சில சிந்தனைகளும் கருத்துக்களும் – ii

இமாம் அல் கஸ்ஸாலி – மார்க்க வாழ்விற்கு பௌதீக வாழ்வோடுள்ள தொடர்பை விளக்குகிறார்:

மார்க்கக் கட்டமைப்பு உலகக் கட்டமைப்பின்றி நிறைவுறமாட்டாது. மார்க்கக் கட்டமைப்பு என்பது அறிவு, வணக்கம் இரண்டினதும் கூட்டாகும். அதனைப் பெற உடற் சுகம், வாழ்வு நிலைத்தல், உணவு, உடை, வீடு, பாதுகாப்பு என்ற தேவைகள் நிறைவேறல் என்பது அவசியமாகும். இந்த அடிப்படைத் தேவைகள் நிறைவேறல் உறுதியாகும்போதுதான் மார்க்க வாழ்வு சீராகும். அநியாயக்காரர்களின் வாட்களைவிட்டுத் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளல், போட்டி நிலைகளின் போது உணவுத் தேவைகளைப் பெற்றுக் கொள்ளல் என்ற இந்த வேலைகளில் ஏறத்தாழ முழு நேரத்தையும் செலவிடுபவன் மார்க்க அறிவு பெறல், வணக்கங்களில் ஈடுபடல் என்பவற்றை எப்படி சாதிக்க முடியும்?! இவை இரண்டும் மறுமைக்கான சாதனங்கள். எனினும் உண்மை நிலை இதுவேயாகும். எனவே உலக சீர் நிலை அதாவது உலகத் தேவைகள் பூரணமாக நிறைவேறல் மார்க்க சீர் நிலைக்கு ஷரத்தாகும்.
(அத் இக்திஸாத் பில் இஃதிகாத் பக் 135)
இமாம் கஸ்ஸாலி ஹி-450-505/கி.பி. 1058-1111 காலப் பிரிவில் வாழ்ந்த அறிஞராவார்.

அண்மைக் காலங்களில் விளக்கப்படும் ஒரு மனோ தத்துவவியல் உண்மை பற்றி இமாம் இப்னுல் கையிம்.

உள்ளத்தில் தோன்றும் எண்ணச் சலனத்தோடு போராடு. அவ்வாறு நீ செய்யாவிட்டால் அது நாட்டமாக மாறிவிடும். அந்த நாட்டத்தோடு போராடு. அவ்வாறு நீ செய்யாவிட்டால் அது இச்சையாக மாறிப்போகும். இச்சையோடு போராடு. அப்படி நீ செய்யா விட்டால் அது செயலாக மாறிவிடும். அந்த செயலுக்கு எதிராக நீ நிற்கா விட்டால் அது பழக்கமாக மாறிவிடும். பழக்கமாக மாறி விட்டால் அதிலிருந்து மீள்வது மிகக் கடினம்.
(அத் பவாயித் பக்: 31, 173)

Reply