நவீன இஸ்லாமிய சிந்தனையின் சில கட்டங்கள்

 

நவீன இஸ்லாமிய சிந்தனை ஜமாலுத்தீன் ஆப்கானி, முஹம்மத் அப்துஹு, ரஷீத் ரிளா,போன்றோரிலிருந்து துவங்கி இமாம் ஹஸனுல் பன்னா, மௌலானா மௌதூதி, ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி, ஸையித் குதுப் போன்றோரிடையே ஓடி வந்தது என்பது உண்மையே. ஆயினும் அது வேகமாக மக்களிடையே பரவி, ஓர் இஸ்லாமிய எழுச்சியாக மாறி, சர்வதேச ரீதியாகவும் பரவி, பேசு பொருளாக மாற சில வரலாற்று நிகழ்வுகள் காரணமாக இருந்துள்ளன: அவை அதற்கு உந்து சக்தியாகவும் இருந்துள்ளன. அவை:

(1) 1967 இஸ்ரேலிடம் அரபு உலகம் குறிப்பாக ஜமால் அப்துல் நாஸரை தலைமையாகக் கொண்ட எகிப்து தோல்வியுற்றமை.

இது அரபு சமூகத்தையே உலுப்பி விட்ட பூகம்பம் போன்றாகியது. அது வரை அரபு உலகில் கொடிகட்டிப் பறந்த அரபு தேசிய வாதம், கம்யூனிச செல்வாக்கு ஆட்டம் கண்டது. ஒடுக்கப்பட்டிருந்த இஸ்லாமிய வாதிகள் வெளியில் வந்தார்கள். மக்களும் தீர்வுக்கு இஸ்லாத்திடமே வர முனைந்தார்கள்.

(2) 1991 : சோவியத் யூனியனின் வீழ்ச்சி.

அந்தப் பெரும் வல்லரசு துண்டாடப்பட்டது. அதன் கொள்கையும் பெரும் பின்னடைவுக்குட்பட்டது. அந்த வல்லரசினுள்ளே நசுக்குண்டு வாழ்ந்த முஸ்லிம்களும் எழுந்தார்கள்.

அரபு இஸ்லாமிய உலகினுள் இஸ்லாத்திற்குப் பிரதியீடு என முன்வைக்கப்பட்ட கம்யூனிச – சோசலிச சிந்தனைகள் கருத்து ரீதியாக பின்வாங்கின. இஸ்லாமிய எழுச்சி வீறு கொண்டெழுந்தது; பரவியது. இன்னொரு உலக சக்தியாகத் தோற்றம் பெறவும் துவங்கியது.

(3) செப்டம்பர் 11-2001: நியுயோர்க் சர்வதேச வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் உடைந்து தகர்ந்தமை ஒரு பெரும் அதிர்வை உலகம் முழுக்க ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வின் பின்னணி பற்றி எத்தனையோ கருத்துக்கள், வாதங்கள். ஒன்றும் தெளிவான முடிவான வாதங்களாக அமையவில்லை. சிலவேளை இது அவிழ்க்க முடியாத வரலாற்று மர்மமாகவே இருந்து விடக் கூடும். ஆனால் இந்த நிகழ்வைத் தொடர்ந்து இஸ்லாமியப் பயங்கர வாதம், நாகரீகங்களின் மோதல் என்று பேசப் பட்டது.

இஸ்லாமிய உலகின் மீது இது ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் இஸ்லாம் எங்கும் பேசப்பட்டது. ஆராயப் பட்டது. இஸ்லாத்தை மிகச் சரியாக முன்வைக்கும் ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கப் பெற்றது.

(4) அரபு வசந்தம்: நான்கு வருடங்களுக்கு முன் துவங்கிய அரபு வசந்தம் இஸ்லாமிய உலகை உலுப்பிய இன்னொரு நிகழ்வு. இஸ்லாமிய வாதிகள் ஆட்சியில் அமர்ந்தார்;கள். அல்லது தங்களது வரலாற்று எதிரிகளான மதச்சார்பற்ற சிந்தனைப் பின்னணி கொண்டவர்களாக கூட்டுச் சேரவோ, அல்லது பேச்சுவார்த்தை நடாத்த வேண்டிய நிலைக்கோ தள்ளப் பட்டார்கள்.

இவ்வனைத்து நிகழ்ச்சிகளின் தொடரிலும்:

ஜிஹாத் என்ற கருத்தியலை மீள் பாரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

யுத்தம் என்பது என்ன? அடிப்படையானதொரு இஸ்லாமியக் கடமையா? பாதுகாப்புக்காக யுத்தமா? அல்லது குப்ர், ஷிர்க்கை ஒழிப்பதற்கான யுத்தமா?

இஸ்லாமிய அரசியல் சிந்தனை:

ஆட்சியாளன்: கலீபா, அமீர் அல்-முஃமினீன், ஜனாதிபதி என்ற பிரயோகங்கள் எப்படி நோக்கப்பட வேண்டும். இவர் மாறி மாறி வரலாமா? ஆயுள் முழுமையிலும் அவர் இருக்கலாமா?

ஜனநாயக ஒழுங்குகள் பற்றிய கண்ணோட்டம்.

தேர்தல், எதிர்க்கட்சி

இவ்வாறே அழகியல் கலைகள், பெண்கள் பற்றிய சர்ச்சைகளும், வாதங்களும்.

இப்பின்னணியில் மகாஸித் ஷரீஆ – இஸ்லாமிய ஷரீஆவின் உயர் இலக்குகள், இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்கள் பற்றிய ஆய்வுகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

அஹ்மத் ரைஸூனி, யூஸுப் அல் கர்ளாவி, தாரிக் ரமழான், முஹம்மத் முக்தார் ஷன்கீதி, அபூ ஸுலைமான், ஜாஸிர் அவ்தா போன்ற பல சிந்தனையாளர்கள் இப் பகுதியில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார்கள்.

துருக்கியில் தையிப் ஒர்தகோனின் கட்சி ஆட்சிக்கு வந்தமை இஸ்லாமிய அரசியல் சிந்தனைப் பாரம்பரியத்தில் ஒரு வித்தியாசமான சிந்தனையை எழுப்பி விட்டது.

மதச்சார்பின்மை என்பதற்கு இஸ்லாமிய வரையரைக்குள் இருந்து கொண்டே பொருள் கொடுக்கலாமா?

மார்க்க செயற்பாடுகள் எனப்படும் தொழுகை போன்றவற்றை தனிமனித சுதந்திரம் என விட்டு விடலாமா?

இவ்வாறு இஸ்லாமிய சிந்தனை உலக நிகழ்வுகளின் உராய்வுகளாலும், சிந்தனை மோதல்களாலும் தன்னைப் புடம் போட்டு வளர்ந்து வருகிறது. இந்த சிந்தனை வளர்ச்சி நிலைகளை சிறுபான்மையினரான நாம் ஆழ்ந்து விளங்கிப் பயன் பெறல் மிக அவசியமாகும்.

Reply