அல் குர்ஆனைக் கற்போம்

 

அல் குர்ஆனைக் கற்றல், விளங்கிக் கொள்ளல் என்பது என்ன?

அல் குர்ஆன் இறங்கிய இம் மாதத்தில் இது பற்றியதொரு விளக்கத்தை ஆரம்பித்து வைப்போம்.

இப் பகுதியில் நாம் ஆரம்பத்தில் விளங்கிக் கொள்ள வேண்டிய உண்மைகளைக் கீழே தருகிறோம்.

  1. அல் குர்ஆன் கற்பதற்கு இலகுவானது. அதாவது தத்துவப் பிரயோகங்கள் பல்வேறு கலைகளில் காணப்படும் கலைச் சொற் பிரயோகங்கள் அல் குர்ஆனில் இல்லை.
  1. ஒரு உபதேசப் போக்கை அது கொண்டுள்ளது.

இப்பின்னணியில் அல் குர்ஆனை ஒரு சராசரி அறிவுத் தரமுள்ள மனிதனாலும் புரிந்து கொள்ள முடியும். அதாவது எல்லா மனிதர்களும் அல் குர்ஆனிலிருந்து பயன் பெறலாம். அதனைக் கற்கலாம்.

கீழ்வரும் அல் குர்ஆன் வசங்கள் இந்த உண்மையை உணர்த்துகின்றன:

“அல் குர்ஆனை நாம் படித்து உணர்வு பெற இலகு படுத்தியுள்ளோம். படித்து உணர்வு பெறுவோர் யாருமுள்ளனரா?” (ஸூரா கமர் – 54: 17, 22, 32, 40)

உபதேசப் போக்கைக் கொண்டுள்ளது என்ற கருத்தை:

“அது ஒரு உணர்வு பெறச் செய்யும் ஞாபகமூட்டலாகும்” (ஸூரா அபஸ – 80:11)

“ஞாபகமூட்டி உணர்வு பெறச் செய்வீராக. ஞாபகமூட்டி உணர்வூட்டல் பயன் படுமாயின்….” (ஸூரா அஃலா – 87:9)

ஞாபகமூட்டி உள உணர்வு பெறச் செய்தல் என்ற கருத்துப் பின்னணியிலேயே அல் குர்ஆன் வடிவமைக்கப் பட்டுள்ளது. அறிவுக்கு மாத்திரம் அழுத்தம் கொடுத்துத் தத்துவ , தர்க்க வாதப் போக்கை அது கையாளவில்லை.

அறிவு பூர்வமாகவும், பகுத்தறிவு ரீதியாகவும் அது பேசுகிறது. இது அல் குர்ஆனில் மிகத் தெளிவு:

சிந்திப்பவர்கள், அறிஞர்கள், அறிவு பூர்வமாகப் பார்ப்பவர்கள் – இவர்களுக்கே அல் குர்ஆன் உள்ளது என்ற கருத்தை அல் குர்ஆன் நிறையச் சொல்கிறது.

“அல்லாஹ்வைப் பயப்படுபவர்கள் அவனது அடியார்களில் அறிஞர்களே.” (ஸூரா பாதிர் – 35:28)

ஆனால் அந்த அறிவைத் தூண்டி உள்ளத்தைத் தட்டி எழுப்பிவிடும் ஆழ்ந்த உபதேசப் போக்கை அல் குர்ஆன் கொண்டுள்ளது.

அல் குர்ஆனை விளங்க அறிவுப் பின்னணியொன்று தேவை. ஆனால் மிக எளிய அறிவு மட்டமே அதற்கும் போதுமானது.

ஆச்சரியத்திற்குரிய விடயமென்னவென்றால் அரபு மொழியைப் படிக்கும் ஒருவர் அதன் சாதாரண தரத்திற்கு வரும் போதே அல் குர்ஆனை அதன் மொழியிலேயே விளங்க முடியும். பின்பற்ற முடியா உயர்ந்த இலக்கியத்  தரத்தை அது கொண்டிருந்தாலும் எளிய வாசகனுக்குப் புரியும் மொழியில் அது அமைந்துள்ளது. இதுவும் அல் குர்ஆனின் இலகுத் தன்மைக்கு ஒரு சான்று.

ஒரு குறிப்பிட்ட உயர்ந்த அறிவுத் தரத்தில் ஒரு நூல் இருக்கும் போது அது எல்லோர் தரத்திலும் இருக்க முடியாது. எல்லோரையும் விழித்துப் பேச முடியாது. எனவே எல்லோருக்கும் அது வழி காட்டவும் முடியாது.

அல் குர்ஆனின் இந்த எளிமையை விளக்க சில உதாரணங்களை நோக்குவோம்.

தொடரும்…

Reply