தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.

 

தொழுகைகளை இணைத்துத் தொழுதல் இறைதூதர் (ஸல்) அனுமதித்த ஒரு சலுகை என்பது சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவாகும். ளுஹர், அஸர் என்ற தொழுகைகளையும் மஃரிப், இஷா என்ற தொழுகைகளையுமே இணைத்துத் தொழ முடியும். இதுவே இறை தூதர்(ஸல்) அவர்களது ஸுன்னாவாகக் காணப்பட்டது.

முஆத் (ரலி) அறிவிக்கிறார்: இறை தூதர்(ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்தின் போது பிரயாணப்பட முன்னால் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தால் ளுஹரையும், அஸரையும் சேர்த்துத் தொழுவார்கள். சூரியன் சாய முன்னால் பிரயாணப்பட்டால் அஸருக்காகத் தங்கும் வரை ளுஹரையும் பிற்போடுவார்கள். மஃரிபின் போதும் இவ்வாறே செய்தார்கள். பிரயாணப்பட முன்னர் சூரியன் மறைந்தால் மஃரிபையும், இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள். சூரியன் மறைய முன்னால் புறப்பட்டால் இஷாவுக்காகத் தங்கும் வரை மஃரிபைப் பிற்போடுவார்கள். அத்தோடு தங்கி மஃரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள். (ஸுனன் அபூ தாவூத், திர்மிதி)

பிரயாணத்தின் போது குறிப்பிட்ட தொழுகைகளை இணைத்துத் தொழ முடியும் என்பது ஏகோபித்த முடிவாகும். ஏற்கனவே குறிப்பிட்ட ஹதீஸும், ஏனைய பல ஹதீஸ்களும் இதற்கு ஆதாரமாக அமைகிறது.

பிரயாணத்தை ஆரம்பிக்கும் போது அதாவது சொந்த ஊரில் இருந்து கொண்டே இணைத்துத் தொழுவதாயின் சுருக்கித் தொழ முடியாது. ஏனெனில் ஊருக்கு வெளியில் சென்றால் மட்டுமே சுருக்கித் தொழ முடியும். அவ்வாறே பிரயாணத்திலிருந்து திரும்பி ஊருக்கு வந்து தொழுதாலும் சேர்த்துத் தொழ முடியும். ஆனால் சுருக்கித் தொழ முடியாது. இவ்வாறு பிரயாணத்தின் போது ஊரிலிருந்து சேர்த்துக் தொழுதுவிட்டு பிரயாணத்தை ஆரம்பிக்கலாம். அவ்வாறே பிரயாணம் முடிந்து வீட்டுக்கு வந்ததின் பிறகும் சேர்த்துத் தொழலாம்.

சேர்த்துத் தொழலின் இரு வகைகள்:

 1. முற்படுத்திச் சேர்த்துத் தொழல் (ஜம்உ தக்தீம்)
 2. பிற்படுத்திச் சேர்த்துத் தொழல் (ஜம்உ தஃகீர்)

அதாவது முதல் தொழுகையோடு இரண்டாம் தொழுகையை இணைத்தல் முற்படுத்திச் சேர்த்துத் தொழல் ஆகும்.

இரண்டாம் தொழுகையோடு முதல் தொழுகையை இணைத்தல் பிற்படுத்திச் சேர்த்துத் தொழல் ஆகும்.

உதாரணமாக ளுஹர் நேரத்தில் ளுஹரோடு அஸரைச் சேர்த்துத் தொழல்.
அஸர் நேரத்தில் ளுஹரை அதனோடு சேர்த்துத் தொழல்.

இந்த இரு வகையிலும் இறை தூதர் (ஸல்) அவர்கள் தொழுதார்கள். ஏற்கனவே குறிப்பிட்ட ஹதீஸ் அதற்கு ஆதாரமாக அமைகிறது.

இப்படி எவ்வாறு தொழுதாலும் முதலாம் நேரத்திற்குரிய தொழுகையையே முதலில் தொழ வேண்டும். இங்கே குறிப்பிட்ட உதாரணங்களில் முற்படுத்திச் சேர்த்துத் தொழுதாலும், பிற்படுத்திச் சேர்த்துத் தொழுதாலும் ளுஹரையே முதலில் தொழ வேண்டும்.

சேர்த்துத் தொழுவதற்கான வேறு காரணங்கள்.

இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்: இறை தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் இருக்கும் நிலையில் ளுஹரையும், அஸரையும் இணைத்துத் தொழுதார்கள். மஃரிபையும், இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள். அப்போது பயப்படும் சூழலோ, மழையோ காணப்படவில்லை. அப்போது இப்னு அப்பாஸிடம் அதனால் இறை தூதர்(ஸல்) என்ன நாடினார்கள் என வினவப்பட்டது. தனது சமூகத்திற்குக் கஷ்டம் ஏற்படக் கூடாது என நாடினார்கள் என இப்னு அப்பாஸ் அதற்குப் பதில் சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: கிதாபு ஸலாத் அல் முஸாபிரீன்) இதே கருத்தில் இன்னும் சில ஹதீஸ்களும் ஆதார பூர்வமான ரிவாயத்துகள் ஊடாக வந்துள்ளன.

இமாம் நவவி முஸ்லிமுக்கான விரிவுரை நூலில்:

“தேவைக்காக ஊரிலிருக்கும் போதே இணைத்துத் தொழ முடியும் என்ற கருத்தை சில இமாம்கள் கொண்டுள்ளனர். இது இமாம் இப்னு ஸீரீனின் கருத்தாகும். மாலிகி மத்ஹபில் அஷ்ஹபும் இக்கருத்தைக் கொண்டுள்ளார். ஷாபியீ மத்ஹபில் கப்பால், ஷாஷி அல் கபீர் என்போர் இக்கருத்தை கொண்டிருந்தனர் என கத்தாபி குறிப்பிடுகிறார். அபூ இஸ்ஹாக் அல் மரூஜிய்யும், ஹதீஸ் துறை அறிஞர்கள் சிலரும் இக்கருத்தை கொண்டுள்ளனர். இமாம் இப்னு அல் முன்திரும் இக்கருத்தை தெரிவு செய்துள்ளார். “தனது சமூகத்திற்கு கஷ்டம் ஏற்படக் கூடாது என நாடினார்கள்.” என்ற இப்னு அப்பாஸின் விளக்கம் இக்கருத்தை பலப் படுத்துகிறது.”

இக்கருத்துப் பின்னணியில் இமாம் இப்னு தைமியா கீழ்வருமாறு கூறுகிறார்:
“இணைத்துத் தொழல் என்பது சுருக்கித் தொழல் போன்ற பிரயாணத்தின் ஸுன்னாவன்று. அது தேவையின் போது – ஊரில்இருக்கும் போதும் சரி, பிரயாணத்தின் போதும் சரி செய்வதாகும்.

இந்தவகையில் கீழ்வருமாறு இதனை நோக்க முடியும்:

 1. மழையின் போது சேர்த்துத் தொழல்:ஷாபி மத்ஹபினர்:ளுஹர், அஸர் தொழுகைகளை அல்லது மஃரிப், இஷா தொழுகைகளை முற்படுத்தி, இணைத்துத் தொழும் அமைப்பை மட்டும் இக்காரணத்திற்காக ஊரிலிருப்பவருக்குத் தொழ முடியும். முதலாவது தொழுகைக்கு முதல் தக்பீரைக் கட்டும் போது மழை காணப்பட்டு தொழுகை முடியும் வரை தொடர்ந்து அடுத்த தொழுகை துவங்கும் வரையும் காணப்பட வேண்டும் என்பது இதற்கு ஷரத்தாகும்.மாலிகி:

  மஃரிப், இஷா தொழுகைகைள இணைத்துத் தொழல் முற்படுத்தி மட்டுமே தொழலாம். மழை காணப்பட்டால் அல்லது எதிர்பார்க்கப்பட்டால் இவ்வாறு தொழலாம். இருள், வழி சேறும் சகதியுமாகக் காணப்படல் என்ற நிலையிலேயே இவ்வாறு செய்ய முடியும்.

  ளுஹர், அஸர் இரண்டையும் சேர்த்துத் தொழுவது பொறுத்தமற்றது என்பது அவரது கருத்து.

  ஹன்பலி:

  மஃரிப், இஷா தொழுகைகளை மட்டும் முற்படுத்தியோ, பிற்படுத்தியோ தொழலாம். பணிப் பெய்தல், சேறு, கடும் குளிர், உடையை நனையச் செய்யும் மழை என்பவையே இதற்குக் காரணம். இந்தச் சலுகை பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுபவர், தூரத்திலிருந்து பள்ளிக்கு வருபவர், மழையால் கஷ்டமுறுபவர் என்போருக்கு உரியதாகும் என்பது பொதுவான கருத்தாகும்.

 2. நோய்ஹன்பலி மத்ஹபினரும், ஷாபி மத்ஹபில் கத்தாபி, முதவல்லி போன்றோரும் நோய் காரணமாக முற்படுத்தியோ, பிற்படுத்தியோ தொழுகைகளை ஜம்உ – இணைத்துத் தொழ முடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.இமாம் நவவி இது பலமான ஆதாரம் கொண்ட கருத்தாகும் எனக் கூறுகிறார்.ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்வதற்குக் கஷ்டமான கடுமையான நோயாளிகளே இங்கு குறிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மருத்துவ மனைகளில் தங்கியுள்ள நோயாளிகளை இது முதன்மையாகக் குறிக்க முடியும். அவ்வாறே வீட்டில் இருந்தாலும் மிகவும் சிரமப் படும் நோயாளிகளையும் இது குறிக்கும்.

இமாம் இப்னு தைமியா கூறுகிறார்:

“தொழுகைகளை இணைத்துத் தொழுதல் பற்றிய பகுதியில் விரிந்த போக்குக் கொண்ட மத்ஹப் ஹன்பலி மத்ஹபாகும். வேலைகள் அதிகரித்திருக்கும் நிலையிலும் இணைத்துத் தொழுவதை அந்த மத்ஹப் அனுமதிக்கிறது. இது ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இப்னு அப்பாஸின் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.”

இது பற்றி அல்லாமா யூசுப் அல் கர்ளாவி கீழ்வருமாறு விளக்குகிறார்:

“ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் தொழுவதில் சிலபோது கஷ்டம் இருக்க முடியும். அந்நிலையில் தொழுகைகளை சேர்த்துத் தொழ முடியும். ஆனால் இதனை ஒரு வழக்கமாகக் கொண்டுவிடக் கூடாது. அவ்வாறே அடிக்கடி இவ்வாறு சேர்த்துத் தொழவும் கூடாது. இது மிகக் குறைவாகவே நிகழ வேண்டும்.

உதாரணமாக வீதி ஒழுங்கு படுத்தும் பொலிஸ்காரர் (Traffic police) ஒருவர் அவருக்கான வேலை மஃரிபுக்கு முன்னர் துவங்கி இஷா ஆரம்பித்ததன் பின்னர் முடிகிறதாயின் இவ்வாறு சேர்த்துத் தொழலாம்.

ஒரு வைத்தியர் சத்திர சிகிச்சைக்காகச் செல்கிறார். இதனை அவர் தவிர்ந்து கொள்ள முடியாது என்றும் காணப்பட்டால் இவரும் சேர்த்துத் தொழலாம்.

மிகவும் சாதாரணமான கூட்டம் போன்ற அற்பமான தேவைகளுக்குப் பயன்படுத்த இச்சலுகையைப் பயன்படுத்தக் கூடாது.”

சிறுபான்மை நாடுகளைப் பொறுத்தவரையில் விரிவுரைகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள், பரீட்சைகளில் கலந்து கொள்ளும் நிலை என்பவற்றின் போதும் இச்சலுகையைப் பயன்படுத்த முடியும்.

தொடராக இச்சலுகையைப் பயன்படுத்தல், அடிக்கடி பயன்படுத்தல் என்பதை விட்டுத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

துணை நூல்கள்:

பிக்ஹ் – அல் ஸுன்னா: ஸெய்யித் ஸாபிக் (ரஹ்) – வா:1 பக்:343-346
பதாவா இப்னு தைமிய்யா – வா:12 பிக்ஹ் அல்-ஸலாத் வ-அல்ஸகாத் பக்:40-46
பதாவா முஆஸிரா – அல்லாமா யூஸுப் அல் கர்ளாவி வா:1 பக்:245,246

Reply