நோன்பும் சில சம கால சட்டப் பிரச்சினைகளும்
- குழாய் மூலம் பின் துவாரத்தால் செலுத்தப்படும் மருந்து: (Klean Prep) மலச் சிக்கலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பின் துவாரம் மூலம் சில மருந்துப் பதார்த்தங்கள் செலுத்தப் படுவதுண்டு. இவற்றால் நோன்பு முறிவதில்லை. ஏனெனில் இது இரைப்பையை அடைவதில்லை. உணவு உட்கொள்ளலாகவும் இவை கொள்ளப் படுவதில்லை.
இது இமாம் அஹ்மதின் ஒரு அபிப்பிராயம், இப்னு ஹஜம், இப்னு தைமியா போன்றோரது கருத்துமாகும்.
- கண்கள், காதுகளில் விடப்படும் மருந்தும் நோன்பை முறிக்காது. ஏனெனில் அவை உணவு செல்வதற்கான இயற்கை வழிகளல்ல. அவை உணவு உட்கொள்ளலுமல்ல. (இஸ்லாமிய சட்டமன்றத் தீர்வுகள், பக்-213, இப்னு உதைமினின் தீர்வுத் தொகுப்பு 20/152)
- மிகச் சிறிய குழாயொன்றை (Laparoscopy) உள்ளே செலுத்தி நோயைக் குணப்படுத்த முயலல்: இதுவும் நோன்பை முறிக்காது என்பது நவீன சட்ட அறிஞர்களின் ஏகோபித்த கருத்தாகும்.
உ+ம்:போ(f)ட்டோ கருவியை வயிற்றினுள் செலுத்தி பித்தப்பையை அகற்றல். - மருத்துவத்துறையில் மயக்கம் ஏற்படுத்தப் பயன்படும் வாயுக்கள் (Anaesthetic Gases): மூக்கால் செலுத்தி மயக்கமூட்டப் படும் இவ்வாயுவாலும் நோன்பு முறிவதில்லை. ஏனெனில் இது உணவருந்தல், குடித்தல் செயற்பாட்டை ஒத்ததல்ல. உணவூட்டலாகவும் இதனைக் கொள்ள முடியாது.
- நாசித்துவாரத்தால் செலுத்தப்படும் மருந்துகள், (Nasal Drops) வாயுப் பொருள் போன்றவை நோன்பை முறிக்காது என்பது இப்னு உதைமின், இப்னு ஜப்ரீன் போன்ற பெரும் அறிஞர்களின் கருத்தாகும். இதில் மிகச் சிறய அளவு வயிற்றின் உள்ளே செல்லும் என்பது உண்மை. எனினும் மிகச் சிறிய ஒரு பகுதி அது என்பதால் அதனைக் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்பது இவர்களது கருத்தாகும். பல் சுத்தம் செய்யும் போது அதற்கான பற்பசையில் மிகச் சிறிய பகுதி வயிற்றின் உள்ளே செல்வதை ஒத்ததுவே இதுவாகும் என இதனை அவர்கள் விளக்குவர்.
- சிறுநீரகச் சுத்தீகரிப்பு (Dialysis): இரத்தத்தை ஒரு கருவி மூலம் வெளிக் கொணர்ந்து சுத்தப் படுத்தி மீண்டும் உட்செலுத்தும் செயற்பாடே இதுவாகும்.
ஷெய்க் இப்னு பாஜின் தலைமையிலான பத்வா சபை இது நோன்பை முறிக்கும் என்ற கருத்தைக் கொண்டுள்ளது. ஏனெனில் இதில் உப்பு, சக்கரை போன்ற உணவூட்டப் பொருட்கள் கலப்பதுண்டு.
- இரத்த நாளங்கள் ஊடாக செலுத்தப்படும் ஊசி மருந்து நோன்பை முறிக்காது. ஏனெனில் இது உணவு உட்கொள்ளும், பாணமருந்தும் செயற்பாடல்ல. ஆனால் உணவூட்டும் கருத்தில் செலுத்தப்படும் ஊசி மருந்துகள் நோன்பை முறிக்கும் என்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். ஏனெனில் இவை சாப்பிடலும், குடித்தலுமாகும். உணவூட்டல், குடித்தலுக்குப் பதிலாகவே இது அமைகிறது.
- வயிற்றினுள்ளே செலுத்தப்படும் வயிற்றை ஆராயும் போ(f)ட்டோக் கருவி (Upper GI Endoscopy) வாயினூடே செலுத்தப் பட்டு இரைப்பை வரை இது செல்லும்:
இது நோன்பை முறிக்காது என்பதுவே மிகப் பெரும் பாலான ஷாபியீ, ஹனபீ, ஹன்பலீ மத்ஹபினர் கருத்தாகும்.
இலகுவாக இது செலுத்தப்பட ஒரு பதார்த்தமும் இதனோடு பாவிக்கப் படுவதுண்டு. அதுவும் நோன்பை முறிக்காது என்பதுவே ஆதாரபூர்வமான கருத்தாகும் ஏனெனில் அவை உணவு உண்பதாகவோ, குடிப்பதாகவோ கருதப் படுவதில்லை.
- நாக்கின் அடியில் வைக்கப்படும் மருந்து மாத்திரைகள் (Sub Lingual Medication): நேரடியாக நாக்கின் கீழ் புறத்திலே படிப்டியாக உறிஞ்சிக் கொள்ளப்படும்.
இவை நோன்பை முறிக்காது. ஏனெனில் சாப்பாடாகவோ, குடித்தலாகவோ இது கொள்ளப்படுவதில்லை.
ஆனால் இவை சிதைவடையும் போது விழுங்கி வயிற்றினுள்ளே சென்றால் நோன்பு முறியும்.
இதுவே ராபிதா சட்டமன்றத்தின் ஏகோபித்த முடிவாகும்.
நோன்பு பற்றிய நூல் – அறிஞர் ஸல்மான் அல் அவ்தா
كتاب الصوم – سلمان العودة
பக்கம்: 128-133
அறிஞர் ஸல்மான் அவ்தா பல மத்ஹபுகள், நவீன கால பெரும் சட்ட அறிஞர்கள், சட்ட மன்றங்கள், தீர்வுகள் ஊடாகவே இக் கருத்துக்களை விளக்கியுள்ளார்.
இந்த பத்வாக்களின் மொழிபெயர்ப்புகளுக்கு Dr. MGM Mafaz (MBBS) உடைய உதவி பெறப்பட்டது.