ரமழான் கொண்டு வரும் மாற்றம்.

ரமழான் நோன்பின் மாதம். வெற்றிகளின் மாதம். வரலாறு அப்படித்தான் சொல்கிறது. “மலக்குகளும், ஜிப்ரீலும் இறை அனுமதியோடு அனைத்து வகைக் கட்டளைகளோடும் அவ்விரவில் இறங்குகிறார்கள்.” என அல்குர்ஆன் லைலதுல் கத்ர் இரவு பற்றிச் சொல்லும் போது அந்த உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது.

இந்த வகையில் இந்த நோன்பு வெற்றிகளைக் கொண்டு வருமா? இஸ்லாமிய உலகமே ஒரு குழப்ப நிலையில் உள்ள இந்த வரலாற்றுக் கட்டத்தில் ஒரு பாரிய மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கலாமா?

எமனின் கலக நிலை ஒரு முடிவிற்கு வந்து விடலாம் என்பதற்கான அடையாளங்கள் தெரிகின்றன. சிரியாவின் பஷ்ஷார் அரசும் கடுமையாக ஆட்டம் காண்கிறது. இந் நிலையில் சிரியாவின் மாபெரும் மனித அவலம் நீங்கி அந்த மக்கள் அமைதி வாழ்வுக்குத் திரும்பலாம் என்ற நிலை உள்ளது. ஷீயா பிராந்திய ஆதிக்கம் சாத்தியமில்லை எனக் கண்டு ஈரான் நிதான நிலைக்குத் திரும்பலாம் என எதிர்பார்க்க முடியும் போல் உள்ளது.

எகிப்தின் ஜனாதிபதி ஸீஸியும் தனது இரும்பு பிடியை தளர்த்த வேண்டிய நிர்பந்தத்திற்குட்படுகிறார். பிரதான போராட்ட இயக்கமான அல் இஹ்வான் உள்ளேயும் மாற்றங்கள் தோன்றும் நிலை உள்ளது. சவுதி அரேபியாவின் புதிய அரசு வித்தியாசமான நிலைபாடுகளை எடுக்கின்றது. இந்த வகையில் இந்த நோன்பு காலம் ஒரு மாற்றத்தை உருவாக்கலாம் எனப் பெரிதும் எதிர்பார்க்க முடிகிறது.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த ரமழான் மாதம் ஏதும் மாற்றங்களைக் கொண்டு வருமா? நாம்எம்மைவிடச் சனத் தொகையில், அறிவு நிலையில், பொருளாதார பலத்தில் கூடிய தமிழ், பௌத்தம், கிறிஸ்தவம் என்ற மூன்று சமூகங்களால் சூழல் பட்டு வாழ்கிறோம். எமது பிராந்தியமான தென் கிழக்காசியாவும் எமக்குச் சாதகமாக பல சமநிலையில் இல்லை. அரபு, இஸ்லாமிய உலகின் சூழ்நிலையால் அங்கேயும் பெரிய எதிர்பார்ப்புகளை நாம் வைக்க முடியாது.

எம்மைப் பற்றி நாமே சிந்திக்க வேண்டும்.

எமது பலத்தில் மட்டுமே நாம் பிரதானமாகத் தங்கி இருக்க வேண்டும் . அது எமது வாழ்வொழுங்கை மீள் பரிசீலனை செய்வதில், திட்டமிட்ட இயக்கத்தில் பிரதானமாகத் தங்கியுள்ளது.

இந்த வகையில் இஸ்லாமியப் புத்தி ஜீவிகள் ஒரு குழுவின் தோற்றமும், இயக்கமுமே இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தோன்ற வேண்டிய அடிப்படை மாற்றமாகும்.

புத்திஜீவி என்பவன் ஆதாரபூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் விடயங்களை நோக்கத் தெரிந்தவன். ஆய்வு அடிப்படையில், தர்க்க பூர்வமாக பிரச்சினைகளை பார்க்கப் புரிந்தவன்.
அவன் எதனையும் கண்மூடிப் பின்பற்றுபவனல்லன்.
அவன் சம்பிரதாயங்களதும், பாரம்பரியங்களதும் அடிமையல்ல.
மக்கள் அபிப்பிராயம் என்ற மக்கள் மனோ இச்சைகளுக்கு தனது கருத்துக்களை அடகு வைப்பவனுமல்ல.
தாடி, தொப்பி, ஜுப்பா,
கருப்பு நிற குறிப்பிட்ட தோற்றம் கொண்ட ஹிஜாப்,
இருந்து கொண்டு குடித்தல், சாப்பிடல்,
குறிப்பிட்ட தோற்றத்தில் பள்ளி கட்டல்,
வீட்டில் அடைந்திருப்பதுவே பெண்களுக்கான அடிப்படை என்ற கட்டுப்பாடு,
இவையும், இவை போன்ற இன்னும் பல வெளித் தோற்றக் கட்டுப்பாடுகள் மீது எந்தளவு பற்றும், சில வேளை வெறித்தனமும் கொண்டியங்குகிறோம்? அவை இஸ்லாத்தின் அடிப்படை என்பது போல் நடந்து கொள்கிறோம்.

இவை மட்டுமா,
அல் குர்ஆன் மனன மத்ரஸாக்கள்,
நூற்றுக்கணக்கான படிப்பித்தலில் மனனமிடலை பிரதான உத்தியாகக் கொண்டியங்கும் மத்ரஸாக்கள்
அந்த மத்ரஸாக்களின் இயங்கு தோற்றம்,
என்ற இவை அனைத்தையும் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

ஆனால் இந்தப் புத்திஜீவி இஸ்லாமியக் கலைகளில் உள்ளே ஆழக் கால் பதித்தவனாகவும் இருக்க வேண்டும்.
குறிப்பிட்டதொரு இஸ்லாமிய அறிஞனை மையப் படுத்தும் சிந்தனை முகாமல்ல.
இஸ்லாமிய அறிவு, சிந்தனை உள்ளே அகல, விரித்து கால் பதிப்பவனே வேண்டப்படும் புத்திஜீவி.

அப்படி ஒரு மாற்றம் பற்றி இந்த ரமழானில் சிந்திப்போம். இந்த ரமழான் அப்படி ஒரு மாற்றத்தைக் கொண்டு வருமாக எனப் பிரார்த்திப்போம்.

Reply