முடியுமான இஸ்லாம்

மாஹிர் இப்னு முஹம்மத் அல் குரஷி - சவுதி அரேபிய ஆய்வாளர்

மாஹிர் இப்னு முஹம்மத் அல் குரஷி – சவுதி அரேபிய ஆய்வாளர்

முடியுமான இஸ்லாம் என்பதன் பொருள் ஷரீஅத்தில் ஏற்கப்பட்ட முடியுமான நிலை காணப்படலும், அங்கீகரிக்கப்பட்ட நலன் விளைதலுமாகும்.

முடியுமான நிலை காணப்படாவிட்டால் அல்லது நடைமுறைப்படுத்துகையில் உரிய நலன் விளையாவிட்டால் முடியுமான இஸ்லாம் என்ற கருத்துக்கு உட்படாததாக குறிப்பிட்ட விடயம் அமையும். அத்தோடு ஷரீஅத்தில் பொறுப்பாதல் என்ற வட்டத்திற்கு வெளியே உள்ள விடயமாகவும் அது அமையும்.

 

الإسلام الممكن

الإسلام الممكن

இதன் பொருள் ஷரீஅத்தின் எந்தக் கட்டளையை நிறைவேற்றும்போதும் அது இரு அடிப்படை ஷரத்துகளைக் கொண்டது என்பதாகும்.

அ. முடியுமாக இருத்தல்.
ஆ. எதிர் பார்க்கப்படும் நலன் விளையுமாக இருத்தல்.

இப்பின்னணியில் முடியுமான இஸ்லாம் என்பதன் பொருள் ஷரீஅத்துக்கும், சமூக யதார்த்தம் மாற்றமுறலுக்குமிடையே இணக்கம் காணல் என்பதாகும். நலன்கள் – சீர் கேடுகள் அல்லது இமாம் இப்னு தைமியாவின் வார்த்தையில் “நன்மைகள்-தீமைகள்” என்பவற்றிடையே ஒப்பு நோக்கலுக்கேற்ப இது அமையும்.

முடியுமான நிலை என்ற சட்ட ஆய்வு ஷரீஅத்தில் விதிவிலக்கான ஒன்றல்ல. நடைமுறைப்படுத்தல் என்றவகையில் சிறியதொரு எல்லையைக் கொண்டதுவுமல்ல. அது ஷரீஅத்தின் அடிப்படையான சட்ட ஆய்வு. மிக விரிந்த நடைமுறைப்படுத்தல் எல்லையையும் கொண்டது.

குறிப்பாக சீர்கேடுகள் நிறைந்த காலப்பிரிவு, நுபுவ்வத்தின் தாக்கத்தைவிட்டுத் தூரமான நிலை, சமூகப் பலவீனம். என்பவை முடியுமான இஸ்லாம் என்ற கருத்தை வலுப்படுத்தும். நாம் இன்றுள்ள நிலை இதுவே.

முடியுமான இஸ்லாம் அல்லது இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தல் என்ற கருத்து சட்ட வசனத்தை விளங்குதல், அதனை நடைமுறைப்படுத்தல் என்ற அடிப்படை மீது எழுவதாகும்.

சட்ட வசனத்தை விளங்குதல் இரு அடிப்படைகளைக் கொண்டது.

அ. அரபு மொழி புலமை பெற்றிருத்தல்.
ஆ. ஷரீஆவின் இலக்குகள். (மகாஸித் அஷ்ஷரீஆ) பற்றிய அறிவு பெற்றிருத்தல்.

இந்தவகையில் ஷரீஅத்தின் சட்ட வசனங்களோடு உறவாடும்போது இரு உண்மைகளைப் புரிவது அவசியம்.

அ. சட்ட வசனங்களை விளங்குவதற்கான விதிகள். அதனையே மேலே இரு அடிப்படைகளாகக் குறிப்பிட்டோம்.
ஆ. நடைமுறைப் படுத்தலுக்கான விதிகள். இவை சட்ட வசனங்களை விளங்குவதற்கான விதிகளை விட்டு முற்றிலும் வேறுபட்டதாகும்.
நலன்கள் – தீமைகளை ஒப்பிட்டு நோக்கல்,
முடியுமாதல் என்ற விதியைப் பிரயோகித்தல்,
படிமுறை நடைமுறைப்படுத்தல் என்ற விதியைப் பாவித்தல்,
செயல்களின் விளைவுகளைக் கவனத்தில் கொள்ளல்,
சட்டங்களின் தர வேறுபாடுகளை நன்கு புரிதல்,
நலன்களும், வழக்காறுகளும் மாற்றமுறலை அவதானத்தில் கொள்ளல்
போன்ற பல உண்மைகள் இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

– அல்-இஸ்லாம் அல் மும்கின் (الإسلام الممكن)


 

இங்கு தரப்பட்ட கருத்துக்கள் சிறுபான்மை சமூக வாழ்வைப் பொருத்தவரையிலும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும்.

இந்த அடிப்படைகளின் மீதே சிறுபான்மைக்கான சட்ட ஒழுங்கையும் கட்டியெழுப்ப முடியும்.

Reply