நோன்பும் – தக்வாவும்

 

நோன்பின் இலக்கு தக்வா என்ற மனோ நிலையை சம்பாதித்துக் கொள்ளல் என்று அல்லாஹ்வே நோன்பு பற்றி விளக்க வரும் வசனத்தில் சொல்கிறான்.

“நீங்கள் தக்வா கொண்டவர்களாக ஆகலாம் என்பதற்காக…..” (ஸூரா பகரா – 2:183)

எனவே நோன்பு ஓர் ஆன்மீகப் பரிசோதனை, ஒரு ஒழுக்கப் பயிற்சி. நோன்பின் உண்மை இலக்கு இது, அதனை அடைந்து கொண்டால் நோன்பின் ஏனைய பயன்கள் எல்லாம் கிட்டும். அது தவறினால் ஏனைய அனைத்தும் வீண் போய்விடும்.

தக்வாவைப் புரிய இப்பிரபஞ்ச இருப்பு நிலைகளை அறிய வேண்டும். அது மூன்று வகைப் படுகிறது:

அதி உயர் உன்னதத் தலைமை. அதுவே ஏகனான கடவுளின் இருப்பு நிலை.

இரண்டாவது முற்றிலும் பணிந்த இழிந்த அடிமைப்பட்ட நிலை.

அதுவே இயற்கை சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இயங்கும் சடப் பொருட்கள், மிருகங்களின் நிலை. மனிதனும் தனது மனோ இச்சைகளின் பிடியில் அகப்பட்டுக் கொண்டால் இந் நிலைக்குத் தாழ்ந்து போகிறான்.

இவ்விரு நிலைகளுக்கிடையே இன்னொரு தரமுள்ளது. அதுவே உலகத்தின் மீதான தலைமைத்துவமும், பிரபஞ்சப் படைப்பாளனுக்கு அடிமைப்படலும் என்ற இரண்டும் ஒன்றிணைந்த நிலையாகும்.

மனிதன் தனது உடலுறுப்புக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலைக்கு உயர்ந்து விட்டால் அப்போது அவன் அந்த மூன்றாம் தரத்தை அடைகிறான்.

அவனது கண்ணும், காதும், கையும், காலும் எல்லா உறுப்புக்கள் மீதும், மன உணர்வுகள் மீதும் அவன் ஆதிக்கம் செலுத்தினால், அவற்றுக்குத் தலைவனானால் இப்போது அவன் தக்வாவைச் சம்பாதித்தவனாகிறான். அப்போது அவன் பூமியின் மீதான அதிகாரத்தைப் பெறும் தகுதி உடையவனாகிறான்.

இந்தத் தக்வாவையே நோன்பு உருவாக்க முனைகிறது.

நோன்புக்கு ஒரு மானுட வாயில் உள்ளது, தெய்வீக வாயிலும் உள்ளது.

உணவையும், குடிப்பையும் தவிர்த்துக் கொள்வது மட்டுமல்ல, அவற்றைத் தாராளமாகச் செலவு செய்து, கொடையாகக் கொடுப்பது நோன்பின் ஒரு பகுதி.

“வீசும் காற்றை விட இறைத்தூதா; நோன்பின் போது கொடை கொடுப்பவர்களாக இருந்தார்கள்.” (ஸஹீஹ் புகாரி)

ஸகாத்துல் பித்ர் இதன் கடைசித் தோற்றமாகும்.

நோன்பின் தெய்வீக வாயில் என்பது அக்காலப் பிரிவின் துஆ, இரவு நேரத் தொழுகை, அல்குர்ஆன் ஓதல் என்பவையாகும்.

இவ்வளவு உயர்ந்த, பெரும் நோன்பை பசித்திருத்தல், தாகித்திருத்தல் என்பதோடு மட்டும் சுருக்கிக் கொண்டால் எவ்வளவு பெரும் அநியாயத்தை நாம் செய்தவர்களாவோம்.

நோன்பில் இன்னும் அதிகமான பகுதி எஞ்சியுள்ளது. பயன்படுத்த முயல்வோமா?

-நூல் : நோன்பு ஒரு பயிற்சியும், போராட்டமும் – கலாநிதி அப்துல்லாஹ் தர்ராஸ்

 

 

Reply