தேர்தலின் விளைவு…?

அரசியல் தலைமை என்பது மிகப் பாரிய பொறுப்பு. அதிகார உணர்வே மனிதப் பலவீனங்களில் மிகப் பாரியதும் சமூகத்தின் மீது மிகப் பாரிய தாக்கங்களை விளைவிப்பதுமாகும். அந்த உணர்வுக்குத் தீனி போடுவதே தலைமை. குறிப்பாக அரசியல் தலைமை.

ஜனநாயகம் என்பது அதற்கு நேர் எதிர் நிலை. அது தலைமை மக்களிடம் உள்ளது; அதிகாரங்களின் மூலம் மக்களே என்கின்றது. இந்த வகையில் மக்களிடம் அபிப்பிராயம் கேட்டல் என்பது அதன் நடைமுறைப் பொருள். மக்களை மதித்தல் அவர்களது அபிப்பிராயத்தை கேட்டலின் முதல் நிலை.

இந்த வகையில் மக்கள் அபிப்பிராயத்தை கேட்பதற்கான, மிகச் சரியாக ஒழுங்கு படுத்தப்பட்ட பொறிமுறையை அரசு கெண்டிருப்பதே ஜனநாயகம் நடைமுறையாவதற்கான அடிப்படை ஷரத்தாகிறது.

தேர்தல், குறிப்பிட்ட சில விவகாரங்களின் போதான அபிப்பிராய வாக்கெடுப்பு. நீதிமன்றம் , ஊடகப் பகுதி , இறுதியில் எதிர்க்கட்சி ஒழுங்கு என்பன மக்கள் அபிப்பிராயத்தின் வாயில்கள். இவை மிகச் சுதந்திரத்துடனும், ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் இயங்கும் போதுதான் ஜனநாயகம் சாத்தியமாகும். பாரிய ஏற்றத்தாழ்வற்ற பொருளாதார சுதந்திரம் ஜனநாயகம் சீரிய முறையில் இயங்குவதற்கான இன்னொரு அடிப்படைச் ஷரத்தாகும்.

இந்த வகையில் ஜனநாயக சமூகம் என்பது ஆழ்ந்த அறிவு, பயிற்சியின் விளைவாகவே உருவாகும். அந்த அறிவும், பயிற்சியும் குடும்பத்திலிருந்து துவங்கி உருவாக வேண்டும்.

ஆட்சித் தலைமை அதிகார உன்மத்தம் கொள்வதிலிருந்து பாதுகாக்கப்பட ஆழ்ந்த அறிவு பயிற்சியின் பின்னணியில் இருந்து உருவாகி வந்திருக்க வேண்டும். மக்களோடு மக்களாக வாழ்ந்து, அவர்களது சுக, துக்கங்களில் கலந்துகொண்டு, பொதுப்பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கான போராட்டங்களில் கலந்து – இவ்வாறு அது பரந்ததொரு பாதையில் பயணித்து வந்திருக்க வேண்டும்.

அடுத்து மக்கள் அபிப்பிராயத்துக்கான ஏனைய ஊடகங்களும், எதிர்க்கட்சியும் இலக்குகளும், நோக்கங்களும் கொண்ட சீரியதொரு வேலைத்திட்டத்தைக் கொண்டியங்க வேண்டும். இவ்வாறு ஜனநாயக சமூகத்திற்கான பல்வேறு கூறுகளும் சீரான இயக்கம் கொள்ளும் போதே ஜனநாயகம் சமூகத்தில் சரியாக இயங்குவது சாத்தியமாகும். சர்வாதிகாரி உருவாவதிலிருந்து காப்பதுவும் அப்போதுதான் சாத்தியமாக முடியும் .

மேற்குலகம் எமக்கு ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் அதனை நாம் மிகச் சரியாக எமது நாட்டில் விதைக்கவில்லை. திட்டமிட்டு, மிகவும் கவனமாக நாம் அதனை வளர்க்கவில்லை. எனவேதான் இலங்கையின் அனைத்து சமூகங்களிலும் ஜனநாயக வாழ்வுபற்றிய அறிவுத் தெளிவின்மை பரவலாகக் காணப்படுகிறது.

இதன் விளைவாக சொந்த நலன்களைக் கருத்திற் கொண்டு தனது அரசியல் நிலைப்பாட்டைத் தீர்மானிக்கும் போக்கு பொதுமக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. இன, சமூக , நலன்கள் நாட்டு நலன்களைவிட முதன்மைப்படுத்தப்படுகின்றன. அரசியல் இலஞ்சம், பல்வேறு வடிவங்களிலான தேர்தல்கால இலஞ்சம் மிகப் பரவலாக உள்ளது.

ஆட்சியில் அமர்ந்திருப்போர் தமது பணியாளர்கள், அவர்கள் தனிப்பட்ட பிரஜைகளது நலன்களையும், பொது நலன்களையும் கவனிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் என்ற எண்ணம் மக்களிடம் பரவலாக இல்லை. அதற்குப் பதிலாக ஆட்சியாளர்கள் செய்பவை, அவர்கள் தம்மீது புரியும் அருள்கள், மனமுவந்து செய்யும் சேவைகள் என்ற மனப் போக்கே மக்களிடம் காணப்படுகிறது.

இந்த வகையில் ஜனநாயக அரசியல் தெளிவை மக்களிடம் ஏற்படுத்துவதுவும், அவர்களை அந்த வகையில் பயிற்றுவிப்பதுவும் என்ற போக்கு பரவலாக உருவாவது ஜனநாயக வாழ்வின் முதல் அடிப்படையாகும். அதன் விளைவாகவே மக்கள் அபிப்பிராயத்திற்கான வாயில்கள் சிறப்பாகவும், சரியாகவும் இயங்க முடியும். அப்போது தான் மக்களே ஆட்சியாளர்கள்; அவர்களே அதிகாரத்தின் மூலம் என்ற ஜனநாயக விழுமியங்கள் நடைமுறையாகும். இந்த அடிப்படை சரியாக விழும்போதுதான் நாடு முன்னேறும்; அபிவிருத்தி அடையும்.

நாட்டுக்கான விடிவு இந்தத் தேர்தல் மூலமாகத்தான் தோன்ற முடியும் என்றதொரு பரவலான அபிப்பிராயம் மக்களிடையே காணப்படுகிறது. அது பற்றியதொரு தெளிவுக்காகவே இக்கருத்துக்களை முன் வைத்தோம்.

நாட்டின் முன்னால் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தன கொண்டுவந்த புதிய அரசியல் யாப்பு மிகப் பாதகமான விளைவுகளை நாட்டின் வாழ்வில் ஏற்படுத்திவிட்டது என்பது தெளிவு. அந்தப் பாதகங்களிருந்து மீழ்வதன் முதல் அடியே அந்த அரசியல் யாப்பை அகற்றுவதாகும் என்பது தெளிவு. ஆனால் அதற்கு அப்பால் ஒரு பெரிய வேலைத்திட்டம் உள்ளது என்ற கருத்தையே இங்கு விளக்க முனைந்தோம். வெறும் யாப்பை மட்டுமல்ல; யாப்பை உருவாக்கிய சூழலையே மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இன்னொரு ஜே. ஆர். உருவாக மாட்டார் என்பது என்ன நிச்சயம்?!

இறுதியில் இக்கருத்தை அழகாக விளக்கும் ஒரு சம்பவத்தோடு முடிக்கிறோம்.

சுதந்திர பொஸ்னியாவின் முதல் ஜனாதிபதி அலி இஸ்ஸத் பிகோபிச் ஒரு முறை அவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்குச் சற்று பிந்திச் சென்றார். மக்கள் ஜனாதிபதிக்கு இடம்விட்டு அவரை முன்னே அனுப்பினார்கள். முன்னே சென்ற அலி இஸ்ஸத் திரும்பி மக்களை நோக்கி:

“இவ்வாறுதான் நீங்கள் சர்வாதிகாரிகளை உருவாக்குகிறீர்கள்” என்றார்.

Reply