ஸூரா தாஹா: 7

وَإِن تَجْهَرْ بِالْقَوْلِ فَإِنَّهُ يَعْلَمُ السِّرَّ وَأَخْفَى ﴿٧﴾

“நீ பகிரங்கமாகப் பேசினாலும் அவன் இரகசியத்தையும், மிக மறைந்திருப்பதையும் அறிகிறான்.” (20:7)

இந்த இறைவசனம் மனோதத்துவப் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிக முக்கிய உண்மையொன்றைச் சொல்கிறது. இங்கு மனிதன் பகிரங்கமாகப் பேசுவதையும், இரகசியத்தையும் இறைவன் அறிகிறான் என்று விளக்கும் இந்த வசனம் அத்தோடு “அஃக்பா” என்ற இன்னொரு சொல்லையும் பாவித்துள்ளது. “அஃக்பா” என்ற பதம் “இஸ்ம் அல் தப்ளீல்” எனப்படும் மிகைப் படுத்தல் பிரயோகமாகும். “ஃகபிய” மறைந்திருந்தது என்ற வினையே இதன் மூலச் சொல். எனவே மிக மறைந்திருக்கும் ஒரு பொருள் என்பதே இதன் கருத்தாகும். பகிரங்கமாகப் பேசல், இரகசியம் என்ற இரு நிலைகளையும் சொன்னதன் பின்னர் மிக மறைந்திருக்கும் ஒரு பொருள் எனக் குறிப்பிடும் போது அது இரகசியம் என்பதையும் விட மறைவானது என்ற கருத்து பெறப்படுகிறது.

இந்த வகையில் இந்தச் சொல் நனவிலி, ஆழ் மனம் என்ற கருத்தைக் குறிக்கிறது என்பது தெளிவு. மனிதனின் மனதில் அவனது சிறு வயது நிகழ்வுகள், கருத்துக்கள், ஆசைகள், பழக்கவழக்கங்கள் அனைத்தும் இவ்வாறு மனதின் ஆழ்பகுதியில் பதிந்து போகும்.

உண்மையில் மனிதனை இயக்குவது இந்த நனவிலி மனமேயாகும்.

இவ்வாறு மனோதத்துவவியல் அறிஞர்கள் நனவிலி மனதை விளக்குவர். “அஃக்பா” என்ற சொல்லின் ஊடாக அல் குர்ஆன் இந்தக் கருத்தை விளக்கியுள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும்.

அல் குர்ஆன் அண்மைக் கால விஞ்ஞானக் கருத்துக்கள், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்று உண்மைகள், சட்டத்தில் மிக அண்மையில் மனிதன் கண்டு பிடித்தவைகள் இங்கு குறிப்பிட்டது போன்ற மனோதத்துவவியல் உண்மைகள் என்பவற்றை பலவிடயங்களில் தருகிறது. இதனூடாக அல் குர்ஆன் மனித ஆக்கமல்ல என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம்.

(அக்பா என்ற சொல்லுக்கு விளக்கம் – அல் அவ்தது இலல் குர்ஆன் என்ற கலாநிதி மஜ்தி ஹிலாலியின் நூலிலிருந்து பெறப்பட்டதாகும்.)

Reply