காஸா, இஸ்ரேல் யுத்தம் – பொருளும், விளைவுகளும்

 

காஸா, இஸ்ரேல் யுத்தம் மிகப் பாரிய அழிவுகளை நிகழ்த்தியுள்ளது. 350க்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் ஷஹீதாகியதோடு காயப்பட்டவர்கள் 3000க்கும் அதிகமாக உள்ளனர். பொருள் அழிவோ மிகப் பாரியது. காஸாவுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான இராணுவ சம நிலை மிகவும் இடைவெளி கொண்டது. இஸ்ரேல் ஓர் அணு ஆயுத நாடு. மிக நவீன இராணுவம் அதனுடையது. அதன் ஆயுதங்கள் மிக நவீனமானவை. பாரியவை. நுணுக்கமானவை. காஸா ஒப்பிட முடியாதளவு இந்தவகையில் சிறியது. அது ஒரு பெரும் வளர்ச்சியடைந்த நாடல்ல. பாரிய இராணுவ கட்டமைப்பைக் கொண்டதுவுமல்ல. போதாமைக்கு அனத்துப் பக்கத்தாலும் மூடி முற்றுகையிடப்பட்ட நாடு. ஆயுதங்களை காஸாவின் உள்ளே கொண்டு வருவது என்பது மிகப் பாரியதொரு வேலைத்திட்டம். இந்த வகையான இரு நாட்டிற்குமிடையிலான யுத்தமென்பதுவும், காஸா அந்த யுத்தத்தில் விழுந்து விடாமல் பல நாட்களாக நின்று பிடிக்கிறது என்பதுவும் மிகவும் ஆச்சரியமானது; அற்புதமானது.

இப்படியானதொரு சின்னஞ்சிறிய நாடு தனது எளிமையான ஆயுதங்களுடன் போராடுவது பிரயோசனம் தருமா? இது தேவைதானா? என்ற கேள்விகள் கூட எழும்பக் கூடும்.

இங்கே இப்பகுதியில் கவனத்தில் கொள்ள வேண்டிய உண்மைகளைத் தருவோம்:

பலஸ்தீன் ஒரு புனித பூமி. பைதுல் முகத்தஸ் முதல் கிப்லா. இந்நிலையில் இவற்றைப் பாதுகாப்பதுவும், அவற்றை மீட்டி பழைய நிலைக்குக் கொண்டு வருவதுவும் சமூகக் கடமை.

இஸ்ரேல் ஒரு வெறும் நாடு அல்ல. அரபு உலகில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் நலன்களைப் பாதுகாப்பதை இலக்காகக் கொண்ட நாடு. அப் பிராந்தியத்தில் ஆதிக்கமும், முதல் தர நாடாகவும் தன்னை ஆக்கிக் கொள்ளவிரும்பும் நாடு. இந்தப் பின்னணியில் அப்பிராந்திய நாடுகளின் உள் விவகாரங்களில் எல்லாம் தலையிட்டு அவற்றைப் பலவீனப் படுத்துவதில் முனைந்து நிற்கும் நாடு.

இந்தப் பின்னணியிலிருந்தே இந்தப் போராட்டங்களை நோக்க வேண்டும். மதிப்பீடு செய்ய வேண்டும்.

இஸ்ரேல் 1948ம் ஆண்டு ஏற்கனவே இருந்த அரபுக் குடிமக்களை அழித்தொழித்து விட்டு அங்கே உருவாகியது. இப்பின்னணயில் அரபு மக்களின் சடலங்கள் மீதும், மண்டையோடுகள் மீதும் அந்த நாடு உருவாகியது. பயங்கரவாத செயற்பாடுகளும், வரம்புமீறிய வன்முறைகளுமே அந்த நாட்டை உருவாக்கியது.

இந்தவகையில் இஸ்ரேல் அனைத்து நாடுகளையும் விட வித்தியாசமான வரலாற்று ஓட்டத்தைக் கொண்டது.

1973 வரையில் அரபு உலக நாடுகளுடன் 4 யுத்தங்களை அது நடாத்தியது. அதனோடு கேம் டேவிட் ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. யுத்தங்களிலிருந்து தான் இனி விடுபட்டுவிட்டதாகவே இஸ்ரேல் கருதியது. நாடுகளுடனான யுத்தம் என்ற வகையில் அது சரியே. ஆனால் யுத்த சூழலை விட்டு அது ஒரு போதும் மீளவில்லை. மீளப் பொவதுமில்லை. அத்தோடு துவங்கியது போராட்ட இயக்கங்களுடனான யுத்தம்.

லெபனான் போராட்ட இயக்கத்துடன் 1978, 1982களில் இந்தவகையில் மோதியது.
மேற்குக் கரை, காஸாவுடன்: 2002, 2003 மோதியது.
காஸாவுடன் மட்டும்: 2008-2009, 2012 அத்தோடு இவ்வாண்டும் 2014.
மீண்டும் லெபனானுடன் – 1993, 1996, 2006களில் மோதியது.
மக்கள் எழுச்சிப் போராட்டம் என்ற இன்திபாலா இரண்டை சந்தித்தது: 1989-1993, 2000-2004

இவை தவிர பலஸ்தீனிலும், லெபனானிலும் அடிக்கடி சிறிய சிறிய மோதல்களில் ஈடுபட்டது.

இந்த வகையில் உலகிலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான யுத்தங்களை சந்தித்த நாடு இஸ்ரேலாகத்தான் இருக்க வேண்டும்.

அது துவங்கியது முதல் (1948) இன்று வரை 14 யுத்தங்களை அது சந்தித்தது.
4 – அரபுலகுடனான யுத்தங்கள்
10 – போராட்டக் குழுக்களுடனான யுத்தங்கள் (7 பலஸ்தீன் போராளிகள், 3 லெபனான் போராளிகள்.)

இந்த வகையில் அது 5 வருடங்களுக்கொருமுறை யுத்தங்களை தொடர்ந்து சந்தித்து வந்துள்ளது.

இப்பின்னணியில் இஸ்ரேல் இரண்டு விடயங்களில் தோல்வியுற்றது:

  1. யூதர்களுக்கு பாதுகாப்பான நாடு இஸ்ரேல் என்ற ஜியோனிச கோஷத்தை அதனால் நிறைவேற்ற முடியவில்லை.
  2. இஸ்ரேல் அப்பிராந்தியத்திலேயே தோல்வியுறாத மிகப் பெரும் படை என்பதையும் நிறுவமுடியவில்லை.

தென் லெபனானிலிருந்து 2000ம் ஆண்டு இஸ்ரேலியப் படை பின்வாங்கிச் செல்ல வேண்டியேற்பட்டது. 2005ல் காஸாவிலிருந்து தனது குடியேற்றத்திட்டங்களையும் நீக்கிவிட்டு அது வெளியேறிச் சென்றது.

பலஸ்தீன் பிரச்சினை முழுமையாக அழிந்துவிடாமல், மக்கள் மனங்கமளில் அதனைப் பாதுகாப்பது இந்தப் போராட்டங்களே. 1973 யுத்தத்தோடு எகிப்து, இஸ்ரேலுடன் சமாதான உறவுக்கு வந்தது. படிப்படியாக அரபுலகின் ஏனைய நாடுகளும் இந்நிலைக்கு வந்தன. யாஸிர் அரபாத்தின் தலைமையிலான பலஸ்தீன விடுதலை இயக்கமும் (PLO) தனது ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டது. இவ்வாறு அரபுலகால் முழுமையாகக் கைவிடப்பட்டதாக பலஸ்தீனப் பிரச்சினை ஆகியது. பலஸ்தீனப் போராட்டக் குழுக்கள் மட்டும் தோன்றியிராவிட்டால். பலஸ்தீனப் பிரச்சினையே இல்லாமல் போயிருக்கும். பலஸ்தீன் விழுங்கப்பட்டிருக்கும். மத்திய கிழக்கின் சக்திமிக்க, பாதுகாப்பான நாடாக இஸ்ரேல் மிளிர்ந்திருக்கும். ஆனால் ஹமாஸ் போன்ற பலஸ்தீனிய இயக்கங்களே இப்பிரச்சினையை தாங்குகின்றன. அரபு, இஸ்லாமிய உலக நாடுகளும் இப்பிரச்சினையைவிட்டு ஒதுங்க முடியாத நிலை இதனால் தோன்றுகிறது.

ஹமாஸ் போன்ற இயக்கங்களின் வெற்றி இதுவே. அவை இஸ்ரேலை அமைதியாக இருக்கவிடுவதில்லை. இஸ்லாமிய உலகின் அரசுகளை இப்பிரச்சினையைவிட்டும் பாராமுகமாக இருக்கவிடுவதில்லை. இந்த நிலையில் இஸ்ரேலின் திட்டங்கள் எதுவும் பூரண வெற்றி காண்பதில்லை. எப்போதும் பாதுகாப்பின்மை என்ற மனநிலையோடு அந்த அரசு வாழ வேண்டிய நிலைக்கு இழுத்துவிட்டன இந்த இயக்கங்கள். அதாவது இஸ்ரேலுக்கு இது ஜீவ மரணப் போராட்டம்.

2014 யுத்தம்.

இஸ்ரேலின் மூவர் கொல்லப்பட்டமைக்கு ஹமாஸே காரணமெனக் கூறி இஸ்ரேல் இந்த யுத்தத்தைத் துவங்கியது. ஆனால் ஹமாஸ் அந்த கொலைகளுக்கு தாம் பொறுப்பல்ல என தொடர்ந்து மறுத்து வந்தது.
ஆனால் இவை எல்லாம் வெறும் நொண்டிச் சாட்டுகள். ஹமாஸுக்கும், இஸ்ரேலுக்குமிடையிலான பகை அடிப்படையானது. கொள்கை ரீதியானது.

2009ல் ஹமாஸுடன் பல இழப்புகளை இஸ்ரேல் சந்தித்தது. எதிர்பாராது தோன்றிய அரபு வசந்தம் பலஸ்தீனைப் பலப் படுத்தும் போன்ற நிலை தோன்றியது.இராணுவத் தளபதி அப்துல் பத்தாஹ் ஸீஸியின் இராணுவப் புரட்சி அந்த நிலையை மாற்றி இஸ்ரேலுக்கு சாதகமான சூழ் நிலையைத் தோற்றுவித்தது. ஸீஸியின் இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து அரபுலகிலும் அரசியல் இஸ்லாத்திற்கெதிரான பலமான அலை வீசத் துவங்கியது. ஈரானும் கூட மேற்குலகு சார்பு நிலைப்பாட்டை எடுத்தது. அரபு வசந்தம் தனது ஆதிக்கத்தை உடைக்கும் என அது கருதியது. இந் நிலையில் ஹமாஸும், போராட்ட இயக்கங்களும் மிகவும் பின்தங்கிய நிலைக்கே சென்றுவிட்டன என்ற தோற்றம் ஏற்பட்டது. ஹமாஸை, போராட்ட இயக்கங்களை ஒழிக்க இஸ்ரேலுக்கு மிகவும் சாதகமான நிலை இதுவே என இஸ்ரேல் கருதியது. அத்தோடு மேற்குக்கரைக்கும், காஸாவுக்குமிடையில் உருவான எதிர்பாராத சமாதான நிலையும் இஸ்ரேலுக்கு எரிச்சலூட்டியிருந்தது. இந்தப் பின்னணியிலேயே இஸ்ரேல் களமிறங்கியது.

இப்போது இந்த யுத்தத்தில் இது வரையிலான நிலைகளை மட்டிடுவோம்:

ஹமாஸின் ஏவுகணைத் தாக்குதல்களை நோக்கும் போது முன்பைவிட அது பெரிய வளர்ச்சி கண்டுள்ளது என்பது தெளிவு.

முன்பு அதன் ஏவுகணைகள் 70 கி.மி. களே சென்றன. இப்போது 200 கி.மி. வரை செல்கின்றன. டெல் அவிவ், ஹைபா (160 கி.மி.) வரை செல்வதோடு தய்மூனா அணு உலை நகர் வரை அவை செல்கின்றன.இஸ்ரேல் தனது Iron Dome என்ற ஆயுதத்தால் அவற்றை எதிர் கொண்டு அழிக்க முற்பட்டாலும் எல்லாவற்றையும் அவ்வாறு எதிர் கொள்ள முடியவில்லை. அவை பல சேதங்களை விளைவிக்கவே செய்தன. அது பற்றி இஸ்ரேல் எதுவும் சொல்லாது மெளனம் சாதிக்கிறது. காஸா 1500க்கு மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தியுள்ளது. இது இஸ்ரேல் கொஞ்சமும் எதிர்பாராத ஒன்று. ஹமாஸிடம் 10,000 ஏவுகணைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.

விமானியற்ற விமானங்கள் பலவற்றை ஹமாஸ் அனுப்பியமை ஹமாஸின் வளர்ச்சியின் பாரிய தன்மையை மேலும் காட்டுவதாகும். அவற்றில் சிலவற்றை இஸ்ரேல் அழிக்க முடிந்தாலும் பல பாதுகாப்புடன் திரும்பி வந்தன. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சுக் கட்டிடங்களுக்கு மேலால் பறந்து பல உபயோகரமான போடோக்களையும் அவை எடுத்து வருவதில் வெற்றி கண்டன.

கடற்கரைப் பிரதேச நகரமான அஸ்கலானில் உள்ள “ஜீகெம்” இராணுவமுகாமை கடல் வழியாகப் ஹமாஸின் போராளிகள் மூன்று பேர் மட்டும் போய் தாக்குவதில் வெற்றி கண்டனர். கரம் அபூ ஸாலிம் நுழைவாயிலோடு இருந்த இராணுவ முகாமையும் இயக்கப் போராளிகள் தாக்கி பாரிய சேதங்களை ஏற்படுத்தினர்.

தரை வழித் தாக்குதல்களை இப்போது இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் அந்நிலையில் மிகப் பாரிய இழப்புகளை சந்திக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று 20/7/2014 வரையில் 29 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு பல இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இது வரையிலான போராட்டத்தை நோக்குகையில் கீழ்வரும் உண்மைகளைக் கூறலாம்:

  1. ஹமாஸின் அரபுலகம் முழுக்க விரிவுபட்டுள்ள அரசியல் பலத்தை இஸ்ரேலால் உடைக்க முடியவில்லை. இனியும் உடைக்க முடியும் எனக் கருத முடியவில்லை.
  2. இஸ்ரேலால் என்ன குண்டு வீசியும், உளவுக்கான பெரும் பிரிவொன்று இருந்தும், ஹமாஸினதும், ஏனைய போராளிக் குழுக்களினதும் ஏவுகணைத் தாக்குதலை நிறுத்த முடியவில்லை. ஏவுகணைக் கட்டமைப்பை உடைக்கவும் முடியவில்லை. ஏவுகணைத் தளங்களைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.
  3. இஸ்ரேலிலுள்ளே போராளிகள் ஊடுருவுவதையும் முழுமையாகத் தடுக்க முடியவில்லை.
  4. இஸ்ரேலின் பல இலட்சம் மக்கள் பாதுகாப்பிடங்களைத் தேடி ஓடும் நிலையையும் தவிர்க்க முடியவில்லை. பாதுகாப்பின்மையே இன்னமும் இஸ்ரேல் நகர்களில் நிலவுகிறது.
  5. இஸ்ரேல் உளவுத்துறை ஹமாஸின் இராணுவ இரகசியங்களை அறிந்து கொள்வதில் படு தோல்வி அடைந்துள்ளது.

தற்போதைய நிலையில் துருக்கி, கடார் போன்ற நாடுகள் யுத்த நிறுத்தத்திற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐரோப்பிய நாடுகள் பலவும் அம் முயற்சியில் ஈடுபடுகின்றன. இஸ்ரேலின் உள் நிலை பாதக நிலை நோக்கிச் செல்லச் செல்ல யுத்த நிறுத்தம் விரைவாக முடியும்.

Reply