அல் காயிதாவின் நீட்சியாக “தாயிஷ்” (ISIS).

 

கிலாபத் பிரகடனப் படுத்தப்பட்டமை நவீன முஸ்லிம் சமூக நிகழ்வுகளில் மிகவும் வித்தியாசமானதொரு நிகழ்வு. கலீபாவாக பிரகடனப் படுத்தப்பட்ட அபூபக்கர் அல் பக்தாதியும் முஸ்லிம் சமூகத்திற்கு நன்கு அறிமுகமான நபரல்ல. அந்த வகையில் அதுவுமொரு வித்தியாசமான நிகழ்வே.

“அவர்களது விவகாரங்கள் அவர்களுக்கு மத்தியிலான கலந்தாலோசனை அடிப்படையில் அமைய வேண்டும்.” (ஸூரா ஷூரா: 42:38) என்கிறது அல்குர்ஆன்.

கிலாபத் என்பது அதிமுக்கிய முஸ்லிம் சமூக விவகாரம். இந்நிலையில் முழு முஸ்லிம் சனத்தொகையோடு ஒப்பிடும் போது சின்னஞ் சிறியதொரு போராட்டக் குழு கிலாபத் பிரகடனம் செய்கிறது. அது ஆலோசனைக்கு விடப்படவில்லை. முழு முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரம் பெறப்படவுமில்லை. எனவே இது எவ்வாறு இஸ்லாமிய ரீதியாகச் சரியாக அமைய முடியும்.

துருக்கி படிப்படியாக இஸ்லாமிய வாழ்வு நோக்கி வருகிறது. டியூனிஸியாவும் அப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது. மலேஷியாவில் அந்தவழியில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நாடாக இஸ்லாமிய மயப்பட்டு அவை ஒன்று திரண்டு ஆலோசித்து கிலாபத் பற்றிய ஒரு முடிவுக்கு வருவதே இயல்பான படிமுறை ஒழுங்கு; தர்க்க ரீதியான செயற்பாடு. அப்படியின்றி இஸ்லாமிய உலகின் ஒரு சிறு பகுதியான இராக்கின் ஒரு பகுதியைக் கைப்பற்றி, தனக்குக் கீழ் கிட்டத்தட்ட 10,000 போராளிகளை மட்டும் கொண்டுள்ள ஒரு போராட்டக் குழு கிலாபத் என்ற தனது தீர்மானத்தை 52க்கும் மேற்பட்ட முஸ்லிம் நாடுகள் மீதும், கோடிக் கணக்கான முஸ்லிம்கள் மீதும் திணிப்பது எந்தத் தர்க்கத்தில் சேர்ந்தது?! எப்படி இதனை நியாயப் படுத்த முடியும்?!

கிலாபத் என்ற கருத்தாக்கத்தை நவீன காலப் பிரிவில் எவ்வாறு நோக்க வேண்டும். கலீபா என்ற ஒரு தனி நபர் கோடிக் கணக்கான முஸ்லிம்களின் தலைவிதியைத் தீர்மாணிக்கும் தகுதி பெறலாமா?

50க்கும் மேற்பட்ட நாடுகளை அவர் தனது தனி சிந்தனையால் மட்டும் ஆள முடியுமா?

மொழி, இனம், வாழ்வமைப்பு, பிராந்திய சூழல், நாட்டின் உள்ளே வாழும் முஸ்லிம் அல்லாதோர் என்ற வகையில் நோக்கும் போது ஒவ்வொரு முஸ்லிம் நாடும் ஒவ்வொரு வகையில் வேறுபட்டு, பல வித்தியாசங்களுடன் அமைந்துள்ளன. இ்நத நாடுகள் அனைத்தையும் கலீபா என்ற தனி நபர் தன் தலையில் சுமப்பார் என்பதை எந்த வகையில் ஏற்றுக் கொள்ள முடியும்.

இப்பின்னணி அனைத்தையும் கவனமாக ஆராய்ந்து நவீன கால சமூக, பொருளாதார தொழில் நுட்ப நிலைகளுக்கேற்பவும், தேசிய, பிராந்திய, சர்வதேசய நிலைமைகளுக்கேற்பவும் கிலாபத் என்ற கருத்தாக்கம் மீள் கட்டமைப்புக்கு உட்படுத்தப் பட வேண்டும்.

இந்த வகையிலேயே அல் குர்ஆனோ, ஸுன்னாவோ கிலாபத்திற்கு ஒரு குறிப்பிட்ட வரையறுத்த வடிவத்தையோ, தோற்றத்தையோ கொடுக்கவில்லை என்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

இப்படியொரு பாரிய வேலைத் திட்டமாகவும், நவீனகால சூழலுக்கேற்ப ஆராய வேண்டிய தேவையும் கொண்ட “கிலாபத்” என்ற கருத்தியலை திடீரென நிலத்தில் காண முயல்வது உண்மையில் ஆச்சரியத்திற்குரியது. சிறுபிள்ளைத் தனமானது.

இப்பின்னணியில்தான் இப்பிரகடனம் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் கீழ்வருமாறு கூறுகிறார்கள்:

முஸ்லிம் அறிஞர்களுக்கான உலக ஒன்றியம்:

நடைமுறை யதார்த்தம் பற்றிய அறிவற்ற பிரிவினர், அஹ்லுஸ் ஸுன்னா பிரிவினர் தமது முழு சக்தியோடும் பங்கு கொள்கிற மக்கள் புரட்சியை உடைக்கும் செயற்பாடு இது.

மக்களுக்கு மத்தியில் கடும் போக்குக் கொண்டவர்கள் எனப் பிரசித்தி பெற்ற மக்கள் மத்தியில் எதிர்மறை தோற்றம் கொண்ட ஒரு குறிப்பிட்ட பிரிவினரோடு இஸ்லாமிய கிலாபத்தைத் தொடர்பு படுத்துவது என்பது ஒரு போதும் இஸ்லாமிய செயற்திட்டங்களுக்கு நன்மை செய்ததாக ஆகாது.

ராஷித் அல் கனூஷி: அறிவற்றதொரு செயற்பாடு, மக்களை ஏமாற்றும் தோற்றமொன்றையே இது வழங்கும். முஸ்லிம்களுக்கு மத்தியில் குடுட்டுத்தனமான போராட்டத்திற்கு இது வழிவகுக்கும்.

ஹாரித் லாரி தலைமை வகுக்கும் இராக் உலமா சபை: கிலாபத் பிரகடனம் இராக்கைத் துண்டாடவே வழிகுக்கும்.

இராக்குக்கும் ஷாமுக்குமான இஸ்லாமிய அரசு (ISIS) என்ற இந்த இயக்கம் அல் காயிதா இயக்கத்தின் நீட்சியாகும்.

அபூ முஸ்அல் அல் ஜர்காவி 2004 இல் இராக்கில் ஜமாஅத் அல் தௌஹீத் வ-அல் ஜிஹாத் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். பின்னர் அல் காயிதாவின் தலைவர் உஸாமா பின் லாத்தினுக்கு பைஅத் செய்தார்.

இவரது மரணத்தின் பின்னர் அபூ உமர் அல் பக்தாதி, அபூ ஹம்ஜா அல் முஹாஜிர் என்போர் தலைமை ஏற்றனர்.

இவர்களின் பின்னரே அபூ பக்கர் அல் பக்தாதி தலைமை ஏற்று கிலாபத்தைப் பிரகடனப் படுத்தினார்.

இவர்களோடு அல் காயிதாவின் போராட்டப் போக்கில் இன்னொரு காலப் பிரிவு தோற்றம் பெறுகிறது.

அல் காயிதாவும் அதனைத் தொடர்ந்த இந்த ஆயுத போராட்ட இயக்கங்களுக்குமான சிந்தனைப் பின்னணி ஸலபிஇஸமாகும் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

ஸலபிஸத்தின் சிந்தனையின் அடிப்படைப் போக்கைப் புரிந்து கொள்ள வேண்டும்:

  1. மிகவும் இறுக்கமான கடும் சிந்தனைப் போக்காளர்கள் அவர்கள்.
  2. பாரம்பரிய சிந்தனையை அடியொட்டியே அவர்களது சிந்தனை அமைகிறது. நவீன உலகின் பாரிய மாற்றங்கள், யதார்த்தங்களை ஆழ்ந்து ஆராய்ந்து அதற்கு ஏற்ப தமது இஸ்லாமிய செயற்திட்ட ஒழுங்கை அவர்கள் வகுத்துக் கொள்ளவில்லை. இப்பின்னணியில்தான் நவீன உலகின் நடைமுறை யதார்த்தம் என்ற பாரிய சுவரில் மோதி முஸ்லிம் சமூகத்தில் பல தாங்க முடியாத, அழிவுகளை அதிகரிக்கும், சின்னாபின்னப்படுத்தும் போராட்டங்களை அவர்கள் உருவாக்கி விட்டார்கள்.

இது அல் ஸலபிய்யத் அல் ஜிஹாதிய்யா – ஜிஹாதிய ஸலபிப் – போக்கு கொண்ட அனைத்து இயக்கங்களுக்குமான பொது உண்மையாகும்.

இப்போது அந்த ஸலபி ஜிஹாத் போக்கின் இன்னொரு காலக் கட்டத்தை நாம் பார்க்கிறோம்.

அல் காயிதா உலக வல்லரசுகளோடு குறிப்பாக அமெரிக்காவோடு போராடல் என்ற கொள்கை மீது தமது செயற்திட்டங்களை வகுத்தது. இக்கருத்தை அய்மன் லவாஹிரி “நபியின் கொடியின் கீழ் போராளிகள்” என்ற நூலில் விளக்குகிறார்.

ஆனால் இந்தப் போக்கு அபூ முஸ்அப் அல் ஜர்காவியோடு படிப்படியாக மாறியது. ஷீயா ஸுன்னாக்கலுக்கிடையிலான போராட்டக் கொள்கையாக அவா் அதனை மாற்றி விட்டார்.

அல் காயிதாவுக்கும் அதன் நீட்சிகளுக்குமிடையே உள்ள அடுத்த முக்கிய வெறுபாடு ஜர்காவி போன்றோர் அல் காயிதா யதார்த்தமாக எதையும் சாதிக்கவில்லை எனக் காணுகின்றனர். இந்த வகையில் ஒரு நிலத்தின் மீது ஆதிக்கம் பெற்று இஸ்லாமிய அரசொன்றை நிறுவ வேண்டும் என்ற கனவை அவர்கள் கண்டனர்.

உஸாமா பின் லாதின் மரணித்தமை, அவரின் பின்னர் மத்திய தலைமை ஒன்றின்றி உலகம் முழுக்க இயக்கம் சிதறி பல தலைமைகள் உருவானமை மேற்கூறிய நிலைக்கு இட்டுச் சென்றது.

இந்தவகையில் அபூ முஸ்அப் அல் ஜர்காவியோடு மிகவும் வித்தியாசப் பட்டுப் போனது அல் காயிதா இயக்கம். விளைவாக அல் காயிதாவுக்கும் இவர்களுக்குமிடையிலான கருத்து வேறுபாடு வலுத்தது.

இதன் மிக மோசமான விளைவை சிரியாவில் தெளிவாகக் காண்கிறோம். அபூ முஹம்மத் அல் கோலானி தலைமையிலான அல் நுஸ்ரா முன்னணி சிரியாவின் மிக முக்கிய போராட்ட முன்னணி. அல் காயிதா சிந்தனைப் போக்கைக் கொண்டது. இந்த இயக்கதிற்கும் இராக்குக்கும் ஷாமுக்குமான இஸ்லாமிய அரசு (ISIS) என்ற அபூ பக்கர் பக்தாதியின் இயக்கத்திற்கும் இடையே மிகக் கடுமையான மோதல் உருவாகி சிரியாவில் போராட்டமே பின்னடைந்தது.

அபூ பக்கர் அல் பக்தாதியின் இந்த இயக்கம் இந்த வகையில்:

  1. சிரியப் போராட்ட இயக்கங்களோடு மோதி சிரியப் புரட்சியையே பலவீனப் படுத்தியது.
  2. இஸ்லாமிய உலகோடு ஒப்பிடும் போது மிகச் சிறியதொரு நிலப்பரப்பில் திடீரென கிலாபத்தைப் பிரகடனப் படுத்தி முஸ்லிம் சமூகத்தில் கருத்து வேறுபாடுகளையும் இராக்கில் பிரிவினைகளையும் உருவாக்கிவிட்டது.
  3. ஷீயாக்களை விரட்டி, விரட்டி தாக்கல், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல்கள் மேற் கொள்ளல் போன்ற செயற்பாடுகளால் மேலும் மேலும் இஸ்லாமியப் பூமியைப் பற்றி எரிய விடுகிறது இந்த அமைப்பு.
  4. இப்போது பஷ்மரகா என்ற கோத்திரத்தோடு இவர்கள் போராடத் துவங்கியுள்ளனர். குர்டிஷ் இனத்தினரோடும் தமது போராட்டத்தை இவர்கள் ஆரம்பிக்கலாம் என்ற நிலை உள்ளது. இதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர்.

அத்தோடு மீண்டும் அமெரிக்கா இராக்கில் தலையிடும் நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு போராட்டப் போக்கையே மாற்றி சிதறடிக்கும் நிலையையே இவர்களது போக்கால் நாம் காண்கின்றோம்.

இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் அது இஸ்லாம் பற்றிய மிகப் பிழையான தோற்றத்தேயே உலகுக்கு வழங்கும்.

அல்ஜஸீராவின் பல ஆய்வுகளிலிருந்து.

Reply