இன மோதலின் போது…

 

தர்ஹா டவுன், அளுத்கம, பேருவலைக் கலவரம் நடந்து முடிந்துவிட்டது. மிகுந்த கவலையோடும், தாங்கக் கஷ்டமான மனக் கிலேச்சத்தோடும் நிகழ்வை நாம் எல்லோரும் பார்த்தோம். சில உயிர்கள் இழப்போடும், பலர் காயப்பட்டதோடும், கோடிக்கணக்கான ரூபாய்கள் நஷ்டத்தோடும் நிகழ்வு முடிந்தது. இனி என்ன? எப்படி நாங்கள் சிந்திக்க வேண்டும்? இந்த நிகழ்வோடு பிரச்சினை முடிந்து விடும் என்று கருத முடியாதுள்ளது. ஏனெனில் இத்தகைய கலகங்களை உருவாக்கும் காரணிகளும், சக்திகளும் சமூகங்களினுள்ளே அப்படியே உள்ளன. மேலோட்டமான சமாதானப் பேச்சுவார்த்தைகளோடு அவை அழிந்து போகப் போவதில்லை. இந்த உண்மையின் பின்னணியில்தான் முஸ்லிம்கள் தம் நிலை குறித்து சிந்திக்க வேண்டும். அது பற்றிய சில குறிப்புகளை கீழே தருகிறோம்.

  1. கலவரங்களுக்கு உடனடிக் காரணமாக அமைபவர்கள் அடிமட்ட மக்கள். அவர்களே அதற்குப் பலியாகுபவர்கள். கடைத்தெருவிலும், வாகனங்களிலும், பல்வேறு நிறுவனங்களிலும் அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்கள், உறவாடுபவர்கள், மோதுபவர்கள் இந்தச் சாதாரண மக்களே.அதி உயர் மட்ட மக்களும், நடுத்தர உயர்மட்ட மக்களும் இந்த மோதல்களுக்கு உட்படுவதில்லை. கலவரங்களால் அவர்கள் பாதிக்கப்படுவது சொத்து ரீதியாக மட்டுமே. எனவே அடிமட்ட மக்களும், நடுத்தர மக்களுமே அதிகமாக விழிப்புணர்வூட்டப்பட வேண்டும், பயிற்றுவிக்கப்பட வேண்டும். எனவே அவர்களிடம் செல்வது அதி முக்கியமானது.
  2. கலவரங்களுக்கான உடனடி சிறு காரணங்கள் உள்ளன. உதாரணமாக இந்தக் கலவரத்தில் ஒரு முஸ்லிமும், இன்னொரு சிங்களவரும் மோதியமை, சிங்கள பௌத்த பிக்குவும் அதனால் பாதிக்கப்பட்டமை உடனடிக் காரணமாக அமைந்தது.அடிப்படைக் காரணம் சிங்களத் தீவிர வாதம் சில கொள்கைகள் மீது வளர்க்கப்படுகின்றமையும், படிப்படியாக சிங்கள சமூகம் இனத்துவேஷ நிலைக்குக் கொண்டு வரப்படலுமாகும். இனக் கலவரத்தின் உடனடிக் காரணத்தை மட்டும் நோக்காது இந்த அடிப்படைக் காரணத்தையும் ஆழ்ந்து ஆராய்ந்து தீர்வுகள், முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.இரு வேறு மதங்கள் – இனங்கள் ஒரு நாட்டில் வாழும் போது இத்தகைய மோதல்கள் இடைக்கிடை நிகழல் தவிர்க்க முடியாததாகும். ஆனால் இனத் துவேஷம் கூர்மையடைதலும், திட்டமிட்டு அது வளர்க்கப் படலுமே மிக அபாயகரமானதாகும். அப்படியானதொரு அபாயகரமான ஒரு நிலைக்கு இப்போது நாம் வந்து நிற்கிறோம்.
  3. இப்படி ஒரு அபாயகரமான நிலைக்கு நாம் வந்துள்ளமையால் இது பற்றி இரண்டு வகையில் சிந்திக்க வெண்டியுள்ளோம்.
    1. தற்காலிக நடவடிக்கைகள்: கலவரத்தின் போது எம்மைக் காத்துக் கொள்ளும் முறைகள், கலவரத்தை உருவாக்கி விடத்தக்க உடனடி காரணிகளிலிருந்து விலகியிருத்தல்.இவ்விடயங்கள் பற்றி பொது விழிப்புணர்ச்சியை மக்கள் மத்தியில் மிகப் பொதுவாகக் கொண்டு செல்லல்.
    2. நீண்ட கால, நிரந்தரத் தீர்வுகள்: எமது வாழ்வொழுங்கையே திருப்பி ஒரு முறை நாம் மீளாய்வுக்குட்படுத்த வேண்டும்.எமது உடை, பள்ளிகள் நிர்மாணம், மத்ரஸாக்கள் என்பவற்றிலிருந்து அது ஆரம்பிக்க வேண்டும். மூடுண்ட சமூக அமைப்பாக வாழும் எமது வாழ்வொழுங்கை எவ்வாறு திறந்த வாழ்வொழுங்காக மாற்றிக் கொள்வது என்பது பற்றி நாம் மிகவும் சிந்திக்க வேண்டும்.நோய், பிரயாணம், நிர்ப்பந்தம் போன்ற நிலைகளின் போது எமக்கு அல்லாஹ் சலுகைகள் தந்துள்ளான். அவ்வாறான ஒன்றே சிறுபான்மை சமூக அமைப்பும். அந்த வகையில் இத்தகைய சமூக அமைப்புக்கான நெகிழ்ந்து கொடுக்கும் ஒழுங்குகளை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும்.

      எந்த வகையிலும் முற்றிலும் பெரும்பான்மை முஸ்லிம்கள் போன்று நாம் வாழ முயலல் பெரும் தவறு. பிரச்சினைகள் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களில் அது ஒன்று என்பதை நாம் நன்குணர வேண்டும்.

இங்கு குறிப்பிட்ட விடயங்கள் மிகவும் சுருக்கமானவை. அவற்றை கலந்துரையாடலுக்கான சில குறிப்புகள் எனக் கூறலாம். இப்போது நடந்து முடிந்துவிட்ட கலவரமும், அதன் பாரிய, பயங்கர நஷ்டமுமாவது எம்மை சிந்திக்க வைக்க வேண்டும். நிரந்தரத் தீர்வுகளுக்கு எம்மை இட்டுச் செல்ல வேண்டும். எனவே பரவலாகவும், விரிவாகவும் இது பற்றித் திட்டமிட கலந்துரையாடல்களும், ஒன்று கூடல்களும் நடாத்தப்பட வேண்டும்.

கலவரத்தோடு உணர்ச்சிவசப்பட்டு எழுந்த நாம் அது அடங்கிவிடுவதோடு ஓய்ந்து பழைய அக்கறையற்ற நிலைக்கு திரும்பிவிடக் கூடாது.

وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا

நீங்கள் பொறுமையுடனும், இறை பய உணர்வு கொண்டவர்களாகவும் இருந்தால் அவர்களது சூழ்ச்சிகள் எத்தீங்கையும் உங்கள் மீது விளைவிக்காது.
(3 ஆல இம்ரான் 120)

தொடர்ந்த உழைப்பதற்கான பொறுமை, கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் முன்னால் விழுந்து விடாது அவற்றை சகித்துக் கொண்டு முன்னேறிச் செல்லும் பொறுமைமுதல் ஷரத்து.

உள்ளம் நிறைந்த இறைபயம்: இரண்டாவது ஷரத்து.

இவை நாம் உருவாக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் என அல் குர்ஆன் அடையாளம் காட்டுகிறது. இவற்றை ஒரு போதும் நாம் மறந்து விடக் கூடாது.

Reply