கவனம் செலுத்த வேண்டிய அடிப்படை உண்மை

சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள், விளைவாகப் பல்வேறு வேலைத் திட்டங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களது முதன்மைபட்ட வேலைத்திட்டம் யாது? பிரச்சினைகள் யாவை? எதற்கு அவர்கள் அதி கூடிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது மிகவும் கவனமாக சிந்திக்கப்பட வேண்டும். பின்னர் அவர்களது அனைத்து நிறுவனங்களும், இயக்கங்களும், பள்ளி நிர்வாக சபைகளும் அந்த பின்னணியிலிருந்து தமது வேலைத்திட்டங்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும்.

இருப்பு நிலையைப் பாதுகாத்துக் கொள்ளலே எமது முதன்மைப்பட்ட வேலைத்திட்டமாகும். எப்போதும், எத்தகைய சமூக சூழ்நிலைகளின்போதும் எமது முதன்மைப்பட்ட வேலைத் திட்டம் அதுவாகவே இருக்க வேண்டும். மிகவும் சாதகமான, அமைதியான சமூக சூழ்நிலைகளின்போதும் இதனை நாம் மறந்து விடக் கூடாது. பாதகமான ,தீவிரவாத நிலைகள் காணப்படும் சமூக நிலைகளின்போது கண்டிப்பாக நாம் இதனை மறக்க மாட்டோம்.

இருப்பு நிலையைப் பாதுகாத்தல் என்ற பிரச்சினை முதன்மையாக அமையக் காணரம் என்ன? இது நாம் இருத்தல், வாழ்தல் என்பதோடு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். அதில் பௌதீக இருப்பு மிகவும் அடிப்படையானது. இந்த நாட்டில் நாம் வாழ வேண்டும். அந்த வாழ்வுக்கே அபாயம் வரும் இனச் சுத்தீகரிப்பு நிலை படிப்படியாக முன்னெடுக்கப்படுமாயின் அப்போது அதுவே அடிப்படைப் பிரச்சினை. முதலாவது நாம் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் மானசீக இருப்புப் பெற்றவர்களாகலாம். தூதை எத்தி வைக்கலாம். எமது மார்க்கத்தை எம்முள்ளே நடைமுறைப்படுத்தலாம். இப்படி எமது வேலைத் திட்டங்களுக்கே முதன்மையான அடிப்படை அதுவே. நாம் அழிக்கப்படும், விரட்டப்படும் அபாயம் தோன்றினால் அடுத்த வேலைத்திட்டங்களுக்கு என்ன பொருளிருக்க முடியும்?! ஆளே இல்லாதபோது அவரது வேலைத்திட்டங்கள் பற்றி பேசுவதில் என்ன கருத்திருக்கிறது?!

இந்த வகையில் “இலங்கையில் இனக் கலவரங்களும், இலங்கை முஸ்லிம்களும்” என்ற நூலுக்கு கலாநிதி அனஸ் எழுதிய முன்னுரையில் சொன்ன சில வார்த்தைகள் இப்பிரச்சினையை விளக்க மிகப் பொருத்தம் எனக் கருதுகிறேன்.“பல்லின மக்கள் வாழும் நாட்டில் அல்லது பிரதேசத்தில் இன மோதல்களிலிருந்து விடுபடுவது எவ்வாறு என்றும் அதற்கு இடமளிக்காத சமூக அரசியல் சூழலை உருவாக்குவது எவ்வாறு என்பதுமே முக்கியமாக அறியப்பட வேண்டிய வாழ்கை கலையாகும்.”

இந்த வகையில் நாட்டில், சமூகங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை ஒரு சிறுபான்மை நன்கு கூர்ந்து அவதானித்து வர வேண்டும். அவற்றிற்கு ஏற்ப எம்மில் என்ன மாற்றங்கள் வர வேண்டும் என சிந்திக்க வேண்டும்.

இப்பின்னணியில் எமது அடிப்படை பிரச்சினையையும்,வேலைத்திட்டத்தையும் கீழ்வருமாறு சுருக்கித் தரலாம்.

oml-5-explanation

எமக்கான அடிப்படை அபாயம் இருப்பு நிலை பற்றியதால் அந்த அபாயத்திலிருந்து எம்மை காத்துக்கொள்ள எமக்கு சக்தியும், பலமும் அவசியம்.

சக்தி, பலம் என்பது கல்வி, பொருளாதார, சமூக, அரசியல் ரீதியான பலமாக இருக்க முடியும்.

ஆனால் அந்த பலத்தைச் தேடச் செல்லும் பாதையில் முரண்பாடுகளும், மோதல்களும் உருவாகலாம். எனவே திறந்த உறவாடல் என்ற அடுத்த சமூகங்களோடு உறவாட, உடன் வாழ்ந்து, பங்களிப்பு செய்து வாழ்தல் என்ற சிந்தனையோடு அதனை இணைக்க வேண்டும். சிறுபான்மை பற்றிய இக்கருத்தை கலாநிதி யூசுப் அல் கர்ளாவி, தாஹா ஜாபிர் அலவானி, தாரிக் ரமழான் போன்றோர் விரிவாக ஆராய்ந்துள்ளனர். அவை பற்றிய சரியான ஆய்வை எமது நிலத்தின் இயல்பைப் புரிந்து மேற்கொள்ள வேண்டும். எமது அடிப்படை பிரச்சினைக்கான சிந்தனை ரீதியான தீர்வு இதுவே.

அடுத்து நடைமுறையில் இதனை எவ்வாறு கொண்டு வரலாம் என்பது பற்றிய வேலைத்திட்டமொன்றுக்கு வர வேண்டும்.

Reply