எமக்குத் தேவைப்படும் பண்பாடு – ஒரு நிகழ்வு.

அவள் எகிப்தின் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் ஒரு மாணவி. தனது ஆசிரியைக்கும், தனக்குமிடையே ஒரு சுவரிருப்பது போல் அவள் அடிக்கடி உணர்வாள். இதற்கு என்ன காரணம்? அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனது இஸ்லாமியத் தோற்றம் காரணமா? என்னைப் போன்ற இதே தோற்றத்தில் பலர் உள்ளனரே! எனவே அது காரணமாக இருக்க முடியாதென்று அவளுக்குத் தோன்றும். நான் இஸ்லாமிய விவகாரங்களை மிகுந்த ஈடுபாட்டோடும், உணர்ச்சி பூர்வமாகவும் வாதிப்பேன். அதுதான் காரணமா? இருக்க முடியாது. என்னைப் போல் பலர் இப்படி இருக்கிறார்களே. அவளால் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தனக்கும் தனது விரிவுரையாளருக்கும் இருக்கும் தடையை நீக்க பல வழிகளிலும் முயன்று பார்த்தாள். அவை எப் பிரயோசனமும் அளிக்கவில்லை. மிகவும் கஷ்டப் பட்டு, மிகுந்த ஈடுபாட்டோடு ஒரு வருடகாலம் செலவிட்டு தான் சமர்ப்பிக்கும் ஆய்வுகளை நியாயமான எக்காரணமுமின்றி விரிவுரையாளர் மறுத்து விடுவார். தனது அந்த விரிவுரையாளருக்கும் தனக்குமுள்ள இத்தடை அவளுக்கு மிகுந்த மனக் கஷ்டத்தையும், கலக்கத்தையும் கொடுத்தது. எதிர்பாராத பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் அது கொண்டுவரலாம் என அவள் பயந்தாள்.

அந்த மாணவி ஒரு அல் குர்ஆன், ஹதீஸ் வகுப்புக்குப் போய் வருவாள். அங்கு தான் படிப்பவற்றை நடைமுறையில் பிரயோகிக்க வேண்டும் என்பது அவளது ஆசை. விரிவுரையாளருடனான பிரச்சினையின் போது அல் குர்ஆன், ஹதீஸை வைத்து இயங்கி இதற்குத் தீர்வு காண முடியுமா என சிந்தித்தாள். எனினும் விளைவெதையும் அவள் காணவில்லை.

ஒரு நாள் விரிவுரையாளர் மிகுந்த கடுப்புடனும், கவலையோடும் காணப்பட்டாள். “எனக்கு நான்கு வயதில் ஒரு பிள்ளை. அதற்கு வந்துள்ள நோயால் பேசவும் முடியா நிலைக்கு வந்து விட்டாள். இந்த நிலையின் தாக்கத்தால் உங்களோடு உறவாடுவதிலும், உதவுவதிலும் சில பாதிப்புகள் இருக்கக் கூடும்.” எனக் கூறிய விரிவுரையாளர் அவ்வாறு என் நடத்தை இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறினார்.

இப்போது அந்த மாணவி தனது உறவினர் ஒருவரின் பிள்ளைக்கு அதே நோய் வந்தமையை நினைவு கூர்ந்தாள். அத்தோடு கீழ்வரும் இறைவசனமும் அவள் மனதில் ஓடியது.
“மிகச் சிறந்த செயலால் தடுத்துத் தாக்கு. அப்போது உனக்கும் அவருக்குமிடையே உள்ள எதிர்ப்பு நிலை நீங்கி மிக நெருங்கிய நண்பன் போன்று அவர் ஆகிவிடுவார்.” (ஸூரா புஸ்ஸிலத்-34)

தனக்குத் தேவைப்பட்ட சாதனம் கிடைத்துவிட்டது என்றவள் உணர்ந்தாள். இந்த ஆயத் மூலம் இயங்கி தனது ஆசிரியைக்கு உதவுவோம் என அவள் தீர்மாணித்துக் கொண்டாள்.

இன்டநெட்டில் நுழைந்தாள். நோய் பற்றியும், அதற்குப் பரிகாரம் காண்பது சம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் திரட்டினாள். தனது உறவினரிமிருந்து குறிப்பிட்ட டாக்டரின் மெயிலையும் அவரது தொலைபேசி இலக்கத்தையும் பெற்றுக் கொண்டாள். நோய் பற்றியும், அதனைக் குணப்படுத்தும் முறை பற்றியும் அந்த உறவினரிடமிருந்து மேலதிகத் தகவல்களையும் பெற்றுக் கொண்டாள். இவ்வாறு ஒரு ‘flie’ஐயே தயாரித்த மாணவி தனது ஆசிரியையிடம் நம்பிக்கையிழக்கத் தேவையில்லை; நோய் குணமாக முடியும் என்ற நற்செய்தியோடு செல்லத் தீர்மாணித்தாள். இருந்த போதிலும் தனது விரிவுரையாளர் தன்னை சந்தோஷமாக விரவேற்காது போகலாம். சிலபோது வழமையாக தன்னிடம் காட்டும் வெறுப்போடு எதிர்கொள்ளலாம் என்றும் அவள் எண்ணத் தவறவில்லை.

விரிவுரையாளரின் அலுவலகத்திற்கு ஏறிச் செல்ல முன்னால் பரீட்சைகளின் பெறுபேறு வெளியாகியுள்ளதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்றாள். அங்கு போய்ப் பார்த்தாள். அவளை நிலைகுலையச் செய்யும் கசப்பான உண்மையை அங்கு கண்டாள். குறிப்பிட்ட அந்த விரிவுரையாளர் பாடத்தில் அவள் சித்தியடையவில்லை. கண் முன்னால் உலகமே சுற்றுவது போல் இருந்தது அவளுக்கு. ஒரு வருடமாக அந்த விரிவுயாளருடன் தான்பட்ட கஷ்டங்களை நினைவு கூர்ந்தாள். தனது ஆய்வுகளை அவர் மறுத்து வந்தமை, தனது எந்த உதவியையும் அவர் வரவேற்காமை. இவையெல்லாம் அவளது மனதில் ஓடியது. அவளது உணர்வுகளை மேலும் தூண்டிவிட்டது என்னவெனில் இம்முறைப் பரீட்சை யில் அவள் மிக அதிகமான கேள்விகளுக்கு மிகச் சரியாகவே பதில்கள் எழுதியிருந்தாள்.

இந்நிலையில்…

விரிவுரையாளரின் மகனுக்காகத் தான் தயாரித்து வைத்திருந்த அந்த ‘flie’ அவளது கையிலிருந்து நழுவி விழுந்தது. தனது ஆசிரியை வேண்டுமென்றே தன்னை ‘பெயிலாக்கி’ இருக்கக் கூடும் என்ற சிந்தனை வரும் போது அவள் மிகுந்த வேதனையுற்றாள்.

கீழே விழுந்த ‘பைலை’யும், சிதறிப்போன தாள்களையும் ஒன்று திரட்டி எடுத்துக் கொண்டாள். ஆசிரியையிடம் செல்லும் தீர்மாணத்தை மாற்றிக் கொள்வோம் என உறுதியாகவே சிந்தித்தாள். தனக்கு அநியாயம் செய்ததாகத் தான் உணரும் அப் பெண்ணுக்கு நான் ஏன் உதவ வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் மேலோங்கியது. வீட்டுக்குத் திரும்ப எத்தனித்தாள். எனினும் அவள் உள்ளிருந்து ஒரு குரல் அவளுடன் பேசியது:

“நீ சத்தியத்தில் உள்ளாய். இவ்விடயத்தை அப்பெண்ணோடு தொடர்பு படுத்தித்தான் பார்க்கிறாய் எனின் அவள் உன்னிடமிருந்து எந்த உதவியையும் பெறத் தகுதியில்லைதான். ஆனால் நீ இந்த ‘பைலைத்’ தயாரித்தமைக்கு அது தான் காரணமா? அப்பெண்ணிடம் என்ன மாறியிருக்கிறது? இவ்வாறான ஒன்றை நீ எதிர்பார்க்கவில்லையா?

பெண்ணே விழித்துக் கொள்… இறை திருப்தியை நாடி அல் குர்ஆனின் வசனமொன்றின் மூலம் நீ இயங்கத் தீர்மாணித்தாய். இப்போது நீ எவ்வாறு இயங்குவது எனத் தெரிவு செய்து கொள் – அல் குர்ஆனின் படியா அல்லது உனது மன உணர்வின்படியா? அந்த வசனத்தைப் பூரணமாக வாசி, உணர்வு பெறு.”

வசனம் பேசுகிறது:
“பொறுமையுடையோரே அந்த நிலையைப் பெறுவர். பெரும் பாக்கியம் உடையோரே அந்த நிலையைப் பெறுவர்.” (ஸூரா புஸ்ஸிலத் – 35)

உள்ளத்தின் அக் குரலைக் கேட்டதும் கண்ணீரை அவளால் கட்டுப் படுத்த முடியவில்லை – தனது இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு உதிர்ந்த அக்கண்ணீர்… தான் அனுபவிக்கும் அநீதியை உணர்ந்த அக் கண்ணீர் துளிகள்…

உள்ளத்தின் குரலுக்கு அவள் செவிமடுத்தாள். தனது உள்ளத்தின் உணர்வுகளைக் கட்டுப் படுத்திக் கொண்டாள். தனது ஆசிரியையின் அலுவலகம் நோக்கி உறுதியுடன் அடியெடுத்து வைத்து நடந்தாள். அனுமதி கேட்டாள்.

ஆசிரியை எழுந்து நின்றார். சித்தியடையாமைக்கான காரணம் கேட்டுத்தான் வந்திருக்கிறாள் என்று எதிர்பார்த்த அவர் தீர்க்கமாகவும், முடிவாகவும் பதில் சொல்லத் தயாராகி நின்றார்.

ஆனால் மாணவி ‘பைலைக்’ கொடுத்தாள்:
“இந்த பைலில் உங்களது பிள்ளையின் நோய் பற்றி, அதற்கான நிவாரணம் பற்றி பூரண தகவல்கள் உள்ளன. உங்களது பிள்ளையின் நோயைக் குணப்படுத்த இது மிகவும் பயன்படும். உங்களது மகனின் நோய் பற்றி கேள்விப்பட்ட நாளிலிருந்து இத்தகவல்களைத் திரட்டி வந்தேன். மேலும் பல தகவல்களை பெறலாம் என எதிர்பார்க்கிறேன். அவற்றை உங்களுக்கு அனுப்ப உங்களது ஈமெயிலைத் தந்தால் வசதியாக இருக்கும்.” என்றாள்.

விரிவுரையாளரால் பேச முடியவில்லை. திகைத்துப் போனாள். என்ன பதில் சொல்வதென்று அவருக்குத் தெரியவில்லை. நன்றி சொல்லக் கூட அவருக்கு முடியவில்லை. தனது ஈமெயிலை இயந்திரத்தனமாக எழுதிக் கொடுத்தார்.

அதனைப் பெற்றுக் கொண்ட மாணவி மிகுந்த பாரத்துடன் படிகளில் இறங்கிச் சென்றாள். கண்கள் கண்ணீர் வடிப்பதை அவளால் நிறுத்திக் கொள்ள முடியவில்லை. பிறர் கண்களில் படாமல் அதனை மறைத்துக கொள்ளவே முயன்றாள்.

நோய் பற்றியும், அதனைக் குணப்படுத்துவது சம்பந்தமாகவும் மேலும் தகவல்கள் கிடைத் போது அவற்றை தனது ஆசிரியைக்கு அனுப்பி வைத்தாள்.

அவரால் தனக்கிழைக்ப்பட்ட அநியாயத்தை அவள் மறந்துவிடவில்லை. தனது உணர்வுகளை இவ்வாறு கட்டுப்படுத்திக் கொள்வது மிகச் சிரமமாகவே அவளுக்கிருந்தது. தனது இறைவனிடம் அவள் கொண்டிருந்த அன்பே இவ்வாறான முடிவுக்கு அவளை வரச் செய்தது.

கொஞ்ச நாட்கள் சென்றது. மாணவியின் டெலிபோன் ஒலித்தது. எடுத்தபோது மறுமுனையில் தன் ஆசிரியை பேசுவதைச் செவியுற்றாள். பல்கலைக்கழகத்திற்கு உடனே வருமாறு ஆசிரியை வேண்டிக் கொண்டாள். அங்கு சென்ற மாணவி சற்று வெட்கத்தோடு கூடிய சூடான வரவேற்பை விரிவுரையாளரிடம் கண்டாள். ஆசிரியை கூறினாள்: அன்புக்குரியவளே நீ மிகுந்த ஈடுபாடும், கவனமும், முயற்சியும் கொண்ட மாணவி. எனவே துறைத் தலைவரிடம் இவற்றைச் சொல்லி நான் மீண்டும் உன்னைப் பரிசோதிக்க அனுமதி பெற்றுவிட்டேன். ஒரு மாதத்திற்குள்ளால் நீ பரிசோதிக்கப்படுவாய். சக மாணவிகளோடு அடுத்த கற்றல் பருவத்தில் நீ இணைந்து கொள்ள முடியுமாக இருக்கும்.

மாணவியின் முகம் மலர்ந்த்து. நான் கேட்பது உண்மைதானா? அவளால் நம்ப முடியவில்லை. இம்முறை அவள் திரும்பிச் செல்லும் போது மிகுந்த மகிழ்ச்சியுடன் படியிறங்கினாள். பறந்து செல்வது போலிருந்தது அவளுக்கு.

அல் குர்ஆனின் வழிகாட்டலின் கீழ் இயங்கும் பரீட்சையில் வெற்றி கண்டமையே அவளை மிகவும் சந்தோஷப்படுத்தியது.

அவள் தன் காரில் நுழைந்தாள். திறப்பை வைத்துத் திருப்பினாள்.
அவளது வாய் “உலகத்தாருக்கு ஓர் அருட்கொடையாகவே நபியே உம்மை நாம் அனுப்பி வைத்தோம்.” என்ற வசனத்தை ஓதியது.

“யா அல்லாஹ் நான் உனக்கு அடிமையாக இருப்பதில் பெருமைப் படுகிறேன். நீ என்னைக் கைவிட்டுவிடவில்லை. வழி காட்டலுக்கு ஒரு நூலையே தந்தாய்.”

அல் முஜ்தமஃ சஞ்சிகை
செப்டெம்பர் மாத இதழ்.

Reply