சில சிந்தனைகளும், கருத்துக்களும் – i

இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியம் மிகப் பாரியது. அது பற்றிய தெளிவைக் கொடுக்க பழைய அறிஞர்களது சிந்தனைகள், கருத்துக்கள் சிலவற்றை இங்கே தருகிறோம். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே எவ்வளவு ஆழ்ந்து எமது அறிஞர்கள் சிந்தித்தார்கள் என்பதைக் காட்டும். சமூகவியல் கலைகள் ஆய்வில் மிக அண்மைக் காலங்களில் மனிதன் வந்த முடிவுகளுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே எமது அறிஞர்கள் வந்துள்ளமையை விளக்கும். இறை வழிகாட்டலே இதற்குக் காரணம் என்ற உண்மையையும் இதனூடாகப் புரிந்து கொள்ள முடியும்.

இமாம் இப்னு ஹஜ்மின் ஒரு பொருளாதார சிந்தனை:

ஒவ்வொரு நாட்டின் செல்வந்தர்களும் அந்நாட்டின் ஏழைகளைக் கவனிப்பது கடமையாகும். அரசு அவர்களை அதற்காகக் கட்டாயப் படுத்த வேண்டும். ஸகாத் அதற்குப் போதாவிட்டால், ஏனைய செல்வங்களும் போதவில்லையாயின் இவ்வாறு ஆட்சியாளன் செய்ய வேண்டும். தேவையான உணவு, கோடை, மாரிக்கான உடை, மழை, வெயில் பாதசாரிகளின் கண்கள் என்பவற்றிலிருந்து காப்பதற்கான வீடு – இவற்றை செல்வந்தர்களின் செல்வம் மூலமாக அரசு செய்ய வேண்டும். ஒரு முஸ்லிமோ, ஒரு முஸ்லிம் அல்லாதவரோ, இன்னொரு முஸ்லிமிடம் மேலதிகமாக உணவிருக்கும் போது இறந்தவற்றையோ, பன்றி இறைச்சியையோ சாப்பிடும் நிர்ப்பந்த நிலைக்கு உட்படக் கூடாது. இந்நிலையில் அந்த மனிதர் மேலதிக உணவு வைத்திருப்பவரிடம் போராட முடியும். போராடியவர் கொல்லப்பட்டால் கொன்றவரிடம் பலி வாங்க வேண்டும். உணவுப் பொருளைக் கொடுக்காது எதிர்த்துப் போராடியவர் கொல்லப்பட்டால் அவர் இறை சாபத்திற்குட்படுவார். ஏனெனில் அவர் கொடுக்க வேண்டியதொரு உரிமையைத் தடுத்துள்ளார்.

(அல் முஹல்லா வா-06 பக்-159)
இப்னு ஹஜ்ம் ஹி: 384-456/ கிபி. 994-1064 காலப்பிரிவில் அந்தலுஸ் -ஸ்பெயினில்- வாழ்ந்தவர்.

சிந்தனை பற்றி இமாம் இப்னுல் கையிம்.

சிந்தனை அனைத்து நன்மைகளிலும் அடிப்படை, திறவு கோல். உள செயல்களில் மிகச் சிறந்தது. மிகப் பயன்மிக்கதுவும் அதுவே.

(மிப்தாஹ் தார் – அல் ஸஆஸதா பக் 831)
இமாம் இப்னு கையிம் இமாம் இப்னு தைமியாவின் மாணவர். ஹி 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ஹி 751 அவர் மரணித்தார்.

Reply