இராக்: புரட்சியும், போராட்டமும்

இராக் அரபுலகின் மிகப் பெரும் நாடு. மிக வளமிக்க நாடு. இராணுவ பலத்தில் முன்னணி நாடு. முதன் முதலாக அரபுலகில் அணு உலையை உருவாக்கிய நாடு. சதாம் ஹுசைனின் தூர நோக்கற்ற, நுணுக்கமற்ற போராட்டத்தால் அது அழிவின் பக்கம் இழுத்துச் செல்லப்பட்டது. அமெரிக்காவின் படையெடுப்பு அதனை சீரழித்து சின்னாபின்னமாக்கி விட்டது.

இறுதியில் அமெரிக்கா இராக்கிற்கு ஓர் அரசைக் கொண்டு வந்தது. நூரி மாலிகியின் தலைமையிலான அவ்வரசு முழுமையாக ஷீயா சார்பானது. ஈரானின் கீழ் இயங்குவது. நூரி மாலிகியின் அரசின் பின்னான ஈராக்கிய நிலையை விளக்கும் ஈராக்கிய அஹ்லுஸ் ஸுன்னா முப்தி, கலாநிதி ராஉர் ராபியீ கீழ்வருமாறு கூறுகிறார்.

“அஹ்லுஸ் ஸுன்னா பிரிவினர் இக்காலப் பிரிவில் புறம் தள்ளப்பட்டனர். ஒதுக்கப்பட்டனர், ஒடுக்கப்பட்டனர். 11 வருடங்களாக இந்நிலை தொடர்ந்தது. ஈரானில் பயிற்றப்பட்ட ஷீயா ஆயுதக் குழுக்கள் கொலை, கொள்ளை, சித்திரவதை, பெண்களை அபகரித்து மானபங்கப்படுத்தல் என்று பல்வேறு அநியாயங்கள் செய்து ஈராக்கின் பல மாகாணங்களில் சுற்றித் திரிந்தனர். நாம் எத்தனையோ முறை ஷீயா தலைமைகளோடு பேசினோம். ஈராக் அரசிடம் இந்நிலையை அகற்றுமாறு கேட்குமாறு வேண்டினோம். அதனால் எப்பயனும் கிடைக்கவில்லை.”

இத்தகையதொரு பாரிய அநியாயத்தின் பின்னணியிலேயே ஈராக்கின் அஹ்லுஸ் ஸுன்னாக்களின் தலைமைகள் எழுந்தன. அரபு வசந்தத்தின் தோற்றமும் இத்தகையதொரு எழுச்சிக்கு தூண்டு கோளாகியது. சாத்வீகப் போராட்டமாக அரபு அஹ்லுஸ் ஸுன்னாக்கள் இதனை ஆரம்பித்து வைத்தனர். ஆனால் நூரி மாலிகி இதற்கு எதிராக வன்முறையைப் பயன்படுத்தத் துவங்கினார். இந்நிலையில் சாத்வீகப் போராளிகள், பல்ளூஜா, அன்பார் பிராந்தியங்களில் அரச படையோடு மோதினர். அது படிப்படியாக போராட்டமாக வலுத்தது. ஜூன் 10ம் திகதி முதல் அரச படைகளோடு இவர்கள் ஆயுத போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்தப் போராட்டத்தின் இடை நடுவேதான் “ஈராக்குக்கும் ஷாமுக்குமான இஸ்லாமிய அரசுக் கட்டமைப்பு” (ISIS) என்ற இயக்கம் இணைந்தது. போராட்டத்தின் இந்த இறுதி நாட்களில் மிக வேகமாக இந்த எதிர்ப் போராட்டம் சாதித்தது. ஈராக்கில் போராடுவோர் (داعش/ ISIS) மட்டுமல்ல. அவர்கள் தான் முதன்மைப் போராளிகளுமல்ல என்ற உண்மை புரியப்பட வேண்டும்.

ஈராக்கில் போராடும் பிரிவினர்கள் யார். அவர்களது பின்னணியென்ன என்பது பற்றிய அறிக்கையை அல் ஜஸீரா தயாரித்து வெளியிட்டது. அதனை சுருக்கி கீழே தருகிறோம்.

  1. இராணுவ சபை:

    2013ன் இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், அரசபடைகளுக்குமிடையிலான மோதல் அன்பார் மாகாணத்தில் துவங்கிய போது இந்த சபை அமைக்கப்பட்டது. 2014 ஜனவரி நடுப்பகுதியில் “ஈராக் புரட்சியாளர்களுக்கான பொது இராணுவ சபை” என்ற பெயரின் கீழ் பல் வேறு மாகாணங்களும் இணைந்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த சபையின் உண்மை நிலை பற்றி மிகச் சரியாகத் தெரியவில்லை. இச்சபை முன்னால் அதியுயர் இராணுவத் தளபதிகளை உள்ளடக்கியிருந்தது. இச் சபை கீழ்வரும் பல பிரிவினர்களை கொண்டுள்ளது.

    1. நக் ஷபந்தி தரீக்காவை சேர்ந்தோர்:
      பல ஆயிரம் போராளிகளை கொண்ட ஸூபிப் பிரிவினர்கள் இவர்கள். அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை அடுத்து இவர்கள் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடினார்கள். முன்னால் தலைவர் சதாம் ஹுசைனின் உதவி ஜனாதிபதி இஸ்ஸத் தவ்ரி இவர்களுக்கு நெருக்கமானவர்.

      யுத்த நிலைகளை பொறுத்தவரையில் தனியான போராட்டக் கொள்கை கொண்டவர்கள் இவர்கள்.இராக்கின் கலைக்கப்பட்ட படையின் போராட்டக் கட்டமைப்பை இவர்கள் பின்பற்றுகின்றனர். 25 – 30 கிலோ மீற்றர் செல்லக்கூடிய ஏவுகனைகளை உள்நாட்டிலேயே இவர்கள் ஆக்கியுள்ளார்கள்.

      நெய்நெவே, கர்கூர், பக்தாதின் சில பகுதிகளில் இவர்களது செயற்பாடு உள்ளது. மவ்ஸிஸ் மாகாண நிர்வாக இயக்கத்தில் ஒரு பங்கை இவர்கள் பெற்றுள்ளனர்.

    2. மஜ்லிஸ் அல் அஷாயிர் (கோத்திரங்கள் சபை):

      70ற்கும் அதிகமான கோத்திரங்களை இச்சபை அடக்கியுள்ளது. அவை அரபு அஹ்லுஸ் ஸுன்னா கோத்திரங்களாகும். 40ற்கும் மெற்பட்ட போராளி குழுக்களை இவர்கள் கொண்டுள்ளனர். ரமாதி, காலிதிய்யா, கரமா, பள்ளூஜா போன்ற பல நகர்களிலும் அன்பார் மாகாணத்தின் நகர்கள், கிராமங்கள் பலவற்றிலும் இவர்கள் காணப்படுகின்றனர்.

      நெய்நவே, சலாஹுத்தீன் மாகாணங்களிலும் தியாலி மாகாணத்தின் வடக்கு,கிழக்குப் பகுதிகளிலும் இவர்கள் காணப்படுகின்றனர்.

      இச்சபையின் போராளிகள் ஏனைய அஹ்லுஸ் ஸன்னா போராளிகளோடு ஒப்பிடும் போது மிக அதிமாக உள்ளனர். ஆயுதப் போராளிகள் பல்லாயிரக்கணக்கில் இச்சபையில் உள்ளனர்.

      முன்னால் ஈராக்கிய படையின் இராணுவத் தளபதிகள் இச்சபையின் பல இராணுவப் பிரிவுகளை வழிநடாத்துகின்றனர். படைத் தளபதிகளையும், கோத்திரத் தலைவர்களையும் கொண்ட பொதுத் தலைமையும் இதற்குள்ளது. பெரியதொரு ஆயுதக் கையிருப்பும் இச்சபையிடம் உள்ளது. கனரக ஆயுதங்களையும் அது கொண்டுள்ளது.

  2. பாத் ஷோஷலிஸ கட்சியினர்:

    அமெரிக்கப் படையெடுப்புக்கு முன்னர் பல மில்லியின் ஈராக்கியர்கள் இக்கட்சியில் இருந்தனர். பின்னர் ஆட்சி உடைந்து சிதறிப் போனது. தற்போது பல ஆயிரக்கணக்கான பாத் கட்சியினர் ஈராக்கின் பல பகுதிகளில் செயற்படுகின்றனர். இவர்களில் முன்னால் இராணுவ வீரர்களும் உள்ளனர். கடைசியாக நடந்த போராட்டங்களின் போது இராணுவ சபையின் கீழ் இவர்கள் போராடினர்.

  3. இருபதுகளின் புரட்சிப் படை:

    இது ஈராக்கின் முதல் ஜிஹாத் இயக்கமாகும். பக்தாதிலிருந்து இது ஆரம்பித்தது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான 1920ம் ஆண்டு புரட்சியை இதன் பெயராக இவ்வியக்கம் கொண்டுள்ளது.

    இது ஒருமைப்பாட்டுத் தேசியம் என்ற சிந்தனைப் போக்கைக் கொண்டதாகும். பல ஆயிரம் அங்கத்தவர்களைக் கொண்ட இவர்கள் ஆயுதப் போராளிகள் எனவும், உதவியாளர்கள் என்றும் காணப்படுகின்றனர். ஸலபி, ஸூபி தேசிய சிந்தனைப் போக்குடையோர் எனப் பலரையும் இவ்வியக்கம் அடக்கியுள்ளது.

    கோத்திரங்களுடனும் அமெரிக்க, மாலிகி அரசின் எதிர்ப்பாளானர்களான ஷியாக்கள் சிலபேருடனும் இவர்களுக்கு நல்லுறவு உள்ளது. மாலிகி அரசோடு ஒத்துழைத்தாலும் இராக்கியர்கள் யாரையும் கொல்லக் கூடாது என்ற கொள்கை உடையவர்கள் இவர்கள்.

    பக்தாத், அன்பார், ஸலாஹுத்தீன், கர்கூகின் ஒரு பகுதி என்ற பகுதிகளில் இவர்களுக்கு ஆதரவு உள்ளது.

    தலை நகரைச் சுற்றியுள்ள 3 நகர்களை ஏனைய போராளிக் குழுக்களோடு சேர்ந்துக் கைப்பற்றுவதில் இது வெற்றியடைந்தது.

  4. ஈராக்கின் இஸ்லாமியப் படை:

    2004ல் உருவாகியது. இராக்கின் அரபு அஹ்லுஸ் ஸுன்னா நகர்களில் இது பரவியுள்ளது. இது மூன்றாவது பெரும் இயக்கமாகும். தனது போராளிகளுக்கு தனியானதொரு போராட்ட இராணுவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள ஒரே இயக்கம் இதுவாகும்.

    2006ம் ஆண்டு ஆயுத போராட்டத்தை நிறுத்திய இவ்வியக்கம் அரசியல், ஊடகத் துறைகளில் வேகமாக ஈடுபாடு காட்டியது. இறுதியில் ஈராக்கில் உருவான மோதல்களின் பின்னர் மீண்டும் போராட்ட நிலைக்கு அது வந்துள்ளது. இவர்கள் அல் இஃவான் அல் முஸ்லிமூன் இயக்க சிந்தனைக்கு நெருக்கமானவர்கள்.

    இவை தவிர ஜமாஅத் அன்சார் அல் இஸ்லாம் என்ற ஸலபி இயக்கமும், முஜாஹிதீன் படை என்ற இயக்கமும் காணப்படுகின்றன.

  5. இராக்கிலும் ஷாமிலுமான இஸ்லாமிய அரசுக் கட்டமைப்பு (ISIS):

    இப்பிரிவினரின் ஆரம்பம் 2004ல் தௌஹீத் வல் ஜமாஅத் என்ற அபூ முஸ்அப் ஜர்காவி அமைத்த இயக்கமாகும். 2006ல் ஜர்காவி தான் அல் காயிதா இயக்கத்தின் தலைவர் உஸாமா பின் லேடனுக்கு பைஅத் செய்ததாக அறிவித்தார்.

    எனினும் 2006ன் இறுதிப் பகுதியில் அமெரிக்காவின் தாக்குதல் ஒன்றின் போது ஜர்காவி கொலையுண்டார். அபூ ஹம்சா அல் முஹாஜிர் அதன் பின்னர் தலைமை ஏற்றார்.

    அத்தோடு இராக்கிற்கான இஸ்லாமிய அரசு என்ற கட்டமைப்பு உருவாகியது. அதற்கு அபூ உமர் பக்தாதி தலைமை தாங்கினார்.

    2010 ஏப்ரல் 14ல் அபூ உமரும், முஹாஜிரும் அமெரிக்கத் தாக்குதலொன்றின் போது கொலையுண்டனர். இதற்குப் 10 நாட்களின் பின்னர் அபூ பக்கர் அல் பக்தாதி கலீபாவாகவும், நாஸிர்-லி-தீனிலில்லாஹ் போர் மந்திரியாகவும் நியமனம் பெற்றனர்.

    அபூ பக்கர் பக்தாதி இராக்கை சேர்ந்தவர்; 1971 சாமிராவில் பிறந்தார் என நம்பப்படுகிறது.

    அல்காயிதாவின் சிந்தனைப் போக்கு கொண்ட இவ்வியக்கம் தற்போது அல் காயிதாவிலிருந்து பிரிந்து தனியாக இயங்குகிறது.

    இப்பிரிவினரின் போராளிகள் ஏற்கனவே சச்னியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் போராடினர். பெரும் பாலும் இப்பிரிவினரின் தலைமைகள் இராக் அல்லது லிபியாவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

    சிரியாவில் போராடும் இவர்கள் அங்கு போராடும் “நுஸ்ரா முன்னணி” என்ற இயக்கத்தோடும், சிரியா சுதந்திரப் படையோடும் மோதிக் கொண்டனர். இவர்களது அதி தீவிர சிந்தனையும், அதிகாரத்தை தம் கையினுள்ளே மட்டும் வைத்துக் கொள்ள முயலும் இவர்களது போக்குமே இதற்கு அடிப்படைக் காரணமாகும்.

    கிலாபத் என்பதுவும், கலீபா தலைமை என்பதுவும் முழு இஸ்லாமிய உலகும் இணைந்து தீர்மாணிக்கப் பட வேண்டிய விடயம். ஆனால் இராக், சிரியாவின் ஒரு போராளிக் குழுவாக இருக்கும் இவர்கள் ஒரு தலைப்பட்சமான கிலாபத் பிரகடனத்தை செய்தமை எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எனவேதான் இஸ்லாமிய உலகின் அறிஞர்களும், இராக்கின் அறிஞர்களும், உலமா சபைகளும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

    இராக்கின் போராட்டத்தில் இவ்வளவு பாரிய வெற்றிக்கு ISIS போராளிகள் மட்டும் காரணமல்ல என்பது ஏற்கனவே விளக்கிய விடயங்களிலிருந்து தெளிவாகும்.

    இராக்கின் எதிர்கால தலைவிதியைத் தீர்மானிப்பதில் பல சக்திகள் பங்களிப்பு செய்ய முடியும்.

      1. கோத்திரங்கள் சபை போன்ற பல்வேறு போராளிக் குழுக்களும், ISIS தவிர்ந்த ஏனைய போராளிக் குழுக்களும் ஒற்றுமைப்பட்ட நிலைக்கு வர நிறைய இடமுள்ளது.

        அவ்வாறான ஒரு நிலை வரும் போது இராக்கின் இன்னுமிரு பெரும் சக்திகளான குர்திஷ் இனத்தவரும், ஷீயாப் பிரிவினரும் பேச்சு வார்த்தைகளின் விளைவாக இராக்கின் ஒருமைப்பாட்டையும், நலன்களையும் காக்கும் நிலைக்கு வர இடமுள்ளது.

        ஆனால் “இராக்கும் ஷாமுக்குமான இஸ்லாமிய அரசு” (ISIS) என்ற அமைப்பு இந்த நிலையைக் குழப்பிவிடும் சந்தர்ப்பமுள்ளது. தாமே கிலாபத், கலீபா என ஒரு தலைப் பட்ச கிலாபத் பிரகடனமும் அவர்களது அதி தீவிர சிந்தனைகளும் பேச்சு வார்த்தைகள் ஊடே சிறந்த, நலன் பயக்கும் முடிவுகளுக்கு வருவதற்கு பெரும் தடையாக இருக்க முடியும்.

      2. இராக்கின் பேராளிக் குழுக்கள் தம்முள்ளே மோதிக் கொள்ளல், ஷீயாக்கள் ஈரான் உதவியோடு போராடும் நிலைக்கு வரல், அதாவது ஈரானின் பாரிய தலையீடு, குர்டிஷ் இனத்தார் தமக்கான தனித் தாய் நாடு கோரல் போன்ற அதி பயங்கர நிலைகளும் இராக்கில் உள்ளது.

இந்த அபாயங்கள் அனைத்தையும் தாண்டி வரும் ஆற்றலும், திறமையும், அரசியல் நுணுக்கமும் மஜ்லிஸ் அல் அஷாயிர், இருபதுகளின் புரட்சிப்படை, இராக்கின் இஸ்லாமியப் படை ஆகிய பிரிவினருக்கு உண்டு. அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமேயானால் இஸ்லாமிய உலகுக்குக் கிடைத்த பெரு வெற்றியாக அது அமையும். சர்வதேசிய சதித்திட்டங்கள், ஈரானின் சதி முயற்சிகள், ISIS போன்ற தீவிரவாதிகளின் செயற்பாடுகள் முன்னே இதனைச் சாதிப்பது மிகச் சிரமமானதே. எனினும் அல்லாஹ் முஸ்லிம் சமூகத்தைக் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்.

Reply