நோன்புப் பெருநாள் – கருத்தும், பொருளும்

 

நீங்கள் குறிப்பிட்ட தொகை நாட்களைப் பூரணப் படுத்தி, உங்களுக்கு அவன் வழிகாட்டியமைக்காக அவனைப் பெரியவனாகக் கண்டு போற்ற வேண்டும்; அத்தோடு நீங்கள் நன்றியும் செலுத்தலாம் என்பதற்கான ஏற்பாடே இதுவாகும். (ஸூரா அல் பகரா – 185)

நோன்பு பற்றிய வசனங்களில் ஒரு பகுதியை இவ்வாறு ஸூரா பகரா முடித்து வைக்கிறது. நோன்பு என்பது மனிதன் தன்னைத் தூய்மைப் படுத்திக் கொளவதற்கான ஓர் உயர்ந்த வழிகாட்டல். அவ்வாறு அவன் நோன்பின் நாட்களைப் பூரணப் படுத்தும் போது இறைவழிகாட்டலாக உணர்கிறான். அது தனக்கும், தனது சமூகத்திற்கும் தந்த உயர்ந்த பயன்களை கண்கூடாகப் பார்க்கிறான். எனவே நோன்பு முடிந்ததும் அடுத்த நாளில் – பெருநாளில் – தக்பீர் சொல்லி இறைவனைப் போற்றுகிறான். நன்றி தெரிவிக்கிறான்.

இந்தவகையில் இந்த வசனம் அல்லாஹ்வைத் தக்பீர் செய்தல், நன்றி தெரிவித்தல் என்று பெருநாளை எமக்கு அறிமுகப் படுத்துகிறது. நோன்பை சரியாகப் பிடித்து, உரிய முறையில் அதனைப் பேணிக் கடைபிடித்து, அந்நாட்களுக்கான வணக்க வழிபாடுகளை உயிரோட்டமாகப் பேணிச் செய்திருந்தால் உள்ளத்தில் ஒளி தோன்றும், உடம்பில் ஓர் ஆரோக்கியம் உணரப் படும். உறவினர்களோடு சமூக உறவு உருவாகும். சமூகம் தனது, உடைவுகளையும், குறைபாடுகளையும், கோளாறுகளையும் சீர் படுத்தியிருக்கும். எனவே இத்தகைய மனிதனின், சமூகத்தில் பெருநாள் உயிரோட்டமிக்க பெருநாளாக இருக்கும். இறை வழிகாட்டலின் உயர்வை உணர்ந்து அல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர் என இறைவனைத் துதிபாடும் பெருநாளாக அமையும்; நன்றி தெரிவிக்கும் உயர் நாளாக இருக்கும்.

நோன்பு நாட்கள் பல வகை மேலதிக உணவுப் பொருட்களின் நாட்களாக, அதிகமதிகம் தூங்கும் நாட்களாக, நோன்பின் வணக்கங்களோடு தொடர்பற்ற நாட்களாக அல்லது உயிரோட்டமற்ற தொடர்பு கொண்ட நாட்களாக அமைந்திருந்தால் பெருநாளும் ஏனைய நாட்கள் போன்று ஒரு சாதாரண நாளே; சுவையான உணவுப் பொருட்களினதும், அழகிய உடைகளினதும் நாள் மட்டுமே. இறைவழிகாட்டலினை விளங்கி, உயர்த்தி துதிக்கும் நாளல்ல அது; இறைவனைப் போற்றி, நன்றி தெரிவிக்கும் நாளுமல்ல அது.

29 அல்லது 30 நாட்கள்; ஆன்மீக உலகின் உயர்ந்த நாட்கள்.
சிறந்த ஒழுக்கங்களையும், பண்பாடுகளையும் பயிலும் பயிற்சிப் பாசறையின் நாட்கள். பெருநாள் அந்த நாட்களின் உயர்வை உணரும் நாள்.

வாசக சகோதரர்களே,
நோன்புப் பெருநாளின் வாழ்த்துக்கள் உங்களுக்கு.

முஸ்லிம் உம்மாவே,
அல்லாஹ்வின் அருளும், பாக்கியமும் இப்பெருநாளில் உன்மீது சொரியட்டும்.

Reply