இறுதி நபியின் திக்ர்களும், பிரார்த்தனைகளும் என்ற கலை.

இறுதி நபியின் திக்ர்களும், பிரார்த்தனைகளும் என்ற கலை -ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி-

இறுதி நபியின் திக்ர்களும், பிரார்த்தனைகளும் என்ற கலை -ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி-

 

இது ஒரு வித்தியாசமான நூல். இறை தூதர் (ஸல்) அவர்களின் திக்ர், துஆ என்பவற்றை ஒரு புதிய நோக்கில் முன்வைக்கிறது இந்த நூல். திக்ர், துஆ நூற்களில் இது ஒரு முன்மாதிரி ஆக்கம். இதற்கு முன் யாரும் இறை தூதர் (ஸல்) அவர்களின் முற்றிலும் ஆன்மீகப் பகுதியான இவ்வாழ்வை இவ்வாறு நோக்கியதில்லை. ஷெய்க் முஹம்மத் கஸ்ஸாலிக்கே உரிய போக்கு இது. கஸ்ஸாலி ஒரு வித்தியாசமான சிந்தனையாளர். புதிய புதிய ஆய்வுகளை அவர் எப்போதும் முன் வைத்து வந்துள்ளார். அப்படியொரு புத்தகமே இந்த நூல்.

புத்தகம் திக்ர், அவ்ராத் என்றாலும் இறை தூதரின் அற்புத வாழ்வை இந்த நூல் சொல்கிறது. இஸ்லாத்தின் சிந்தனைகளையும், கோட்பாடுகளையும் ஆங்காங்கே விவரிக்கிறது. மிகவும் அழகான, கவர்ச்சிகரமான நடையைக் கொண்டவர்கள் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி. இதனை இந்த நூலில் மிகச் சிறப்பாகவே காணலாம்.

நூலின் அத்தியாயங்களைத் தருகிறேன். அத்தியாயங்களின் தலைப்புக்களை வாசிக்கும் போது நூலின் வித்திாயசமான போக்கைப் புரிந்து கொள்ள முடியம்:

  1. முஹம்த் (ஸல்) அவாகள் அல்லாஹ்வை எமக்கு எவ்வாறு அறிமுகப் படுத்தினார்.
  2. அன்பு அவரது அடிப்படை, காதல் அவரது வாகனம்.
  3. விரிந்த வாழ்வின் 24 மணித்தியாலங்கள்.
  4. உணவுக்கும், குடிப்பிற்கும் பிறகான மிக மிருதுவான பிரார்த்தனைகள்.
  5. நுபுவத்தின் அமர்வுகள்.
  6. ‘‘வெள்ளை” இரவு.
  7. வாழ்க்கைக் கடலில்.
  8. முஸ்லிம் வீட்டைக் கட்டியெழுப்பல்.
  9. உணவுப் போராட்டம்.
  10. பிரயாணமும், திரும்பி வரலும்.
  11. உலகின் துன்பங்கள், கஷ்டங்கள்.
  12. பிரார்த்தனை ஒரு சாதாரண பௌதீகக் காரணியா?
  13. நான்கு தூண்கள்.
  14. நினைவு கூறலும், நினைவூட்டலும்.
  15. கருணையின் நபியும், போராட்டத்தின் நபியும்.
  16. முடிவுரை.

ஒவ்வொரு அத்தியாயமாக அறிமுகப் படுத்தினால் இந்த அறிமுகத்தை அது மிகவும் விரிவாக ஆக்கிவிடும். எனவே, இங்கே நூலின் பந்திகள் சிலவற்றை ஆங்காங்கே தெரிவு செய்து தருகிறேன். அது இந்த நூலின் கருத்துப் போக்கைச் சொல்லும். அத்தோடு சில ஆழ்ந்த கருத்துக்களைப் புரிந்ததாகவும் இருக்கும்.

விரிந்த வாழ்வின் 24 மணித்தியாலங்கள் என்ற அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில்:

‘‘மரணத்தின் இறுதி வேளைகளில் இருந்த போது அந்த இறுதித் தூதர் (ஸல்) பள்ளியில் தொழுகையாளர்களைப் பார்க்கிறார்கள். அவர்கள் இறைவனையே முற்றிலும் நோக்கி நிற்பதை அவர்கள் அவதானிக்கிறார்கள். சத்தியத்திற்காகவென்றே தூய்மையுடன் அவர்கள் அர்ப்பணிக்கப் பட்டுள்ளமையையும் அப்போது காண்கிறார்கள். தங்கத்தின் ஒரு துண்டு போல் அப்போது அவர்களது முகம் ஒளி பெறுகிறது.

அவர்கள் விரும்பியதெல்லாம் இதனைத்தான்!! அவர்களது இடைவிடாத போராட்டத்தின் மூலம் இத்தகைய உயிரோட்டமிக்க பயனைப் பெற்று இறைவனைச் சந்திக்கவே அவர்கள் விரும்பினார்கள்.

பள்ளிகள் முன்பிருந்தது போன்று மனிதர்களை ஆக்கும் பயிற்சிப் பாசறைகளாக எப்போதாவது மாறுமா….?!
இவையும் பள்ளிகள்தான். ஆனால் அதனுள்ளே இருப்பவர்கள் எமது தேட்டத்திற்கு மாற்றமாகவே உள்ளனர்.

லைலாவின் மஜ்னூன் எமது அந்த உணர்வுகளையே சித்தரிக்கிறார் போலும்:

“அந்தக் கூடாரங்கள் அவர்களின்
கூடாரங்களை ஒத்தே உள்ளன.
ஆனால் அங்குள்ள பெண்கள்
வேறு யாரோ.”

நுபுவ்வத்தின் அமர்வுகள்:

‘‘முஹம்மத் (ஸல்) இறைவனை நோக்கியே நிற்பதால், இறை தொடர்பை மிகப் பலமாகக் கொண்டுள்ளமையால், பூமியை வானமாக மாற்றி விடுகிறார். மனிதர்களை மலக்குகளாக மாற்றி விடுகிறார்; அவரைச் சூழ உள்ள அவரது தோழர்கள் அல்லாஹ்வை நினைவு கூறுவர்; அவனை கண்ணியப்படுத்துவர்; அவனுக்கு வணக்கம் செலுத்துவதை, அவனுக்கான கடமைகளை நிறைவேற்றுவதைத் தமக்கு மத்தயில் உபதேசித்துக் கொள்வர்.”

நினைவு கூறலும், நினைவூட்டலும்:

“இறை தூதரிடம் ஒரு மனிதர் வருகிறார். அவர் சொல்கிறார். நான் இன்றிரவு தூங்கி இருக்கும் போது கனவில் பார்க்கிறேன்:
நான் ஒரு மரத்தின் பின்னால் தொழுகிறேன். ஸுஜூது செய்கிறேன். மரமும் எனது ஸுஜூதுக்கு ஏற்ப ஸுஜூது செய்கிறது. அம் மரம் சொல்வதை நான் கேட்டேன்: இறைவா இதற்காக எனக்கான கூலியை எழுது. அதன் மூலம் என் பாவமொன்றை நீக்கிவிடு. உன்னிடம் இதனை சேமிப்பாக வைத்துவிடு. உனது அடியார் தாவூதிடமிருந்து ஏற்றது போல என்னிடமிருந்தும் இதனை ஏற்றுக் கொள்.

இதனை அறிவிக்கும் இப்னு அப்பாஸ் சொல்கிறார்:

இறை தூதர் (ஸல்) ஒரு ஸஜதா வசனத்தை ஓதுகிறார். ஸுஜூது செய்கிறார். அந்த ஸுஜூதில் அம் மனிதர் மரம் சொன்னதாக விவரித்த அதே வார்த்தைகளைச் சொல்கிறார்.

இச்சிறு நிகழ்வு ஆழ்ந்த கருத்தைக் கொடுக்கிறது:
அந்த மனிதர் இஸ்லாத்தின் போதனைகளை மிகச் சரியாகப் பெற்றார். அவை அவரது உள்ளத்தில் மிக ஆழ்ந்து படிந்து கனவாக வந்துள்ளது.

அத்தோடு நிகழ்வு இன்னொரு உண்மையையும் சொல்கிறது:
இறை தூதரது உள்ளம் இறை அன்பால் நிறைந்துள்ளது. ஒரு சிறு நிகழ்ச்சியும் அந்த உணர்வைத் தூண்டிவிடும். எனவேதான் அந்த மரம் சொன்னதாக வந்த அப் பிரார்த்தனைகளை எடுத்துக் கொண்டு உலகங்களின் தலைவனுக்கு ஸுஜூது செய்து அந்த வார்த்தைகளால் அவர் மிகுந்த பணிவுடன் பிராத்திக்கிறார்.

அந்த அழகிய நூலை எடுத்துக் காட்ட இன்னும் பல பகுதிகள் உள்ன. ஆனால் இப்பகுதி விரிந்துவிடும் என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்.

துஆக்களும், திக்ர்களும் இறை தூதர் (ஸல்) அவர்களின் மன நிலையையும், சிந்தனையையும் படம்பிடித்துக் காட்டும். அதனையே சில தலைப்புகளின் கீழ் கொண்டு வந்து காட்ட ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி முயன்றுள்ளார்.

திக்ர், துஆக்களின் உண்மைப் பொருளென்ன என மிகச் சரியாக அறிய விரும்புவோரக்கு இது ஒரு மிகச் சிறந்த நூல்.

Reply