சிறுபான்மைக்கு ரமழான் கொண்டு வரும் வெற்றி – II

இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தல் என்பது நம்பிக்கை, வணக்க வழிபாடுகள், உணவுப் பொருட்களில் ஹராம், ஹலால் என்பதோடு நிற்பதில்லை. குடும்பம், பொருளாதாரம், கல்வி, அரசியல், இலக்கியம் என அது விரிந்து செல்கிறது. இந்நிலையிலேயே முஸ்லிம் ஒரு சிந்தனைச் சவாலுக்கு முகம் கொடுக்க வேண்டியவனாகிறான்.

அதுவே இஸ்லாத்தை நவீன கால யதார்த்தத்திற்கு இறக்குவது எவ்வாறு என்பதுவும், சொந்த சமூக யதார்த்தத்திற்கு இறக்குவது எவ்வாறு என்பதுவுமாகும்.

இங்கேதான் எமது எல்லாச் சிக்கல்களும் உள்ளன. இந்த பின்னணியிலிருந்து சிந்திக்க வேண்டுமானால் ஏற்பட்டு விட்டிருக்கும் மிகப் பாரிய மாற்றத்தை மிகச் சரியாக அடையாளம் காண வேண்டும்.

இரண்டாவது இஸ்லாத்தை ஆழமாக ஆழ்ந்தறிய வேண்டும். எமது புத்திஜீவிகள் ஏற்பட்டுவிட்ட மிகப் பாரிய சமூக மாற்றத்தை ஓரளவு அடையாளம் கண்டுள்ளனர்.

அரசியலில் தனிமனித அதிகாரம் இல்லாமல் போய் சமூகம் அதிகாரத்தைக் கையிலெடுக்கும் நிலை தோன்றியுள்ளது.

கொள்கைகளையும், கோட்பாடுகளையும் சந்தைப் படுத்த சிறுகதை, கதை, கவிதை போன்ற இலக்கிய உத்திகள் கையாளப் படுகின்றன. சினிமாப் படங்களாகவும் அவை வளர்ந்துள்ளன.

பொருளாதாரப் பகுதியில் வங்கி, காப்புறுதி போன்ற பெரும் நிதி நிறுவனங்கள் தோன்றியுள்ளன. இவ்வாறான பாரிய மாற்றங்களைப் பொறுத்த வரையில் இஸ்லாத்தின் நிலைப்பாடென்ன? இவ்வாறு ஏற்பட்டு விட்ட பெரும் மாற்றங்களினுள்ளே இஸ்லாமிய வாழ்வை முன் வைப்பது எவ்வாறு என்ற இந்தக் கேள்விகளே அடிப்படைக் கேள்விகளாகும்.

எமது நாட்டைப் பொறுத்தவரையில் நாமே சிந்திக்க வேண்டும். பிற சூழல்களிலிருந்து எழுதப்பட்ட ஆக்கங்கள் எமக்கு ஓரளவே இப்பகுதியில் பயன்பட முடியும்.

எமது வாழ்வுக்கான வழிகாட்டலை நாம் ஆராய்ந்து பெற வேண்டியதுவே சரியான முறையாகும். இதனை சாதிப்பது எவ்வாறு என்ற வினாவுக்கான விடை அது பல படிமுறைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பதுதான்.

அல் குர்ஆனை விரிந்து பரப்புதல் அதன் முதலாவது கட்டம். எமது சமூக யதார்த்தத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளும் வேலைத் திட்டத்தோடு அல் குர்ஆன் புத்தி ஜீவிகளது கைகளில் முன்வைக்கப்பட வேண்டும். சாதாரண அறிவு மட்டத்தைச் சேர்ந்தோரது கரங்களிலும் அல் குர்ஆன் சரியாகப் போய்ச் சேர வேண்டும்.

சமூக மட்டங்களில் நடக்க வேண்டிய கலந்துரையாடல்கள் அடுத்த கட்டமாகும். அல் குர்ஆனின் பின்னணியிலிருந்து அதன் நடைமுறைப் பிரயோகம் குறித்து இந்தக் கருத்துப் பரிமாறல்கள், கலந்துரையாடல்கள் இடம் பெற வேண்டும்.

மோதல்கள், பிடிவாத உணர்வுகள், வெறித்தன்மைகள் அற்ற இத்தகைய ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் எம்மை பல தீர்வுகளை நோக்கி வழி நடாத்தும்.

இது “உலமாக்கள்” எனப்படும் பாரம்பரிய இஸ்லாமிய அறிவைப் படித்தவர்களுக்கு மத்தியிலான கலந்துரையாடல் அன்று.

அந்த “உலமாக்கள்” பேச மக்கள் உட்கார்ந்து கேட்டிருப்பது அல்ல. இது சமூக யதார்த்தத்தைப் புரிந்ததோடு இஸ்லாத்தையும் ஆழமாகப் புரிந்து கொண்ட அறிவு ஜீவிகள் உலமாக்களோடு சம அந்தஸ்த்தில் நின்று நடாத்தும் கருத்துப் பரிமாறல்களாகும்.

கொள்கைகளையும், கோட்பாடுகளையும் புரிந்து கொள்வதுவும், பொதுவான போக்கில் அதனை எத்திவைப்பதுவும் இலகு. அதனையே இதுவரை நாம் செய்து வந்துள்ளோம்.

ஆனால் நாடுகள், சமூகங்கள், நிலைமைகளுக்கேற்ப குறிப்பாக வரையறுத்து இஸ்லாத்தை நடைமுறைப் படுத்துவது எவ்வாறு என்பதுவே உண்மையான பிரச்சினையாகும்.

“அவர்களோடு (பெண்களோடு அதாவது மனைவியர்களோடு) சிறந்த முறையில் உறவாடுங்கள்” என்பது அல் குர்ஆன் முன்வைக்கும் ஒரு கட்டளை. ஆண், பெண் உறவு பற்றிய ஒரு கோட்பாடு.

இதன் நடைமுறைப் பிரயோகம் பற்றிய ஒரு விளக்கமே “ஆண், பெண் வேறுபாடுகள்” என்ற ஸலாஹ் ராஷித் என்ற மனோ தத்துவவியல் அறிஞர் எழுதிய நூல்.

ஸகாத் வறுமை ஒழிப்பதற்கான ஒரு கோட்பாடு. அதன் நடைமுறை பிரயோகம் என்பது நவீன சமூகங்களைப் பொறுத்தவரையில் ஆழ்ந்து ஆராயப் படவேண்டிய ஒன்றாகும்.

இத்தகைய விரிந்த அறிவு பூர்வக் கலந்துரையாடலுக்கான அடித்தளமிடலே சிறுபான்மைக்கு ரமழான் கொண்டுவரும் வெற்றி என்றோம்.

Reply