மனித முயற்சிகளுக்கான பொதுக் கொள்கைகள்.

 

இறை தூதா் (ஸல் ) அவா்கள் வாழ்வின் எல்லா பகுதிகளுக்கும் வழிகாட்டுகிறார்கள். எப்பகுதியில் மனிதன் உழைத்தாலும் அப்பகுதிக்கான போதனைகளையும், சட்டதிட்டங்களையும் இறை தூதர்(ஸல்) வழங்குகிறார்கள். கீழே குறிப்பிடப்படுபவை இறைதூர் (ஸல்) அவர்கள் தரும் பொதுக் கொள்கைகளாகும். எப்பகுதியில் ஒரு முஸ்லிம் உழைத்தாலும் இக்கொள்கைகளைப் பின்பற்றுமாறு அவன் வேண்டப்படுகிறான்.

  •  “செயல்கள் எண்ணங்களை பொருத்ததாகும் . ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதுவே கிடைக்கிறது.” (ஸஹிஹ் – புஹாரி, முஸ்லிம்)

செயல்கள் வணக்க வழிபாடுகள், பணக்கொடுக்கல் வாங்கல்கள், ஆய்வு முயற்சிகள், கற்பித்தல், பயிற்றுவித்தல் போன்ற அனைத்தையும் கொண்டாதாகும்.

எண்ணத்தின் மூலமே சாதாரண செயல்கள் வணக்கமாகின்றன. எண்ணம் என்பது இங்கே உறுதியான எண்ணத்தை, தூய எண்ணத்தை -இஹ்லாஸை- குறிக்கிறது.

செயலும், எண்ணமும் இணைந்திருக்க வேண்டும். எண்ணத்தை பின்பற்றியே செயல் செல்கிறது என ஹதீஸ் விளக்கிறது. இந்நிலையிலேயே செயல் அங்கீகாரம் பெறுகிறது.

இப்படித்தான் ஒரு முஸ்லிம் தன் வாழ்வுப் பயணத்தை ஆரம்பிக்கிறான்.

  • “நீங்கள் அனைவரும் பொறுப்புதார்கள் தனது பொறுப்பு பற்றி அனைவரும் விசாரிக்கபடுவீர்கள்” (ஸஹிஹ் – புஹாரி, முஸ்லிம் )

வாழ்க்கைப் பயணத்தில் ஏதோ ஒரு பொறுப்பில் முஸ்லிம் இருப்பான். அப் பொறுப்பை சரியாக ஏற்று நடத்தும் திறன் அவனிடம் இருக்க வேண்டும்.

  •  ”நான்கு விடயங்கள் பற்றி விசாரிக்கும் வரை அடியான் மறுமை நாளில் தன் இரு கால்களையும் அகற்ற முடியாது.
    • ஆயுளை எவ்வாறு கழித்தான்,
    • உடலை எக்காரியங்களில் ஈடுபடுத்தினான்,
    • தனக்கு கிடைத்த கல்வியை எவ்வாறு செயற்படுத்தினான்,
    • செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான், எங்கே செலவிட்டான்.”
      (ஸுனன் – தீர்மிதி)

ஆயுள், உடல், அறிவு, செல்வம் போன்ற நான்கும் விசாரிக்கப்படவிருக்கும் அமானிதங்களாகும். இந்த அடிப்படைப் பொறுப்பு பற்றிய உணர்வு முஸ்லிமுக்கு இருக்க வேண்டும்.

  •  ”இரண்டு அருள்கள், பெரும்பாலான மனிதர்கள் அவையிரண்டிலும் நஷ்டவளர்களாவே உள்ளனர்: உடல் சுகம், ஓய்வு நேரம்”. (ஸஹிஹ் – புஹாரி)

உடல் சுகம், ஓய்வு நேரம் மிக அருமையான இரு அருள்கள். மனிதன் உழைக்க தன்னை தயார்படுத்திக்கொள்ள கிடைக்கும் நல்ல சந்தர்ப்பங்கள்.

எத்துறை சார்ந்து நின்று ஒரு முஸ்லிம் உழைத்த போதும் இந்த அடிப்படை உணர்வுகளைக் கவனத்திற் கொண்டால், அவனது உழைப்பு சிறக்கும். அவன் வெற்றி பெறுவான். உலகில் மட்டுமன்றி, மறுமையிலும் அவன் நிறைந்த கூலியைப் பெறுவான்.

Reply