சுதந்திரமும் எமது கடமைப்பாடும்.

 
சுதந்திரம் மனிதனின் மூச்சுக்காற்று. அது இல்லையாயின் மனித வாழ்வுக்கு அர்த்தமில்லை. அப்போது மனிதன் மிருக நிலையிலேயே வாழ்வான். ஏனெனில் மிருகங்களை விட்டு மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது கருத்துச் சுதந்திரம், செயல் சுதந்திரம் என்ற இந்த அம்சமே ஆகும்.

இப்பின்னணியிலேயே பிரபஞ்ச்சத்தில் மனித தோற்றத்தை இஸ்லாம் ஒரு அதி முக்கிய நிகழ்வாகக் கருதுகிறது. இறைவன் அந்நிகழ்வை இந்த வகையில்தான் மலக்குகளிடமும் சொல்கிறான்:

“உமது இரட்சகன் மலக்குகளிடம் பூமியில் நான் ஒரு பிரதிநியை ஆக்கப் போகிறேன்…” என்று சொன்ன சந்தர்ப்பத்தை நினைவு கூறுவீராக. (ஸூரா அல் பகரா – 2:31)

இந்தக் கருத்திலேயே மனிதர்கள் இறை மார்க்கத்தை ஏற்பதைக் கூட ஒரு சுதந்திரத் தெரிவாக இஸ்லாம் பார்க்கிறது:

“மார்க்கத்தில் எந்தவித நிர்பந்தமும் கிடையாது” (ஸூரா அல் பகரா 2:256)

இறை தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தூதராக வந்த அக்காலப்பிரிவில் மக்கள் மன்னராட்சி, புராணங்கள், மெட்டீக சிந்தனைகள் என்பவற்றின் ஆதிக்கத்திற்குட்பட்டு சுதந்திரமிழந்திருந்தனர். அப்போது அவற்றிலிருந்து அவர்கள் விடுதலை பெற தெளிவான அறிவு பூர்வ ஆதாரம் வர வேண்டும் என அல் குர்ஆன் கூறியதுவும் இக்கருத்தை வலியுறுத்தும் வகையிலேயே அமைகிறது:

“வேதங் கொடுக்கப் பட்டோரிலும், இணைவைத்து வைப்போரிலுமுள்ள இறை மறுப்பாளர்கள் ஒரு தெளிவான ஆதாரம் வரும் மட்டும் விடுதலை பெறுவோரல்ல.” (ஸூரா அல் பய்யினா 98:01)

சுதந்திரம் பற்றிய இந்த அடிப்படை மீது முஸ்லிம்கள் பயிற்றுவிக்கப் பட்டதன் காரணமாகவே அந்நிய ஆதிக்கம் முஸ்லிம் சமூகத்தின் மீது விழுந்த போது அவர்கள் மிக கடுமையான சுதந்திரப் போராட்டங்களை நடாத்தினர். இது பெரும் பான்மையாக முஸ்லிம்கள் வாழ்ந்த நாடுகளுக்குரியது மட்டுமல்ல. சிறுபான்மையாக அவர்கள் வாழ்ந்த நாடுகளிலும் அவர்கள் போராடினர். இந்தியாவில் திப்பு சுல்தான் முதல் காந்தியைத் தலைமையாகக் கொண்ட சுதந்திரப் போராட்டம் வரை அவர்கள் முன்னணியில் நின்று போராடினர்.

இலங்கையிலும் இது நிகழ்ந்த உண்மை. போர்த்துக்கேயர் காலத்திலிருந்து முஸ்லிம்கள் சிங்கள மன்னர்களோடிணைந்து களத்தில் போராடினர். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியால் முஸ்லிம்கள் ஆங்கிலேயரோடு ஒத்துறவாடும் நிலைக்கு வந்தாலும் அது முஸ்லிம்களது வாழ்வு நிலை உபாயமாக இருந்ததுவே தவிர யதார்த்தத்தில் முஸ்லிம்கள் ஆங்கிலேயரை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வரவில்லை. முஸ்லிம் பொது மக்களுக்கு மத்தியில் இந்த ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த வெறுப்புணர்வு நிலவியது என்பதுவே வரலாற்று உண்மையாகும்.

இதே வரலாற்று ஓட்டத்தில்தான் “சோல்பரி ஆணைக்குழு இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்த்தை அளித்து, சுதந்திரம் வழங்க சிபாரிசு செய்து 1945 ஆண்டு அதற்கான வாக்கெடுப்பு நடந்தபோது அரசாங்க சபையிலிருந்த முஸ்லிம்கள் அனைவரும் அதற்கு ஆதரவு வழங்கி வாக்களித்தனர். சேர் ராஸிக் பரீத், டி.பி ஜாயா ஆகிய இருவரும் அச்சந்தர்ப்பத்தில் ஆற்றிய உரைகள் மிக உணர்ச்சி பூர்வமாக அமைந்தன.” (இலங்கை முஸ்லிம்கள் – தொன்மைக்கான வரலாற்றுப் பாதை – கலாநிதி சுக்ரி பக்-104)

இவ்வாறு இலங்கைக்கான சுதந்திரத்தில் அடுத்த சமூகங்கள் போன்றே முஸ்லிம் சமூகமும் தனது பங்களிப்பைச் செய்தது. இப்போது சுதந்திர இலங்கையில் நாம் எல்லா சமூகமும் என்ன சாதித்தோம் என்பது பற்றியே இந்த சுதந்திரத்தை ஞாபகம் கூறும் இச்சந்தர்ப்பத்தில் சிந்திக்கக் கடைமைப் படுகிறோம்.

ஆங்கிலேயர் எமக்கு தேசியத்தையும், ஜனநாயகத்தையும் அறிமுகப் படுத்தினர். அதனை அரசியற் கொள்கையாக ஏற்ற எம்மால் தொடர்ந்து முன்னேறி வளர்ச்சியடைய முடிந்ததுவா? வளர்ச்சியடைந்த முன்னணி நாடாக இவ்வளவு காலமாக எம்மால் ஏன் மாற முடியவில்லை என்பது ஒவ்வொரு இலங்கைக் குடிமகனும் சிந்திக்க வேண்டிய அடிப்படை உண்மை.

தேசியமும், ஜனநாயகமும் ஒன்றோடொன்றிணைந்த இரு கொள்கைகள். ஒவ்வொரு குடிமகனும் நாட்டை ஆளுவதில் உரிய பங்கைப் பெறுவது என்பது ஜனநாயகத்தின் பொருள். தேசியம், உரிமை, கௌரவம், அந்தஸ்த்து என்பவற்றில் ஒவ்வொரு தனி மனிதனையும் சமத்துவம் உள்ளவனாக்குகிறது.

இந்த அர்த்தத்தில் தேசியத்தை எம்மால் கட்டியெழுப்ப முடியவில்லை. பொதுவாகப் பல்லின சமூகத்தில் காணப்படும் சிக்கல் மிக்க பிரச்சினை இது. பொதுவாக ஆசிய நாடுகளில், குறிப்பாகத் தென்கிழக்காசிய நாடுகளில் இதனைத் தெளிவாகக் காண முடியும்.

மொழி, மதம், இனம் இவற்றோடு பிணைத்து தேசியத்தை ஒரு வெறி உணர்வாக, சிந்தனையாக, கருத்தியலாக மாற்றிக் கொள்ளும் போதுதான் இனப் பிரச்சினை உருவாகிறது. படிப்படியாக சிக்கல் மிக்க பாரிய வடிவை அது பெற்றுவிடுகிறது. எமது நாட்டில் நடந்தது இதுவே. சுதந்திரம் பெற்ற நாள் தொடுத்து இன மோதலும் ஆரம்பித்தது அது படிப்படியாக வளர்ச்சியுற்று 30 வருட கால யுத்தமாக வெடித்தது. பயங்கர அழிவை ஏற்படுத்தியது. உலகில் மிக அருமையாகவே அவதானிக்கத்தக்க அதி வளமிக்க இந்நாடு பின்தங்கியது.

இதற்கான தீர்வை நோக்கி எவ்வாறு நாம் நடைபோட முடியும்? அது பற்றி சில வார்த்தைகள் சொல்வோம்.

உண்மையில் இது சமூகத்தின் புத்திஜீவிகளது பொறுப்பு. சிங்கள, முஸ்லிம், தமிழ் என்ற மூன்று சமூகங்களிலும் இது பற்றிக் கவலையுடனும், நேர்மையாகவும், நீதியாகவும் சிந்திக்க ஒரு தொகையினர் உள்ளனர். அவர்கள் முன்வர வேண்டும். நடைமுறை அரசியலை விட்டு வெளியே நின்று அவர்கள் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

முதலில் ஒவ்வொரு சமூகமும் தன்னைச் சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் அந்தப் புத்திஜீவிகள் அமைப்பு ஒரு நீண்ட பயிற்றுவித்தல் நிகழச்சி நிரலொன்றைக் கொண்டு செல்ல வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் முதல் பொதுமக்கலோடு தொடர்புபடும் ஊடகங்களூடாக இதனை அவர்கள் கொண்டு செல்ல முடியும்.

தேர்தல் முடிந்து புதியதொரு சூழல் உருவாகி இருக்கும் இந்நிலையில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படல் பொருத்தம். அப்போது எம்மால் ஒரு உண்மையான சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும்.

Reply