பிரச்சினைகள் – தீர்வு

 
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை 5 வகையானது எனக் கூறலாம்.

  1. நடத்தை : ஈமானிய நடத்தையில் பலவீனம், ஒழுக்க நடத்தையில் பலவீனம், சமூக நடத்தையில் பலவீனம், வீட்டில் தந்தையின் நடத்தையில் பலவீனம், முஸ்லிம் அல்லாதோருடனான நடத்தையில் பலவீனம், இப்படி நடத்தைப் பிரச்சினை முஸ்லிம் சமூகத்தை மிகக் கடுமையாக அடக்கியுள்ளது.
  2. பின்தங்கல் : நாம் பின்தங்கிய நிலையில் உள்ளோம். பாடசாலைக் கல்வி, இஸ்லாமியக் கல்வி என்பவற்றில் பின்தங்கிய வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம்.
  3. வினைத்திறன் : தனி நபர் வினைத்திறன், கம்பனிகள், வியாபாரத் தளங்களின் வினைத்திறன், விவசாய வினைத்திறன், பள்ளிகள், பாடசாலைகள், மத்ரஸாக்கள், இஸ்லாமிய இயக்கங்கள் என்பவற்றின் வினைத்திறன் இவை அனைத்தும் மிகப் பலவீனமாகவே உள்ளன. எனவே எமது ஆக்கம், வெளியீடு மிகக் குறைவு.
  4. சிந்தனைச் சிக்கல் : கருத்து வேறுபாடு ஒரு புறம், இறுக்கமான கடும் சிந்தனைப் போக்கு ஒரு புறம், சிறுபான்மை என்பதனை ஒரு கருத்தியலாகக் கண்டு கொள்கை, கோட்பாட்டுத் தெளிவின்மை ஒருபுறம் என்று மிகப் பாரியதொரு சிந்தனைச் சிக்கலில் நாம் உள்ளோம்.
    இஸ்லாமிய சட்டங்கள், கோட்பாடுகள், கொள்கைகளை நடைமுறையில் பிரயோகிப்பதிலும் ஒரு தடுமாற்றம், தெளிவற்ற நிலை எம்மில் காணப்படுகிறது.
    எனவே எமது ஸக்காத் நிறுவனம், வங்கி அமைப்பு, ஆன்மீக தர்பிய்யத் செயற்பாடுகள் அனைத்தும் எதிர்பார்க்கப்படும் பலனைக் கொடுக்கவில்லை.
  5. தலைமை : சிறந்த தலைமைத்துவமின்மை அடிப்படைப் பிரச்சினையாகும். ஆளுமையற்ற பலவீனமான, சிந்தனைத் தெளிவற்ற, தூய்மையற்ற தலைமைத்துவங்களையே எங்கும் அவதானிக்கிறோம்.

முதல் மூன்று பிரச்சினைகள் மிகப் பாரியன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சிந்தனை, தலைமைத்துவம் என்ற பிரச்சினைகளே அடிப்படையானவை. எனவே அவை தீர்க்கப்பட்டால் முதல் மூன்று பிரச்சினைகளும் இலகுவில் தீரும்.

துருக்கியும் மலேசியாவும் இதற்கு இரண்டு சிறந்த உதாரணங்கள். சரியான சிந்தனையைச் சுமந்த தலைமைத்துவங்கள் அங்கு உருவாகி தலைமை ஏற்ற போது 10 வருடங்களுக்குள்ளால் பின்தங்கியிருந்த அந்த நாடுகளே மாறின; முன்னணி நாடுகளாயின.

முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களிலும் இந்த உண்மையைக் காணலாம். ஐரோப்பிய சிறுபான்மையையும், ஆசிய சிறுபான்மையையும் ஒப்பிட்டு நோக்கினால் இந்த உண்மையைப் புரிய முடியும்.

எனவே இறுதி இரு பிரச்சினைகளுக்கும் அழுத்தம் கொடுத்து இப்பிரச்சினைகளை நன்கு ஆராய்ந்து திட்டமிட்டு இயங்குவோம். விடிவு இலகுவாகும். விடிவை நோக்கி நாம் பயணிப்போம்.

பிரச்சினைகள் பற்றிய தெளிவில்லாவிட்டால் எமது செயற்பாடுகள், திட்டமிடல்கள் சரியான பயனைக் கொடுக்காது. எமது ஆக்கமும் வெளியீடும் மிகச் சிறியளவினதாகவே இருக்கும்.

Reply