இந்த மார்க்கம்…

 

“இந்த மார்க்கம்” என்ற நூலை இம்முறை அறிமுகத்திற்கு எடுத்துக் கொள்வோம். ஷஹீத் ஸையித் குதுப் சிறையின் போதெழுதிய நூல் இது. ஆழ்ந்த கருத்துப் பொதிந்த நூற்களில் ஒன்று இது.

அந்த நூலின் அத்தியாயங்கள் கீழ்வருமாறு.

மனிதனுக்கான கொள்கை.
தனித்துவமிக்க கொள்கை
இலகு பண்பு கொண்ட கொள்கை
தாக்கம் விளைவிக்கும் கொள்கை.
“இயற்கை” என்ற இருப்பு.
“அனுபவம்” என்ற இருப்பு.
நிலைத்து விட்ட சில தடயங்கள்.
அடுத்து…

இந்நூலை இரு பகுதியாக அமைத்து ஸையித் குதுப் விளக்கியுள்ளார்.

முதல் பகுதியில் இம் மார்க்கத்தின் சில பண்புகளை விளக்குகிறார். அந்த விளக்கம் சில முக்கிய தெளிவுகளைக் கொடுக்கிறது.

இரண்டாம் பகுதி இந்த மார்க்கம் வாழும்; அது வெற்றி பெறும் என்ற கருத்தைத் தெளிவுபடுத்துகிறது. இறுதித் தலைப்புகள் இவ்விடயத்தையே விளக்குகின்றன.

முதல் அத்தியாயம் இம்மார்க்கத்தின் செயற்பாட்டுப் பண்பைப் பற்றி விளக்குகிறது.
அது மனித சக்தியோடும், பௌதீக யதார்த்தத்தோடும் இணைந்து இயங்குகிறது. அற்புதமாக, பௌதீக விதிகளுக்குப் புறம்பாக அது இயங்குவதில்லை என்ற கருத்து ஆழமாக விளக்கப்படுகிறது. மனிதன் எந்த சமூக நிலையில் இருக்கிறானோ, அவ்விடத்திலிருந்து அவனை அது அழைத்துச் செல்கிறது. அதன் பாதை இலகுவானது, சாத்வீகமானது, மிகவும் அமைதியானது.

மனித இயக்கம், அவனது சக்திக்கேற்பவே இம்மார்க்கம் இயங்கும். அவன் எவ்வளவு தனது ஆற்றலையும், சக்தியையும் செலவிடத் தயாரோ அந்தளவுக்கு இம்மார்க்கம் மேம்படும், உயரும். பௌதீக விதிகளைப் புறக்கணிக்காது மனித யதார்த்தத்திற்கேற்பவே இயங்கும் என்பதற்கு உதாரணமாக உஹத் யுத்த நிகழ்வு இங்கு விவரிக்கப்படுகிறது.

இரண்டாவது அத்தியாயம் மார்க்கம் பௌதீக, மனித யதார்த்த்த்தினுள்ளே இயங்கினாலும் அது தனித்துவமானது, உயர்ந்தது. மனிதனின் பூரண விடுதலைக்கு இம்மார்க்கம் வழிவகுக்கிறது.

மனித பலவீனங்கள், அறிவுக் குறைபாடுகள் எதுவுமற்ற இறை மார்க்கம் இது. பிரபஞ்ச இயக்கத்தோடு உடன் பட்டுச் செல்லும் தன்மை கொண்டது இம்மார்க்கம். இந்தவகையில் எல்லாம் இந்த மார்க்கம் உயர்ந்தது, உன்னதமானது.

இலகு பண்பு கொண்ட கொள்கை என்பது அடுத்து அத்தியாயத்தின் தலைப்பு. மனித இயற்கையை அவதானித்து அவனைக் கவனமாக இலட்சிய உலகைக் காண கவனமாக அழைத்துச் செல்கிறது.

அடுத்த அத்தியாயம் தாக்கம் விளைவிக்கும் கொள்கை என்பதாகும். இந்த மார்க்கம் மிகப் பெரியதொரு தாக்கத்தை மனித வரலாற்றின் மீது ஏற்படுத்தியது. ஓடிக் கொண்டிருந்த மனித வரலாற்றை அது திசை திருப்பி ஓடச் செய்தது. அனைத்து நாகரீகங்கள், சமூகங்கள் மீது இம்மார்க்கம் தாக்கம் விளைவித்தது. அது விட்டுச் சென்ற தடயங்களை இன்றும் காண முடியும்.

புத்தகத்தின் அடுத்த பகுதி அடுத்த அத்தியாயத்திலிருந்து துவங்குகிறது.

முலில் இயற்கை என்ற இருப்பு:

மனித இயல்பு, இயற்கை மிகவும் சக்தி வாய்ந்தது. அது அதன் மேல் எவ்வளவு பெரும் ஜாஹிலிய்யப் படிவுகள் விழுந்தாலும் அவற்றை உதறிவிட்டு எழும்பக் கூடியது. இஸ்லாம் வரும் போது இப்படிவுகள் எவ்வளவு இருந்தன. அவையே அரபு தீபகற்ப, உலக யதார்த்தமாகப் போய் விட்டிருந்தன. ஆனாலும் இஸ்லாம் வென்றது. அதற்கு இஸ்லாமும், அதன் தூதரும் இந்த மனிதனின் இயற்கை உணர்வோடு மிக நுணுக்கமாக உறவாடியதே காரணம்.

அனுபவம் என்ற இருப்பு:

இஸ்லாம் ஏற்படுத்திய தாக்கம் பாரியது. எனவே அது கொண்டு வந்த கொள்கைகளும், கோட்பாடுகளும், பெறுமானங்களும், விழுமியங்களும் மனித சமூகத்தால் அறியப் பட்டன. அதற்குப் பரீட்சயப் பட்டுப் போய் விட்டன. அத்தோடு மனித சமூகம் இறைவனை விட்டுத் தூரமாகி அனுபவித்த கசப்பான அனுபவங்களும் உள்ளன. இந்தப் பின்னணியில் இஸ்லாம் கொண்டு வந்தவை அன்றிருந்தது போல் இன்று முற்றிலும் புதியவை அல்ல. அத்தோடு நீண்ட தூரம் வழிதவறிச் சென்ற மனித சமூகம் இறைவனை நோக்கி வரும் அடையாளங்களும் உள்ளன.

நிலைத்துவிட்ட தடயங்கள்:

இஸ்லாம் பின்வாங்கிச் சென்றுவிட்டது; தலைமைத்துவத்தை விட்டுக் கீழிறங்கிவிட்டது. ஆனால் அது விட்டுச் சென்ற தடயங்கள் மனித வாழ்வில் பதிந்து நிலைத்துவிட்டன. அவற்றில் சில இங்கு விளக்கப்படுகின்றன.

இயற்கை என்ற இருப்பு, அனுபவம் என்ற இருப்பு, நிலைத்து விட்ட சில தடயங்கள் என்ற இந்த உண்மைகளால் இஸ்லாம் ஓர் அறிமுகப்பட்ட, பரீச்சயமானதொரு மார்க்கமாகிப் போய்விட்டது. எனவே இன்று இஸ்லாத்தை முன் வைப்பது இலகு. ஆனால் அதனை முன்வைக்கும் நுணுக்கம் தேவை.

அடுத்து…

இறுதியில் உண்மை இவ்வாறிருந்த போதும் நவீன உலகில் இஸ்லாத்தை முன்வைப்பதில் சில முக்கிய சிரமங்கள் உள்ளன. பகிடியும், கேலியும் மிக உயர்ந்த பெறுமானங்களையே எள்ளி நகையாடி கேலிக்குட்படுத்தலும் இன்றைய நாகரீகத்தின் ஒரு பண்பு. அத்தோடு சூழ்ச்சி, சதி, நயவஞ்சகத் தன்மை என்பவையும் பரவலாகக் காணப்படும் இன்னொரு உண்மை.

இவை இன்றைய முக்கிய தடைகள்.

இவ்வாறு விளக்கி புத்தகம் முடிகிறது.

Reply