பார்வையை மறைக்கும் திரை

பார்வையை மறைக்கும் திரை
-சட்டப் பகுதியில் பாதிப்பேற்படுத்தும் மறைமுகத் தாக்கங்கள்-

عبد الله بن رفود السفياني

عبد الله بن رفود السفياني

கலாநிதி அப்துல்லா இப்னு ரபூத் அல்-ஸுப்யானி என்ற சவூதிய ஆய்வாளர் எழுதிய நூல் இது. இஸ்லாமியப் பயிற்றுவித்தல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் இவர்.

இந்த நூல் இஸ்லாமிய சட்ட ஆய்வில் ஒரு வித்தியாசமான பக்கத்தை ஆய்கிறது. இஸ்லாமிய சட்ட அறிஞனின் ஆய்வுகளில் மறைமுக வித்தியாசமான பாதிப்புகள் இருக்க முடியுமா? இஸ்லாமிய சட்டம் என்பது அல் குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் மனித ஆய்வுக்கு எந்த இடமுமின்றி பெறப்பட்ட சட்டங்களை மட்டும் கொண்டதல்ல. மனிதனது ஆய்வுகளுக்கு அங்கே பாரிய இடமிருக்கிறது. சில பகுதிகளில் அந்த இடம் குறுகியதாகவும், சிறியதாகவும் உள்ளது. வேறு சில இடங்களில் அது விரிந்ததாகவும், பாரியதாகவும் உள்ளது.

حجاب الرؤية

حجاب الرؤية

ஆய்வில் மனிதன் நுழையும்போது கண்டிப்பாக அங்கே பல்வேறு தாக்கங்கள் காணப்படுவது இயல்பு. இந்தப் பின்னணியிலிருந்துதான் இந்த நூல் இஸ்லாமிய சட்டத்திலும் இந்த தாக்கமுள்ளதா எனப் பார்க்க முனைகிறது. சந்தேகமின்றி இஸ்லாமிய சட்டம் பற்றிய வித்தியாசமான வாசிப்பு இது. ஆனால் இந்த ஆய்வின் பலமான அடிப்படையை மறுக்க முடியாது.

இஸ்லாமிய சட்டம் என்பது முழுமையாகப் புனிதமானதல்ல. அல்குர்ஆனும், ஸுன்னாவும் நேரடியாக விளக்கிய பகுதியைத் தவிர மனித ஆய்வுக்கு உட்பட்டு உருவான சட்டங்களும் அங்கே உள்ளன. அப்பகுதியில் தவறுகளும், பிழைகளும் காணப் படுவது இயல்பு. எனவே அவற்றைப் புனிதப் படுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த நூல் மனித ஆய்வில் எத்தகைய மறைமுகப் பாதிப்புகள் ஏற்பட முடியும் என விளக்குகிறது. பார்வையை மறைக்கும் அந்தத் திரைகள் என்ன என விவரிக்கிறது.

மனோ இச்சைகளுக்கு உட்பட்டு இஸ்லாமிய சட்டங்களை சட்ட அறிஞர்கள் ஆக்கினார்கள் எனப் பொதுவாக இக்கருத்தை விளங்கிக் கொள்ளக் கூடாது. தூய்மையான மிக உயர்ந்த சட்ட அறிஞர்கள் தம்மால் முடிந்தளவு மன நிலைத் தாக்கங்களிலிருந்து விடுபட்டே சட்ட ஆய்வுகளை மேற் கொண்டனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மனிதன் என்ற உண்மையை மறந்து விடாதிருந்தால் அவன் மீது தாக்கம் செலுத்தும் காரணிகளையும் நாம் மறக்க மாட்டோம்.

இந்தவகையில் நான்கு வகை தாக்கங்களை -பார்வையை மறைக்கும் திரைகளை- இந்நூல் ஆராய்ந்து விளக்குகிறது.

• மன உலகம் என்ற திரை
• சூழல் என்ற திரை
• பழக்க வழக்கம் என்ற திரை
• சர்வாதிகாரம் என்ற திரை

இங்கு ஆசிரியர் வெளிப்படையாக மனோ இச்சைகளுக்கோ அல்லது வெளிக் காரணிகளுக்கோ உட்பட்டு சட்டங்களை குறிப்பிட்ட போக்கில் ஆக்கும் சட்ட அறிஞர்கள் பற்றி விளக்கவில்லை. அவ்வாறான போக்கு பாவகரமானது என்பதில் சந்தேகமில்லை. அவற்றை அடையாளம் காண்பதுவும் ஓரளவு இலகுவானது. ஆனால் மிகவும் மறைமுகமாகத் தாக்கம் விளைவிக்கும் காரணிகளையே இங்கு ஆசிரியர் ஆராய்கிறார்.

இந்த நூல் மனோ தத்துவவியல் ஆய்வொன்றையும் முன்வைக்கிறது. அப்பகுதியில் மன நிலைகள் பற்றி விளக்குகிறது. மனிதன் மீது மறைமுக ஆதிக்கம் செலுத்தும் ஆழ் மனம் பற்றி விளக்குகிறது.

அறிவுச் சூழல்,குடும்ப நிலை, சமூக சூழல் என்ற சூழல் தாக்கங்களை இந்த நூல் ஆராய்கிறது.

குறிப்பிட்டதொரு சமூகத்தின் சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் பாரம்பரியமாகத் தொடர்கின்றன. அவை மனித நடத்தை மீதும், அவனது பார்வை மீதும் தாக்கங்கள் விளைவிக்கின்றன.

அரசியல் சூழலில் சர்வாதிகாரம் மிக ஆழ்ந்த தாக்கத்தை மனிதன் மீது விளைவிக்கிறது. அப்போது மனிதன் ஒடுங்கிப் போகிறான். ஆக்க சக்தி அவனிடம் மடிந்து போகிறது.

இஸ்லாமிய உலகம் குறிப்பாக அரபுலகம் பல நூற்றாண்டு காலமாக சர்வாதிகாரத்தினுள்ளேயே வாழ்ந்தது. இந்த சர்வாதிகார அரசியல் சந்தேமின்றி அறிஞர்கள் மீது தாக்கத்தை விளைவித்தது. மிகச் சிறந்த தூய அறிஞர்கள் மீதும் இது தாக்கத்தை விளைவித்தது என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு பார்வையை மறைக்கும் திரைகளை விளக்கும் ஆசிரியர் எமது சட்டப் பகுதியில் காணப்படும் இந்த உண்மையை மிகவும் ஆழமாகக் காட்டுகிறார்.

எனவே, எமது பாரம்பரிய சட்ட ஆய்வுகளோடு கூட மிகவும் கவனமான உறவாடலே எமக்கிருக்க வேண்டும் எனவும் ஆசிரியர் உணர்த்துகிறார்.

இந்தவகையில் எமது அறிவுப் பாரம்பரியத்தை ஆராயும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு கோணத்தை இந்த நூல் விளக்குகிறது எனலாம்.

ஆசிரியர் தான் விளக்கும் கருத்துகளுக்கு உதாரணங்களையும் தந்துள்ளார். இமாம் இப்னு தைமியா, ஷாதிபி, தஹபி போன்ற பழைய அறிஞர்களின் மேற்கோள்களையும் தனது ஆய்வுக்கு ஆதாரமாகக் கொண்டு வருகிறார்.

Reply