முழுமையடையவில்லை.

தமிழ் சமூகத்தினர் இணக்க அரசியலில் துவங்கினார்கள். தமிழ்த் தலைவர் செல்வ நாயகம் அதனை பிணக்க அரசியலாக மாற்றி ஆனால் சாத்வீகப் போராட்டமாகக் கொண்டு சென்றார். பிறகு அது ஆயுத போரட்ட அரசியலாக மாறியது.

சகோதர சமூகமொன்றின் இந்த அனுபவமும் எம் முன்னே உள்ளது. இப்போது நாம் எவ்வாறு செல்லப் போகிறோம் என்ற தத்துவார்த்தப் பின்னணியொன்று எம்மிடம் இருக்க வேண்டும். அதனை NFGG உருவாக்கி கொள்ளல் அவர்களுக்கு முன்னே உள்ள பெரும் பொறுப்பாகும்.

04) அரசியல் மைய நீரோட்டத்தில் கலத்தல் என்ற கருத்தோட்டத்தை சாதிப்பது எவ்வாறு என்பது மிகவும் ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய ஓர் அம்சமாகும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்திருத்தலை ஒரு சந்தர்ப்பமாகப் பயன் படுத்திக் கொள்ளலாமா? அதற்கான பொறிமுறை என்ன? என்பது இப்பின்னணியில் ஆலோசிக்கப் படவேண்டிய விடயமாகும்.

05) இறுதியாக அரசியல் கட்சி என்பதை விட அரசியல் நிறுவனமாக இயங்கல் என்ற நிலை பற்றி NFGG அதிகமதிகம் சிந்திக்க வேண்டும். இரண்டிற்குமிடையிலான வேறுபாடு தெளிவு என்பதால் விவரமாக விளக்கத் தேவையில்லை என நம்புகிறேன்.

முஸ்லிம் அரசியல் களத்தில் இரண்டாவது முக்கிய அம்சம் இம்முறை முஸ்லிம்களில் குறிப்பிடத்தக்களவு தொகையினர் JVP க்கு ஆதரவாக இயங்கத் துவங்கியுள்ளனர். இதற்கான காரணமென்ன என்பதை ஆராய்வதை விட இதனை எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது முக்கியம் எனக் கருதுகிறேன்.

1. முஸ்லிம்கள் அரசியல் மைய நீரோட்டத்தில் கலப்பதற்கான ஒரு முக்கிய வாயில் இதுவாகும். JVP இல் இணைந்தமை வெறும் உணர்ச்சி பூர்வ நிலையாலும், நம்பிக்கையீனத்தாலும் உருவான முடிவாக இல்லாமல் JVP இல் நுழைந்தவர்கள் இவ்விடயத்தைக் கவனத்தில் கொள்வது அதனை வளர்க்க முயல்வது மிக முக்கியமாகும்.
2. முஸ்லிம்கள் தேசிய நலனில் அக்கறை கொண்டவர்கள் வெறுமனே சந்தர்ப்பவாத அரசியலை மட்டுமே கொண்டு செல்பவர்களல்ல என்ற கருத்தைப் பரவலாகவும் முஸ்லிம்கள் பற்றிய பிழையான மனப்பதிவை நீக்கவும் இது உதவ முடியும்.

இன உணர்வு கூர்மையடைவதிலிருந்து பாதுகாக்கவும் இத்தகையதொரு அரசியல் பிரவேசம் பெரியளவு உதவும்.,

ஆனால் இங்கு முக்கியமானது என்னவென்றால் அக்கட்சியின் வினைத்திறன்மிக்க உழைப்பாளர்களாக அங்கு நுழையும் முஸ்லிம் தலைமைகள் இருக்க வேண்டும். இந்த நாட்டின் தேசியக் கட்சிகளை உருவாக்குதல், வளர்த்தலில் முஸ்லிம் தலைமகைளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பங்குண்டு என்பது வரலாறு. இக்கட்சியைப் பொறுத்தவரையிலும் அப்பங்கை வகிக்கும் திறன் அங்கு நுழையும் முஸ்லிம் தலைமைகளுக்கு இருக்க வேண்டும்.

இவ்வாறு எழுதுவது கண்டு முஸ்லிம் வாக்கைச் சிதறச் செய்வதற்கு இது காரணமாக அமையும் என சிலர் கூறலாம். ஒரு மாற்றத்தை உருவாக்க ஆரம்பத்தில் சில நஷ்டங்களைச் சகித்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை நாம் இங்கு கவனத்திற்கு கொள்ள வேண்டும். எந்த நஷ்டமுமின்றி ஒரு மாற்றத்தை நாம் உருவாக்க முடியாது.

அடுத்த முக்கிய அம்சம் நாம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவர்களின் தொகையையல்ல, தரத்தையே எப்போதும் கவனத்திற்கு கொள்ள வேண்டும்.

முஸ்லிம் வாக்காளர்கள் எப்போதும் வாக்களித்தல் என்பது ஒரு அமானிதம், ஒரு சாட்சி பகர்தல் என்பதைக் கவனத்திற் கொள்வார்களாக.
அமானிதத்தைப் பாதுகாத்தல் ஒரு முஸ்லிமின் அடிப்படைப் பண்பு. பொய்ச் சாட்சியம் ஒரு பயங்கரப் பாவம்.

Reply