சமூகத்தின் பலவீனர்கள்.

 

இறை தூதர் (ஸல்) பேசுகிறார்கள்:

சஃதிப்னு அபீ வக்காஸ் (ரலி) அவர்களைப் பார்த்து இறைதூதர் (ஸல்) சொன்னார்கள்:

உங்களில் காணப்படும் பலவீனர்களால்தான் உங்களுக்கு வாழ்க்கை வசதிகள் கிடைக்கப் பெறுகின்றன. உங்களுக்கு வெற்றியும் கிடைக்கப் பெறுகிறது. (ஸஹீஹ் அல் புகாரி)

ஹதீஸின் “ பலவீனர்கள் ” என்ற பிரயோகம் சமூகத்தின் அடிமட்ட மக்களைக் குறிக்கும். அதிகாரம், பணம், அந்தஸ்த்து என்பவையற்றுப் போனவர்களை அது விளக்குகிறது.
இந்த வகையானவர்களிடம் பெரும் பாலும் பெருமை, கர்வ உணர்வுகள் இருக்காது. செல்வத்தை, அந்தஸ்த்தை நம்பி வாழாத இவர்கள் தம் பிரச்சினைகளைத் தீர்க்க அடிக்கடி இறைவனை நோக்குவார்கள். எனவே இவர்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
இப்பின்னணியில் இவர்களது பிரார்த்தனைகள் அல்லாஹ்விடம் அங்கீகாரம் பெற்றிருக்கும்.

இவர்களது இந்த பிரார்த்தனைகள் ஊடாகவல்லவா நீங்கள் வாழ்க்கை வசதிகளுடனம், வெற்றிகளுடனும் வாழ்கிறீர்கள். எனவே, இறை தூதர் (ஸல்) அவர்கள் சமூகத்தை விளித்து இங்கே பேசுகிறார்கள்.

இந்த ஹதீஸ் தரும் ஒரு கருத்து இது.

சமூகத்தின் உற்பத்தித் தொழிற்பாட்டில் முதுகெலும்பாக அமைபவர்கள் இந்த அடிமட்ட உழைப்பாளிகள். விவசாயப் பகுதியிலும் சரி, கைத் தொழில் பகுதிகளிலும் சரி – நிலங்களிலும், தெழிற்சாலைகளிலும் சரி- இவர்களது சக்தி பிரதான இடம் பெறுகிறது. எனவே, உணவுப் பொருட்களை, வாழ்க்கை வசதிகளை சமூகம் பெறுவது இவர்களால்தான்.

இராணும், படைப்பிரிவுப் பகுதியிலும் இராணுவ வீரர்களில் முதுகெலும்பாக அமைபவர்களும் இந்த சமூக அடிமட்ட மக்களே. எனவே, யுத்தங்களின் போது சமூகம் வெற்றியை சாதிப்பதுவும் இவர்களால்தான்.

இவ்வாறு இந்த ஹதீஸ் சமூகத்தின் யதார்த்த மொன்றை சுட்டிக்காட்கிறது. அதனூடாக அத்தகைய மக்கள் உரிய முறையில் கவனிக்கப் பட வேண்டுமெனவும் இறை தூதர் (ஸல்) உணர்த்துகிறார்கள்.
இது இந்த ஹதீஸ் தரும் இன்னொரு கருத்து.

இதனை இறை தூதர் (ஸல்) கீழ்வருமாறு மேலும் விளக்குகிறார்கள்:

பலவீனன் தனக்கான உரிமையை துன்பங்களுக்கு உட்படாதும், அதனால் கலக்கமடையாதும் பெறக் கூடிய சமூகமாக ஒரு சமூகம் இல்லாத போது அது தூய்மையற்ற, புனிதமற்ற சமூகமாகப் போகிறது.
(அறிவிப்பாளர்: அபூ ஸயீத் அல் குத்ரி (ரலி), அபூயஃலாவின் பதிவு, அறிவிப்பாளர் வரிசை இமாம் புகாரியின் அறிவிப்பாளர் வரிசையாகும், தபரானியின் அவ்சத் கபீர் இரு கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது. அதன் அறிவிப்பாளர் வரிசையும் நம்பிக்கைக்குரியது)

இறை தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு யூதர் தான் கடனாகக் கொடுத்த பேரீத்தம் பழத்தைப் பெறுவதற்காக வருகிறார். இறை தூதருடன் கடுமையாக வார்த்தையாடுகிறார். அப்போது நபித் தோழர்கள் அவரைத் தடுத்துத் தாக்க முனைகிறார்கள். அதனைத் தடுத்த இறை தூதர் (ஸல்) கூறினார்கள்:

“ஒரு சமூகம் தன் பலவீனர்களுக்கு துன்பங்கள் விளையாது உரிமைகளைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் அச்சமூகம் தூய்மை பெறாது, புனிதம் பெறாது. அல்லது அந்த சமூகத்திற்கு அல்லாஹ் அருள் புரியமாட்டான்.” என்று இறை தூதர் (ஸல்) கூறினார்கள்.
(அறிவிப்பாளர் அப்துல்லா இப்னு சுப்யான். – தபரானி-அவ்ஸத், அல் பஜ்ஜார்)

மேலும் இறை தூதர் (ஸல்) விளக்குகிறார்கள்:

கூலி வேலை செய்வோருக்கு அவர்களது வியர்வை காய முன்னால் கூலியைக் கொடுத்து விடு.
(அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) – ஸுனன் இப்னு மாஜா)
(அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி) – தபரானி, அவ்ஸத்)

மூன்று பேருக்கு எதிராக அல்லாஹ் இருப்பான் என்று கூறிய இறை தூதர் (ஸல்) அவர்களில் ஒருவராக கீழ்வருபவரையும் குறிப்பிட்டார்கள்.
“ஒரு மனிதன் வேலைக்காக ஒருவரை அமர்த்துகிறான். பூரணமாக வேலை வாங்கிக் கொண்டு அவனுக்கான கூலியைப் பூரணமாகக் கொடுக்கிறானில்லை.
(ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு சமூகம் இஸ்லாமிய சமூகப் பண்பைப் பெற்றுள்ளதா? அந்த வகையில் அது தூய்மையாக உள்ளதா? இறையருள் பெற்றுள்ளதா? என்பதை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.

பள்ளிகளிலும், வீடுகளிலும் நிகழும் வணக்க வழிபாடுகளை மட்டும் நோக்கிப் போதாது. வேலைத் தலங்கள், விவசாய நிலங்களிலும் அது நோக்கப் பட வேண்டும் என்று இந்த ஹதீஸ் விளக்குகிறது.

ஒரு சமூகம் தூய்மை பெற வேண்டுமானால், இறையருள் பெற வேண்டுமானால் அந்த சமூகத்தின் பலவீனன் தன் உரிமைகளைக் கஷ்டமின்றிப் பெற வேண்டும் என இறைதூதர் இங்கே விளக்குகிறார்கள். எனவே இப்பகுதி பற்றி முஸ்லிம் சமூகம், முஸ்லிம் தனிநபர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

(யூசுப் அல் கர்லாவியின் من فقه الدولة في الإسلام -இஸ்லாத்தில் அரசு பற்றிய சில ஆய்வுகள்- என்ற நூலிலிருந்து இங்கு வந்த ஹதீஸ்கள் பெறப்பட்டன.)

Reply