அல் குர்ஆன் மனித வாழ்வுக்கான அழகிய வழிகாட்டல்

 

அல் குர்ஆன் முஸ்லிம் வாழ்வின் ஊற்றுக் கண். அங்கிருந்துதான் வாழ்வை முஸ்லிம் வரைந்து கொள்கிறான்; கட்டமைத்துக் கொள்கிறான்; ஒழுங்கு படுத்தி சீரமைக்கிறான். அடிப்படைக் கொள்கைகள், கோட்பாடுகள், அடிப்படைப் பண்பாடுகள், ஒழுக்கங்கள், வாழ்வின் அனைத்துப் பகுதிகளுக்கும் உரிய போதனைகள், வழிகாட்டல்கள், சட்டதிட்டங்களை அங்கிருந்துதான் முஸ்லிம் பெறுகிறான். அவ்வாறு முஸ்லிம் அல்குர்ஆனின் வழிகாட்டலின் கீழ் தன்னை ஒழுங்குபடுத்தி, கட்டியெழுப்பிக், கொள்ளும் போது மிக உயர்ந்த, முன்மாதிரிமிக்க ஆளுமையைப் பெறுகிறான். அல்குர்ஆன் இதனை மிக அழகாகக் கீழ்வருமாறு சொல்கிறது:

“இது அல்லாஹ்வின் வார்ப்பு. அல்லாஹ்வை விட மிகச் சிறந்த முறையில் வார்ப்பவர் யார் உள்ளார்.”
(ஸுரா பகரா 2:138)

முஸ்லிம் மட்டுமல்ல. ஒரு மனிதனே தன்னைச் சீராக அமைத்துக் கொள்ள வேண்டுமானால், தன் ஆளுமையை மிகச் சரியாகக் கட்டமைக்க வேண்டுமானால் இறை வார்ப்புக்குட்பட வேண்டும்.

மனிதனைப் படைத்தது அர்த்தப்பட வேண்டுமானால் அல்குர்ஆனிய அறிவை மனிதன் பெற வேண்டுமென அல்குர்ஆன். இப்பின்னணியிலேயே சொல்கிறது:

“அருளாளன். அல்குர்ஆனைக் கற்றக்கொடுத்தான். மனிதனைப்படைத்தான்.” (ஸுரா ரஹ்மான் 55:1-3)

இந்த கருத்தின் தொடராகவே ஒரு முஸ்லிம் ஒவ்வொரு நாளும் “ எங்களுக்கு நேரான பாதையை காட்டுவாயாக.” (ஸுரா பாத்திஹா 01:05) என்று இறைவனை பிராரத்தித்துக் கொண்டே வாழ்கிறான்.

இந்த அடிப்படை உண்மைகளைக் கவனத்திற்கொண்டதன் பின்னர் ஒரு முஸ்லிமுக்கு அல்குர்ஆன் எவ்வாறு வழிகாட்டுகிறது என நோக்கினால் மிகவும் அழகான, ஒத்திசைவான வழிகாட்டலை அது வழங்குவதைக் காண முடியும்.

அல் குர்ஆன் உடம்பைப் பற்றி விளக்கும் போது அந்த உடம்பு தூய்மையாக இருக்க வேண்டும், பலமாக இருக்க வேண்டும் எனக் கூறி அதற்கான வழிகாட்டைலைத் தருகிறது.

“நிச்சயமாக அல்லாஹ் அதிகமதிகம் பாவமன்னிப்புக் கேட்டு அவனிடம் மீள்பவர்களை விரும்புகிறான். சுத்தமாகத் தம்மை வைத்துக் கொள்வோரையும் விரும்புகிறான்.
(ஸுரா அல் பகரா 2:222)

அவர் சொன்னார் ; உங்களுக்காக அவரைத் தெரிவு செய்தான். அறிவாற்றலையும், உடல் வலிமையையும் அதிகமாக வழங்கியுள்ளான். (ஸுரா பகரா 2:247)

உடலை இவ்வாறு வைத்துக்கொள்ள சில அடிப்படை வழிகாட்டல்களை அல்குர்ஆன் வழங்குகிறது. முதலாவது சிறந்த, தூய்மையான உணவுப் பொருட்களை அவன் உட்கொள்ள வேண்டும். தனது உடல், பௌதீக வாழ்வை அழகாகவும் கவர்ச்சியுள்ளதாகவும் அவன் வைத்துக் கொள்ள வேண்டும்.

“அல்லாஹ் தனது அடியார்களுக்காக வெளியாக்கியுள்ள அல்லாஹ்வின் அழகுப் பொருட்களையும், சிறந்த உணவுப் பொருட்களையும் யார் தடை செய்ய முடியும்?” (ஸுரா அஃராப் 7:32)

இரண்டாவது அத்துமீறவும், வீண்விரையமும் இப்பகுதியில் கூடாது என்பதை விளக்குகிறது.

“சாப்பிடுங்கள், குடியுங்கள், வரம்பு மீறாதீர்கள், வீண் விரையம் செய்யாதீர்கள். வரம்புமீறுவோரை அல்லாஹ் விரும்புவதில்லை.” (ஸுரா அஃராப் 7:31)

மனிதனின் அடுத்த பகுதி அறிவு. அறிவு பற்றி அல்குர்ஆன் போன்று வேறெந்தத் தூதும் ஆழ்ந்தும், முக்கியத்துவம் கொடுத்தும் பேசியிருக்க முடியாது. அது பற்றிய சில உண்மைகளை இங்கே தருவோம். அறிவு தேடலையும், சிந்தனையையும். ஏனைய எவ்வாவற்றிக்கும் அடிப்படையென அல்குர்ஆன் கூறுகிறது.

ஈமான், இறை பயம் இவற்றுக்கு அடிப்படை அறிவு என அல் குர்ஆன் கூறுகிறது:

“அல்லாஹ்வின் அடியார்களில் அவனைப் பயப்படுபவர்கள் அறிஞர்களே.” (ஸுரா அல் பாதிர் 35:28)

மனிதன் என்பதன் பொருள் அறிவு. அறிவற்றவன் மனிதனாக இருக்க முடியாது என்கிறது கீழ்வரும் வசனம் :

“அவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன; ஆனால் சிந்திக்க மாட்டார்கள். கண்கள் உள்ளன; பார்க்க மாட்டார்கள். செவிகள் உள்ளன; கேட்கமாட்டார்கள். அவர்கள் மிருகங்கள் போன்றவர்கள். இல்லை அதனை விடவும் நேர் வழி அறியாதோர்கள். (ஸுரா அல் அஃராப் 7:179)

ஆன்மா பற்றி, அதன் தூய்மைப் பற்றி அடுத்து விளக்குகிறது அல் குர்ஆன். மனிதனின் வெற்றி தோல்வியே அதில்தான் தங்கியுள்ளது என அது பற்றி விளக்குகிறது:

அதனை (ஆன்மாவை) தூய்மைப்படுத்தியோன் வெற்றியடைந்தான். தீமையில் அதனைப் புதைத்து விட்டவன் தோல்வியடைந்தான். (ஸுரா ஷம்ஷ் 91: 9,10)

இவ்வாறு மனிதனின் மூன்று பகுதிகளான உடல்,அறிவு, ஆன்மா என்பவற்றைப் பொறுத்தவரையிலும் ஒரு சமநிலைப் பண்பு கொண்ட வழிகாட்டலை அல்குர்ஆன் வழங்குகிறது. அது சம்பந்தமான முதன்மைப்பட்ட கருத்துக்களையே இங்கு தந்தோம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் அல்குர்ஆன் விரிவாகவும், ஆழ்ந்தும் அல் குர்ஆன் விளக்கியுள்ளது. அந்த வழிகாட்டல்களை மிகவும் கவனமாக ஒரு முஸ்லிம் ஆழ்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போது ஒரு சமநிலை நிலை கொண்ட உயர்ந்த ஆளுமையை அவன் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இந்தப் பின்னணியில் இவற்றின் சமூகப் பிரயோகங்களை இஸ்லாம் எவ்வாறு தருகிறது. என்பது பற்றி ஒரு சிறு விளக்கத்தைத் தர முயல்வோம்.

மனிதனின் உடல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அடிப்படையானது பொருளாதாரப் பகுதி. அதனை அல் குர்ஆன் முதலில் உழைப்பு பற்றி வலியுறுத்துகிறது. அந்த உழைப்பின் விளைவாக பொருளாதார ஏற்றத் தாழ்வு உருவாக முடியும். அந்த ஏற்றத் தாழ்வு நன்கு குறைக்கப் படவேண்டும் என வலியுறுத்துகிறது. அத்தோடு ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும் செல்வம் சுற்றிவரக் கூடாது என்ற அடிப்படையான பொருளாதாரக் கொள்கையையும் சொல்கிறது.

உழைப்பு பற்றிச் சொல்லும் போது :

“பூமியை உங்களுக்கு மிகக் கட்டுப்பட்டு இயங்கக் கூடியதாக ஆக்கியுள்ளோம். எனவே அதன் பல பாகங்களுக்கும் சென்று அல்லாஹ்வின் உணவு வசதிகளை தேடிப் புசியுங்கள். (ஸுரா முல்க்: 67: 15)

பொருளாதார ஏற்றத் தாழ்வை நீக்க ஸகாத்தையும், வாரிசுரிமைச் சட்டத்தையும், செலவழித்தல் பராமரிப்பு சட்டத்தையும், கடமையாக்கியதோடு சதகா என்ற ஸுன்னத்தான செலவழித்தல் சம்பந்தமான வணக்கத்தையும் ஆக்கியுள்ளது.

“உங்களில் பணக்காரர்களிடையே மட்டும் செல்வம் சுற்றிவராதிருக்கட்டும்.” (ஸுரா அல் ஹஷ்ர்59:07)

இவ்வாறு சமூகத்தின் செல்வம் ஒரு குறிப்பிட்ட சாராரிடம் தங்கியிருக்க கூடாதென்பதை வலியுறுத்தியுள்ளது.

உடல் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மிக முக்கியமான அடுத்த பகுதி மனிதனின் பாலியல் உணர்வாகும். இதனை ஒழுங்கு படுத்த குடும்பம் என்ற நிறுவனத்தை கட்டமைத்து விளக்கியுள்ளது. ஸுரா பகரா, ஸுரா நிஸா, ஸுரா தலாக் என்ற அத்தியாயங்களில் இது பற்றிய தெளிவான விளக்கங்களை அவதானிக்க முடியும். ஸுரா நூரிலும் காம உணர்வை நெறிப்படுத்துவதற்கான போதனைகளையும், சட்டதிட்டங்களையும் அவதானிக்க முடியும்.

மனிதனின் ஆன்மீக அறிவுப் பகுதிகளை ஒழுங்குபடுத்தலிலும், சீர்படுத்தலிலும் இரு வகையான வழிகாட்டல்களை அல் குர்ஆனில் காண முடிகிறது. ஒன்று மனிதன், பிரபஞ்சம், வாழ்வு என்ற மூன்று பகுதிகளையும் மிக ஆழமாகவும் ஆதாரபூர்வமாகவும் விளக்கியுள்ளது. பகுத்தறிவு ரீதியாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் அதனை முன்வைத்துள்ளது.

இறை நம்பிக்கை, இறை தூது பற்றிய நம்பிக்கை, மலக்குகள் மீதான நம்பிக்கை, மறுமை நாள் பற்றிய நம்பிக்கை என்ற நம்பிக்கைப் பகுதி என்பது மனித வாழ்வுக்கும், பிரபஞ்சத்திற்குமான விளக்கமேயாகும். இப்குதியை விளக்காத அத்தியாயங்கள் கிடையாது.

ஒரு சில அல் குர்ஆன் வசனங்களை இது பற்றித் தருவது பொருத்தமாக அமையும்:

இப்பகுதியில் இறை நம்பிக்கை பற்றி அல் குர்ஆன் கீழ்வருமாறு சொல்கிறது:

“அல்லாஹ், அவனைத் தவிர வேறு கடவுள் கிடையாது எனவும், இவ்வுலகை அவன் ஒரு சம நிலையில் வைத்து நிர்வகிக்கிறான் எனவும் சான்று பகர்கிறான். அவ்வாறே மலக்குகளும், அறிவுடையோரும் சான்று பகர்கின்றனர்.”
(ஸூரா ஆலு இம்ரான்: 3:18)

இவ்வுலக மனித வாழ்வு ஒரு சோதனையே என்று அல் குர்ஆன் விளக்குகிறது:

அவன் வாழ்வையும், மரணத்தை உங்களில் யார் மிகச் சிறந்த முறையில் செயற்படுகிறீர்கள் என்று பரிசோதிப்பதாகப் படைத்தான். (ஸூரா முல்க்: 67: 2) தொடர்ந்து இவ்வசனத்தில் இக்கருத்து எவ்வளவு தூரம் உண்மை என்பதை விஞ்ஞான பூர்வமாக ஸூரா விளக்குகிறது. இந்தக் கருத்துப் பின்னணியிலேயே மறுமை நாள் என்ற கருத்தையும் அல் குர்ஆன் விளக்குகிறது.

ஸூரா அல் பாதிஹா இறை நம்பிக்கை, மறுமை நாள் நம்பிக்கை, இறை தூது என்ற மூன்று பிரதான நம்பிக்கைகளையும் மிகச் சுருக்கமாக விளக்குகிறது.

இரண்டாவது பகுதி ஆன்மீக வழிகாட்டலாகும். தொழுகை, நோன்பு, ஹஜ் என்று மூன்று பிரதான வணக்கங்களை இப்பகுதியில் காண முடிகிறது. நோன்பு, ஹஜ், தொழுகை பற்றி ஸூரா பகராவிலும் இன்னும் பல ஸூராக்களிலும் அல் குர்ஆன் விளக்குகிறது. இந்த வசனங்களை மனிதனைப் பயிற்றுவிப்பதற்கான அடிப்படைச் சாதனங்கள் என்றவகையில் அல் குர்ஆன் இவற்றை முன்வைக்கிறது.

இறுதியாக நல்லொழுக்கங்கள், பண்பாடுகளுக்கான வழிகாட்டலையும் அல் குர்ஆன் வழங்குகிறது.

ஸூரா முஃமினூன் 1-9 வசனங்கள், ஸூரா புர்கான்: 63-74. ஸூரா இஸ்ரா 23:39 என்ற வனசங்களை இதற்கு உதாரணங்களாகக் கூற முடியும்.

உதாரணமாக ஸூரா முஃமினூன் கீழ்வருமாறு ஒழுக்கப் பண்பாடுகளைச் சொல்ல ஆரம்பிக்கிறது.

“இறை நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றார்கள். அவர்கள் தமது தொழுகையின் போது பயபக்தியுடனும், மிகப் பணிவாகவும் நிற்பார்கள். அவர்கள் வீண் விளையாட்டுகளைவிட்டு ஒதுங்கி நிற்பார்கள்…”
(ஸூரா முஃமினூன் 1-3)

இவ்வாறு அல் குர்ஆன் ஒரு முஸ்லிமின் முழு வாழ்வுக்கும் வழிகாட்டுகிறது. இந்தவகையில் அந்த முஸ்லிம் இரு நிலைகளில் இருப்பான். ஒன்று இறைவனுக்கு அடிபணிந்து நலன்கள், நன்மைகளை வளர்ப்பவனாக இருப்பான். இரண்டாவது தன் வாழ்வால் தான் சுமந்துள்ள கொள்கைக்கு சான்று பகர்பவனாக இருப்பான்.

“இறை நம்பிக்கையாளர்களே நீங்கள் குணிந்து, தலையைப் பூமியில் வைத்து அல்லாஹ்வுக்கு வணக்கம் செலுத்துங்கள். உங்களது இரட்சகனுக்கே முழுமையாகக் கட்டுப்படுங்கள். நலன், நன்மைபயப்பவற்றை செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெறலாம்.”
(ஸூரா அல் ஹஜ் 22:77)

“இவ்விடயத்தில் தூதர் உங்களுக்கு சான்று பகர்பவராக இருப்பார். நீங்கள் மக்களுக்குச் சான்று பகர்பவராக இருக்க வேண்டும்.”
(ஸூரா அல் ஹஜ் 22:78)

Reply