அல் குர்ஆனின் சொற்கள் தரும் சிந்தனைகள்.

அல் குர்ஆன் ஒரு வித்தியாசமான நூல். அதனை பல வகையில் நோக்க வேண்டும். வாசிக்க வேண்டும். மிகவும் ஆழ்ந்து அதனை ஆராய வேண்டும். அப்போதுதான் அதன் கருத்துக்களை விரிவாகவும், மிகச் சரியாகவும் புரிந்து கொள்ள முடியும். இங்கு அது கருத்து முன்வைக்கும் முறைகளைத் தருகிறோம்:

சிலபோது அது வெறும் தனிச் சொற்களாலேயே ஒரு பெரிய, ஆழிய கருத்தை முன் வைத்து விடும். உதாரணமாக அது:

தொழுங்கள் என்று சொல்லாது தொழுகையை நிலை நாட்டுங்கள். என்று சொல்லும். சாதாரணமாகத் தொழுவது போதாது; மிகச் சரியாக அதனைத் தொழ வேண்டும் என்ற கருத்தை இது கொடுக்கிறது. இந்த வகையில் إقامة الصلاة என்பது உரிய நேரத்திற்குத் தொழுதல், தொழுகையின் சட்டங்களையும், ஒழுங்குகளையும் பேணல், குறிப்பாக, தொழுகையில் உயிரோட்டம் காணப்படல் என்ற கருத்துக்கள் அனைத்தையும் அது அடக்கும்.

பணக்காரர்களிடம் குறிப்பிட்ட அளவிலான வரியை அறவிட்டு முதன்மையாக ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கும் பொருளாதார செயற் திட்டத்திற்கு அது ‘ஸகாத்’ என்று பெயரிட்டுள்ளது. زكاة எனின் தூய்மை, வளர்ச்சி என்று பொருள். பொருள் மீதான பற்றை அறுத்துத் தூய்மைபெறல், சமூகம் வளர்ச்சி காணல் என்ற இரு கருத்தையும் இச்சொல் உணர்த்தி ஸகாத்தின் இலக்கையே உணர்த்திவிடுகிறது.

“அவர்களுக்கு நாம் வாழ்வாதாரமாக வழங்கியவற்றிலிருந்து செலவழிப்பார்கள்” (பகரா-3) என்று செலவழித்தல் பற்றிச் சொல்லும் இந்த வசனத்தில் வரும் “நாம் வழங்கியவற்றிலிருந்து” என்ற பிரயோகம்:

நீ செலவழிப்பது உனது சொத்தையல்ல எனவே உலோபத்தனம் காட்டுவதில் அர்த்தமில்லை. என்று சொல்லும்.

அத்தோடு பிறர் சொத்தை செலவழித்து விட்டு பெருமையடிக்க என்ன இருக்கிறது என்றும் அப்பிரயோகம் சொல்லும்.

மனிதன் செல்வத்தின் உண்மையான சொத்துக்காரனல்ல. அதன் மீதான பிரதிநிதி மட்டுமே என்ற கொள்கையையும் இது தரும்.

“அல்லாஹ்தான் நீங்கள் பார்க்கும் தூண்களின்றி வானங்களை உயர்த்தினான்.” (ஸூரா ரஃத் 2)

“நீங்கள் பார்க்கும் தூண்களின்றி” என்ற இவ்வசனத்தில் வரும் பிரயோகம் “கண்கள் பார்க்காத தூண்களுள்ளன” என உணர்த்தி கோள்கள், நட்சத்திரங்களுக்கடையிலான ஈர்ப்பு சக்தியை சுட்டிக்காட்டுகிறது.

இப்படி இன்னும் பல சொற்களை அல்குர்ஆனில் அவதானிக்க முடியும். அவை இவ்வாறு ஒரு கருத்தை, சிந்தனையை, சில போது ஒரு கொள்கையையே முன்வைத்து விடும்.

அடுத்த முறை அல்குர்ஆன் கருத்து முன்வைக்கும் ஏனைய முறைமைகளைப் பார்ப்போம்.

Reply