ஹதீஸை விளங்குவோம்.

 

இறை தூதர் வழிகாட்டலைப் பெறுவதற்கான முயற்சிகளுக்கு ஒரு உதாரணம்:

  • இப்னு அப்பாஸ் (ரலி) 8 வயதாக இருக்கும் போதே ஹதீஸ்களை மனனமிட்டார்கள்.
  • அஹ்மத் இப்னு ஹன்பல் 10 இலட்சம் ரிவாயத்துக்களை மனனமிட்டு 40,000 ஹதீஸ்களைப் பதிவு செய்தார்.
  • இமாம் முஸ்லிம் 15 வருடங்களில் தமது அல்-ஸஹீஹ் என்ற தனது நூலை எழுதினார். 3 இலட்சம் ஹதீஸ்களை மனனமிட்டு அவற்றில் 3033 ஹதீஸ்களை மட்டும் தமது நூலில் பதிவு செய்தார்.
  • இமாம் இப்னு ஹஜர் ஸஹீஹ் அல் புகாரியின் விரிவுரை நூலான பத்ஹ் அல் பாரியையும் அதன் முன்னுரையையும் 32 வருடங்களில் எழுதி முடித்தார்.

இறை தூதர் (ஸல்) அவர்களின் சொற்களும், செயல்களும்:

இவ்விரு பகுதியையுமே மிகச் சரியாகப் பிரித்தறிந்து கொள்ள வேண்டும்.

இது பற்றிய ஒரு முக்கியமான நூல்:

أفعال الرسول ودلالتها على الأحكام الشرعية

இறை தூதர் (ஸல்) அவர்களின் செயல்களும் ஷரீஅத் சட்டத்தின் மீதான அதன் பிரயோகமும்.

ஆக்கியவர்: கலாநிதி முஹம்மத் அல் அஷ்கர் (ரஹ்). இந்நூலில் இதை 13 வகைப் பாத்திரங்களை ஏற்று இறை தூதர் (ஸல்) வாழ்ந்துள்ளதாக அதன் ஆசிரியர் கூறுகிறார்.

நபியென்ற பாத்திரத்தை ஏற்கும் நிலையின் போதான இறை தூதரது செயல்களே சமூகத்திற்கு சட்டத்தை காட்டும் நிலையாகிறது.

ஏனைய இறை தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட பாத்திர நிலைகள் சட்டத்தைக் காட்டுபவையல்ல.

உதாரணம் ஒன்று: இறை தூதர் (ஸல்) சாப்பாட்டின் போது உடும்பு இறைச்சி வைக்கப் பட்டபோது சாப்பிடாமை. காலித் இப்னுல் வலீத் (ரலி) அதனைச் சாப்பிடுதல். (முஅத்தா மாலிக்)

இது உடும்பு இறைச்சி ஹராம், மக்ரூஹ் எனக் காட்டாது. ஏனெனில் காலித் (ரஹ்) சாப்பிடும் போது அதனைப் பார்த்திருந்தார்கள் தடுக்கவில்லை.

இறை தூதரது பகுதியில் பரிச்சயமற்ற ஒரு மிருகமாக இருந்ததால் அதனை சாப்பிட இறை தூதர் (ஸல்) விரும்பவில்லை. எனவே, மனிதன் என்ற வகையில் இறை தூதர் (ஸல்) அதனை சாப்பிடாது விட்டார்கள்.

இஸ்லாமிய உடை?!

இறை தூதர்(ஸல்) அவர்களது செயல்களில் ஒன்று அவர்களது உடை. தமது சமூகத்தின் உடையையே அவர்கள் அணிந்தார்கள்.

இமாம் இப்னுல் கையிம்: ஜாத் அல் மஆத்

(زاد المعاد في هدي خير العباد)

என்ற நூலில் கூறுகிறார்:

இறை தூதர் (ஸல்) 26 வகை உடைகளை உடுத்தார்கள்.

உதாரணமாக இறை தூதர் (ஸல்) தலைப்பாகை கட்டி இரண்டு தோள்களுக்கிடையே அதன் ஒரு துண்டைத் தொங்கவிட்டார்கள். இது வாஜிபா, ஸுன்னாவா – இல்லை. இப்னுல் கையிம் சொல்கிறார்:

“சாதாரணமாகக் கிடைப்பதை உடுப்பதே ஸுன்னாவாகும்.”

இவ்வாறு ஸுன்னாவை, ஹதீஸை மிகவும் கவனமாக ஆய்ந்து, விளங்கிப் பின்பற்ற வேண்டும்.

-கலாநிதி தாரிக் ஸுவைதானின்
فهم الدين -மார்க்கத்தை விளங்குதல்
என்ற நூலைத் தழுவி எழுதப் பட்டது.

Reply