வக்பு சொத்தும் அதன் வருமானத்தைச் செலவிடலும்.

 

ஒரு பள்ளிக்கு பலர் வக்பு செய்திருந்தனர். பல்வகைப் பயிர்களைக் கொண்ட நிலங்களே அவை. அதன் அறுவடை விற்பனை செய்யப் பட்டு நோன்பு மாதத்தில் கேட்டு வரும் ஏழைகளுக்கு வழங்கப் பட்டு வந்தது. இப்போது அவ்வாறு பிச்சை கேட்டு வருவோர் இல்லை. இப்போது அதனைப் பள்ளியின் வேறு நலன்களுக்காக செலவிட முடியுமா?

பள்ளிக்கென வக்பு செய்யப்படவற்றை பள்ளியின் நலன்களுக்காகவே செலவிட வேண்டும். அது ஏழைகளுக்காக செலவிடப் படக் கூடாது. ரமளான் மாதமாயினும், எம்மாதமாயினும் இவ்வாறே நடந்து கொண்டிருக்க வேண்டும். பள்ளியின் தேவை போக எஞ்சியவை இதற்கு விதிவிலக்கு. வக்பு செய்தவரின் ஷரத்துப்படி செலவிடலே வக்பில் கடைப் பிடிக்கப் பட வேண்டிய கடமையாகும். அவர் செலவிடச் சொன்ன விடயம் ஹராமாக இருந்தால் மட்டுமே அதனை ஏற்கக் கூடாது. எனினும் வக்பு செய்தவர் குறிப்பிட்ட பகுதியை விட இன்னொரு பகுதிக்கு செலவிடல் சிறந்தது எனவும் முஸ்லிம்களுக்கு மிகப் பிரயோசனமானது எனவும், வக்பு செய்தவருக்கும் கூடுதலான நன்மைகளைத் தரக் கூடியது எனவுடம் வக்பு சொத்தைப் பராமரிப்பவர் கண்டால் வக்பு செய்தவரின் ஷரத்திற்கு முரண்பட்டாலும் அந்த பிரயோசனம் கூடுதலாக உள்ள இன்னொரு பகுதிக்கு செலவிடலாம்.

இதற்கான ஆதாரம்: ஒரு மனிதர் இறை தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘மக்காவை அல்லாஹ் வெற்றி கொள்ள வைத்தால் பைத்துல் முகத்தஸ் போய் தொழுவேன் என நேர்ச்சை வைத்துள்ளேன்; இப்போது என்ன செய்யட்டும்” எனக் கேட்டார்: அப்போது இறை தூதர் (ஸல்) ‘‘இங்கே தொழு” என்றார்கள். அவர் மீண்டும் கேட்டார். அப்போதும் இறை தூதர் (ஸல்) ‘‘இங்கே தொழு” என்றார். மூன்றாம் முறை அம்மனிதர் அதையே கேட்டார். ‘‘இங்கே தொழு” என்று இறை தூதர் (ஸல்) கூறினார்கள். நான்காவது முறையும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்ட போது ‘‘அப்படியாயின் நீ விரும்பியவாறு செய்” என்றார்கள்.

நேர்ச்சை கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றாகும். அவ்வாறிருந்தும் கூட அதனையும், அதனையும்விட சிறந்த ஒரு செயற்பாட்டிற்கு மாற்றிக் கொள்ளலாம் என இந்த ஹதீஸ் சொல்கிறது. இவ்வகையில் வக்பு சொத்தையும் மாற்றிக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது. எனினும் வக்பை மாற்ற முனையும் போது நீதி மன்ற உத்தரவை அவர் பெற வேண்டுமென்றே நான் கருதுகிறேன். இதுவே விடயத்தை நன்கு கவனத்துடன் செய்ய ஏதுவாகும்.

இந்தக் கேள்விக்கான பதில் இப்போது தெளிவு. அந்த சொத்தின் அதிகாமானதை பள்ளி நலன்களுக்கே முதலில் செலவிட வேண்டும். எஞ்சினால் ஏழைகளுக்கு வழங்கலாம். ரமளானில்தான் வழங்க வேண்டும் என்பதில்லை. வேறு மாதங்களிலும் வழங்கலாம். குறிப்பிட்ட பள்ளிப் பகுதியிலுள்ள ஏழைகளுக்கு மட்டுமன்றி அதற்கு வெளியே உள்ள பகுதி ஏழைகளுக்கும் செலவிடலாம்.

ஷெய்க முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல் உதைமின்.
அல் முஜ்தமஃ 2058-வெளியீடு.

Reply