சிறுபான்மைக்கு ரமழான் கொண்டு வரும் வெற்றி

மதங்களுக்குப் பொதுவாக வரும் ஆபத்துத்தான் காலப் போக்கில் அதன் போதனைகள் சடங்கு. சம்பிரதாயங்களாக மாறிப் போவதுவும், வெளித் தோற்றத்தில் மக்கள் கொள்கின்ற அளவு மீறிய பற்றுமாகும். முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் இது உண்மையே. தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற உயர்ந்த பயிற்சித் திட்டங்கள் அதன் உண்மை அர்த்தத்தை இழந்து வெறும் சடங்காகவும், சம்பிரதாயமாகவும் மாறிப் போயுள்ளமை அவதானிக்கத் தக்கதாகும். தக்பீர் கட்டும் அமைப்பு முதல் ஸுஜூத் செய்யும் தோற்றம் வரை மக்கள் ஈடுபாடு காட்டும் வேகத்தை இங்கு அவதானிக்க முடியும். கஃபாவை கட்டி முகர்வதுவும், ஹஜர் அல்அஸ்வத் கல்லை முத்தமிடுவதில் காட்டும் தீவிரமும், இதற்கு மேலும் சில உதாரணங்களாகும். உடல் ரீதியாக நோன்பை முறிக்கும் காரியங்களை அறிந்து கொள்வதில் எவ்வளவு நுணுக்கமாக எமது மக்கள் உள்ளனர்?!

தொழுகை, ஹஜ், நோன்பு என்ற இந்த வணக்கங்களின் பொருளென்ன? அவை எவ்வாறு ஒரு தனி மனிதனையும், சமூகத்தையும் பயிற்றுவிக்கும் செயற்திட்டங்ககளாக உள்ளன என்பது பற்றிய ஆய்வுகளும், கலந்துரையாடல்களும் எமது சமூகத்தில் எவ்வளவு குறைவாக உள்ளன?! தொப்பியும், தாடியும், ஜுப்பாவும், பெண்களின் கருப்பு பர்தாவும் வகிக்கும் இடத்தைக் கூட அவை பெறவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விடயம்!

தொழுபவர்கள் தொப்பி போட்டுத் தொழட்டும் என்பதற்காக எவ்வளவு கரிசனையோடு பல பள்ளிகளில் தொப்பிகளை வைத்துள்ளோம். தாடி வைக்காதவர் தாடி வைத்துத் தொழட்டும் என்பதற்காக செயற்கை தாடிகளைக் கூட பள்ளியில் வைத்திருப்போம். ஆனால் அது ஒரு கோமாளித்தனமாகவும், கேலிக் கூத்தாகவும் மாறி விடுமே என்ற பயத்தால்தான் அதனை விட்டு விட்டோம்.

மார்க்கத்தைக் கடைப்பிடிப்பதன் இலக்கு.
தாடி வைப்பதுதானா?!
சமூகமே! உன் அறியாமையைக் கண்டு
சமூகங்களே நகைக்கின்றன!
என்ற ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலியின் கவிதைதான் இவ்விடத்தில் நினைவில் தோன்றுகிறது.

இந்த நோய் ஒரு புறமிருக்க இன்னொரு புறத்தால் இன்னொரு இதனை விடவும் அபாயகரமான நோய் முஸ்லிம் சமூகத்தைப் பீடித்ததுள்ளது. அந்நோயை விட்டு இன்னமும் முஸ்லிம் சமூகம் விடுபடவில்லை.

அதுவே மனிதர்களைப் புனிதப் படுத்துவதாகும். இஸ்லாத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும், புனிதமானவை என்பதற்காக அக்கோட்பாடுகளை விளக்கி, நடைமுறைப் படுத்தும் அறிவுத் தலைமைகளும் புனிதப்பட்டும் போனமை இன்னொரு அபாயாமான நோயாகியது.

ஸஹாபாக்கள் தவறு செய்யாத புனிதர்களாயினர். ஹதீஸ், சட்டத்துறை அறிஞர்கள் புனிதம் பெற்றனர். இப்பின்னணியில் முஸ்லிம்கள் தமது அறிவுக்கு எண்ணற்ற விலங்குகள் இட்டனர்.

அவர்களது வரலாறு இஸ்லாமிய பாதையில் முன்னோக்கி ஓடவில்லை. இறுதியில் அது தடம் புரள வேண்டிய நிலைக்குட்பட்டது.

ஸஹாபாக்கள் தவறுகள் செய்யமாட்டார்கள். இந்நிலையில் ஸிப்பீன், ஜமல் போன்ற ஸஹாபாக்களுக்கு மத்தியில் நடந்த யுத்தங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆயிஷா (ரழி)வும் சரி, அலி (ரழி)வும் சரி, முஆவியாவின் பக்கமும் சரி, அலி (ரழி)வும் சரி. இந்நிலையில் மன்னராட்சி முறைமையை ஏதோ ஒரு வகையில் சரி காண வேண்டி ஏற்பட்டது.

இன்னொரு பக்கத்தால் சட்ட இமாம்கள் நால்வரும் காலம் கடந்து சிந்திப்பவர்களாயினர். நவீன காலப் பிரச்சினைக்கும் அவர்களது தீர்ப்புக்களைத் தேடும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. அல்லது அவர்களது ஆய்வு முறைமையைப் பின்பற்ற வேண்டும் அதில் எந்த மாற்றமும் கொண்டு வரக் கூடாது என்ற கருத்து பேசப் படுகிறது. இந்தக் கருத்தின் வீச்சு எவ்வளவு தூரம் செல்கிறது எனினும் முஸ்லிம் சமூகத்தின் உலமாக்கள் என்ற ஒரு பிரிவினர் புனிதர்களாயினர். அவர்களது வார்த்தைக்கு மறு வார்த்தை கிடையாது என்ற கருத்தும் மக்களுக்கு மத்தியில் பரவலாக உள்ளது.

முதல் நோயால் மார்க்கத்தின் உயிரோட்டம் செத்துப் போனது.இரண்டாவது நோயால் நவீன கால சாவல்களுக்கு ஈடு கொடுத்து வளரும் வளத்தை இஸ்லாம் இழந்தது.

இவ்வாறு முஸ்லிம்களைப் பீடித்திப்பது உண்மையில் சிந்தனை சிக்கலே. இந்தச் சிக்கலை விட்டு மீளாதவரை முஸ்லிம் சமூகத்திற்கு விடிவு கிடையாது.

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று அதிகாரமோ, பலமோ அற்ற , அத்தோடு மிகவும் வித்தியாசமான சூழலில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தல் என்ற கருத்தை மிகவும் சரியாக விளங்கல்.

இரண்டாவது அடுத்த சமூகங்களுக்கு தூதை எத்திவைக்க மிகத் தகுதி வாய்ந்த சமூகமாகிய சிறுபான்மை சமூகம் அதனை எவ்வாறு சாதிப்பது என்பதாகும்.

இவ்விரு பிரச்சினைகளையும் அல் குர்ஆன், அல் ஹதீஸ் தவிர்ந்த வேறெந்த விலங்குகளும் இடாது சிந்திக்கும், ஆராயும் போக்கு உருவாக வேண்டும்.

நில, சமூக யதார்த்தைப் புரிந்த அறிவுப் புலமையும் வேண்டும். இவ்வாறு சிந்திக்கும் அறிவுத் தலைமைகள் தோன்றுமா? ரமழான் சிறுபான்மைக்குத் தரும் என எதிர்பார்க்கும் வெற்றி இதுதான்.

அந்த வெற்றிக்கான அடையாளங்களாவது தெரிகிறதா? அதற்கான அடித்தளத்தையாவது இந்த ரமழானில் இடலாமா?!

Reply