இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப்பட்ட தேவை.

 

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப்பட்ட பிரச்சினை என்னவென்று நோக்கினால், அறிவுக் கலாச்சாரம் அற்ற சமூகமாக இருப்பதே அது எனக் கொள்ள முடிகிறது. இலங்கை முஸ்லிம் சமூகத்தில் அறிவு ஜீவத்துவ வாழ்வு மிகக் குறைவு. அறிவு ஜீவிகள் என்போர் மிகக் குறைந்த தொகையே. எனவே அறிவு இயக்கமும் இந்த சமூகத்தில் மிகவும் சொற்பம். அறிவுபூர்வமான களந்துரையாடல்கள், மகா நாடுகள், ஆய்வுக்கருத்தரங்குகள் மிக அரிதாகவே இங்கு நிகழ்கின்றன.

முஸ்லிம் சமூகத்தில் பல அறிவுத்துறைகளில் பட்டம் பெற்றோர் உள்ளனர். ஆனால் அறிவு ஜீவிகள் வேறு. அறிவு துறைகளில் பட்டம் பெற்றோர் வேறு. அறிவு ஜீவிகள் என்போர் முதலில் அறிவு, வாசிப்பு, ஆய்வு என்பவற்றிற்காகத் தமது வாழ்வை அர்ப்பணித்தோர். இரண்டாவது பிரச்சினைகளை, விவகாரங்களை தர்க்கரீதியாக சிந்திக்க தெரிந்தோர், இதன் விளைவாக ஆக்கபூர்வமான தீர்வுகளையும், முடிவுகளையும் முன்வைக்க புரிந்தோர் அவர்கள். அவர்களிடம் கண்டுபிடிப்புகள் இருக்கும்; புத்தாக்கங்கள் இருக்கும். இந்தப் பின்னணியில் இருந்து நோக்கும் போதுதான் அவர்கள் வெறும் அறிவுத்துறைகளில் பட்டம் பெற்றோரை விட மிகவும் வித்தியாசப் படுகிறார்கள்.

இந்த நிலையின் காரணமாக முஸ்லிம் சமூகத்தை மிகச்சரியாக வழி நடாத்தும் ஒழுங்கு இன்றி அங்கு ஒரு குளறுபடியான போக்கையே அவதானிக்க முடிகிறது. பிரச்சினைகளையும், விவகாரங்களையும் மிகச் சரியாக புரிந்து கொள்ளல் தீர்வுக்கான முதற் படி. சமூக யதார்த்தத்தையும், சூழலையும் புரிந்து கொள்ளல் இரண்டாவது படி. இதன் பின்னரே தீர்வுகளுக்கு வர முடியும். இம் மூன்று படிமுறைகளும் அறிவு பூர்வமானவை. ஆய்வு அடிப்படையில் ஒழுங்கு படுத்தப்பட வேண்டியவை. இந்நிலை இல்லாததன் காரணமாக முஸ்லிம் சமூகத்தில் ஒரு குளறுபடியான நிலை காணப்படுகிறது என்றோம்.

குடும்பம், பாலர் முன் பாடசாலை, அல் குர்ஆன் மத்ரஸா, அஹதிய்யா போன்ற மனிதனைப் பயிற்றுவிக்கும் ஆரம்ப அதிமுக்கிய கட்டத்தை எடுத்துக் கொண்டாலும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல், நிர்வாக ஒழுங்கு படுத்தல், பொருளாதார, அரசியல் இயக்கங்களை எடுத்துக் கொண்டாலும் இந்தச் சிக்கல்களை அவதானிக்க முடியும்.

அல்லாஹ் எமக்குத் தீர்வுகளை மிகவும் நேரடியாகவும், மிகத் தெளிவாகவும் தயாரித்துத் தரவில்லை. சமூக, பொருளாதார, அரசியல் பகுதிகளில் அதிகமாகப் பொதுக் கொள்கைகளையும், கோட்பாடுகளையுமே அல்குர்ஆன் முன்வைக்கிறது. அவற்றை சமூக நிலைகளின் மீது பிரயோகிப்பது மனித அறிவின் பொறுப்பாகும். அந்த அறிவு இயக்கமற்றிருந்தால் முன்னோரையோ, அடுத்த நாட்டு அறிஞர்களையோ கண்மூடிப் பின்பற்றுவதாகவோ, பிரதிபன்னுவதாகவோ மட்டும்தான் அது இருக்கும். அந்நிலையில் காலம், இடம், சூழல் என்பவற்றோடு பொருந்தாத, அந்நியப்பட்ட இயக்கம் கொண்டதாகவே சமூகம் இருக்கும். இது தீர்வுகளை முன்வைக்கும் ஒழுங்கல்ல. பிரச்சினைகளை அது மேலும் கூட்டிவிடவும் கூடும்.

இந்த வதையில்தான் ஒரு சமூகத்தின் சீரான இயக்கத்திற்கு அறிவுப் பங்களிப்பு மிக முதன்மையாகிறது. சிக்கலான இயக்கமும், பல்வேறு முரண்பட்ட தொடர்புகளும், தொழில் நுட்ப சாதனங்களின் பிரயோகமும் அதிகரித்துள்ள இக்காலப் பகுதியில் இது மிகத் தெளிவான உண்மையாகும்.

இந்தக்கருத்துப் பின்னணியில் “புத்திஜீவித்துவ ஆக்கம்” இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முதன்மைப்பட்ட வேலைத்திட்டமாகிறது. இது குடும்பம், பாலர் முன் பாடசாலை, அல் குர்ஆன் மத்ரஸா என்று மிக ஆரம்ப நிறுவனங்களிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அறிவுபூர்வமாக பார்க்கவும், சிந்திக்கவும், விமர்சிக்கவும் ஆரம்பமுதலே சமூக அங்கத்தவர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்

இக் கருத்து ஆழ்ந்து புரியப்பட வேண்டும். அப்போது மட்டுமே இந்த நாட்டில், உலகில் நாம் தலை நிமிர்ந்து வாழ முடியும். இல்லாத போது மிதியுண்டு, ஒடுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு வாழ்வது தவிர்க்க முடியாததாகும்.

Reply