சிறுபான்மை வாழ்வுக்கான கொள்கை உருவாக்கம்.

 

“பல்லின மக்கள் வாழும் நாட்டில் அல்லது பிரதேசத்தில் மோதல்களிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்பதும் அதற்கு இடமளிக்காத சமூக – அரசியல் சூழலை உருவாக்குவது எவ்வாறு என்பதுமே முக்கியமாக அறியப்பட வேண்டிய வாழ்க்கை கலையாகும்.”

“இலங்கையில் இனக் கலவரங்களும், முஸ்லிம்களும்” என்ற நூலின் ஆசிரியர்களில் ஒருவரான கலாநிதி அனஸ் அந் நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடும் கருத்து இது.

இனக் கலவரம் ஒரு சமூகத்தின் பாரிய அழிவுக்கும், பின்தங்களுக்கும் காரணமாகிறது. அதனால் மிகவும் பாதிப்புறுபவர்கள் சிறுபான்மையினரே. இலங்கை மிக அதிகமாக இனக் கலவரங்களைக் கண்ட நாடு. பௌத்தர்களும் முஸ்லிம்களோடு மோதினார்கள் தமிழர்களும் மோதினார்கள். இந்தவகையில் இரண்டு சமூகங்களுக்கும் மத்தியில் மிகுந்த கவனமாக வாழ வேண்டிய நிலை முஸ்லிம்களுக்கு உள்ளது.

சிறுபான்மையாக வாழும்போது இனக் கலவரங்களைத் தவிர்த்துக் கொள்வது எவ்வாறு என்பதுவே இத்தகைய நாடுகளில் முஸ்லிம்கள் பயில வேண்டிய அடிப்படைக் கலையாகும்.

அக் கலை என்ன என்பது பற்றிய சில விடயங்களைக் கீழே கருகிறோம்:

அந்நியப்படல்; அதாவது மைய நீரோட்டத்தோடு கலக்காது தனிமைப் பட்டு அடுத்த சமூகங்களை விட்டு அந்நியப்பட்டு நிற்றல் என்பதுவே இதன் பொருளாகும். மூடுண்ட சமூக நிலைக்கு வரல் என்பது இதன் விளைவாகும்.

தனித்துவம் காத்தலின் தீவிர நிலையே இதற்கான காரணமாகும். எல்லா வகையிலும் நாம் தனித்துவமானவர்கள் என வாதித்து, அத்தனித்துவ அடையாளங்கள் இவையே என நிறுவி அவற்றை முழுமையாகப் பின்பற்ற முயலலே இதுவாகும்.

இனக் கலவரத்திற்கு வித்திடும் முதலடி இதுவேயாகும். இஸ்லாமியக் கருத்தை சரியாக முன்வைக்க முடியாமல் போவதுவும் இதனாலாகும். இந்நிலையில் அடுத்த சமூகங்கள் எம்மை அந்நியமாகப் பார்க்கத் துவங்கும். ஒரு வகை சந்தேகத்தோடும், பயத்தோடும் நோக்கத் துவங்கும். சர்வதேச சூழலால் இஸ்லாமியத் தீவிரவாதம் இலங்கையினுள்ளேயும் நுழைகிறதுவோ என்ற எண்ணமும், கருத்தும் பெரும்பான்மை சமூகத்தினுள்ளே உருவாகத் துவங்கும்.

இப் பின்னணியில் முஸ்லிம்கள் கையாள வேண்டிய மிக முக்கிய செயற்பாடு தனித்துவம் காத்தலின் தீவிர நிலைக்குச் செல்லாதிருப்பதாகும். இமாம் இப்னு தைமியா தமது
اقتضاء الصراط المستقيم مخالفة أهل الجحيم
என்ற நூலில் இதுபற்றிக் கீழ்வருமாறு விளக்குகிறார்:

“தார் அல் குப்ரில் – முஸ்லிம் அல்லாத நாட்டில் – முஸ்லிம்கள் அந்நியர்களை வெளித் தோற்றத்தில் ஒத்துச் செல்லல் அனுமதிக்கப்பட்டதாகும். பாதுகாப்புக் காரணத்திற்காகவும், தஃவா நலன்களுக்காகவும் இவ்வாறு ஒத்துச் செல்லல் வாஜிப் ஆகவோ, ஸுன்னாவாகவோ, அனுமதிக்கப்பட்டதாகவோ அமைய முடியும்.”

இக் கருத்து முஸ்லிம் சிறுபான்மையின் ஆழ்ந்த கவனத்திற்குரியது. எமது வெளித்தோற்றத்தில் வாஜிப் அல்லாத பகுதியை விட்டுக் கொடுக்க முடியும். வாஜிபா, ஸுன்னாவா என்ற கருத்து வேறுபாடு நிலவும் பகுதியில் மிகப் பலவீன ஆதாரங்கள் கொண்டதாக இல்லாவிட்டால் ஸுன்னா என்ற நிலைப் பாட்டுக்கு வர முடியும்.

பெண்கள் பகுதியில் இக் கருத்தை நாம் அவதானமாக நோக்க வேண்டும். முஸ்லிம் பெண்களின் உடையில் முகம் மூடுதலைத் தவிர்த்தல், கருப்பு நிறத்தைத் தவிர்த்தல் இப் பகுதியில் கடைப் பிடிக்க வேண்டிய முக்கிய அம்சமாகும். மிகப் பெரும்பாலான இமாம்கள் முகம், இரு மணிக்கட்டுக் கைகள் அவ்ரத் அல்ல என்ற கருத்தையே கொண்டுள்ளனர். பெண்கள் வைத்தியர்களாகவும், அதிபர்களாகவும், ஆசிரியர்களாகவும்,என பல அரச தொழில்களில் ஈடுபடல் இக் கருத்தை இன்னும் வலியுறுத்துகிறது. கருப்பு நிறம் என்பது வாஜிபோ, ஸுன்னாவோ அல்ல என்பது மிகத் தெளிவு.

பெண்களே ஆழ்ந்து வாசித்து இக் கருத்தைப் புரிந்து கொள்வார்களானால் மிகச் சிறந்தது. நாம் வாழும் சூழல் மிகவும் சிக்கலானது. பல்வேறு தீவிர நிலைகளுக்கு மத்தியில் நாம் வாழ்கிறோம். எம்மை நாம் ஒழுங்கு படுத்திக் கொள்ளாத போது இத்தகைய காரணங்களால் கல்வி நிறுவனங்கள், நிர்வாக அலுவலகங்கள், அரச ஸ்தாபனங்களில் எல்லாம் பல மோதல்களையும், சிக்கல்களையும் உருவாக்கி விடுவோம்.

இவ்வாறு அந்நியப் படலை எவ்வாறு தவிர்த்துக் கொள்வது, பொது நீரோட்டத்தில் எவ்வாறு கலப்பது என்பதற்கேற்ப இஸ்லாமிய சட்டப் பகுதியை மீளாய்வு செய்தலுமே “சிறுபான்மை சட்ட ஒழுங்கு” அல்லது சான்று பகர்தல் –ஷஹாதத்- வாழ்நிலை எனக் கூறுகிறோம். இமாம் இப்னு தைமியாவின் மேற்கூறிய கருத்து இதற்கான ஓர் உதாரணம் மட்டுமே ஆகும்.

இந்த சிந்தனை ஒழுங்கை வளர்ச்சியுறச் செய்வதுவும், வளர்ப்பதுமே இனக் கலவரங்களை விட்டுத் தவிர்ந்து கொள்வது எவ்வாறு என்ற கேள்விக்கான யதார்த்த பூர்வமான பதிலாகும்

Reply