சமூகத்தில் சீர்திருத்தவாதியின் பணி.

 

கலாநிதி ஸெய்யித் தஸூகி ஹஸன் அல் குர்ஆன் ஆய்வில் “நாகரீக ஆக்க ஆய்வு” என்ற ஒரு பகுதியை ஆரம்பித்து வைத்துள்ளார். அவ்வாய்வுகளை பல நூல்களாக வெளியிட்டுள்ளார். அவர் சொல்லும் விளக்கங்கள் வழமையான விளக்கங்களைவிட ஓரளவு வித்தியாசமாகவே இருக்கும். இங்கு அவரது ஒரு வசனத்திற்கான விளக்கமொன்றை சுருக்கித் தருகிறோம்:

 يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا ﴿٤٥﴾وَدَاعِيًا إِلَى اللَّـهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُّنِيرًا ﴿٤٦﴾

 “நபியே நாம் உம்மை ஷாஹிதாகவும், நன்மாராயம் சொல்பவராகவும், எச்சரிப்பவராகவும், அல்லாஹ்வின் அனுமதியுடன் அழைப்பவராகவும், ஒளி வீசும் விளக்காகவும் அனுப்பி உள்ளோம்.” (33:45,46)

இந்த வசனம் ஐந்து மையங்களைச் சொல்கிறது.

1. முதலாம் மையம்: நடைமுறையை அவதானித்து விளங்கி அதற்கான
சாட்சியாளராக (شاهد) இருத்தல்.

நடைமுறையை அவதானித்து விளங்க பாரபட்சமற்ற, எப்பக்கமும் சாயாத பார்வை, உண்மை, அறிவு என்பன தேவை. நிறைய சீர்திருத்தவாதிகள் தாம் சீர்திருத்த முனையும் சமூகத்தின் நிலைமைகளை மிகவும் சரியாக இனங்கண்டு விளங்கும் ஆற்றல் அற்றவர்களாகவே உள்ளனர். எனவே அவர்களது முயற்சிகள் பயனற்றுப் போகின்றன. சில போது பிழையாக நடைமுறையைக் கணிப்பிட்டு சீர்திருத்தம் செய்ய உந்தப் பட்டுப் போய் பிழையான விளைவுகளை அது கொடுத்துமுள்ளது.

தனி நபர்களை மதிப்பிடுவதில் ஏற்படும் பிழை சிலரை மட்டுமே பாதிக்கிறது. ஒரு சமூகத்தைக் கணிப்பிடுதல், சான்றுபகரல் முழு சமூகத்தையுமே பாதித்து விடுகிறது.

சமூகத்தின் ஆன்மீக நிலை, பொருளாதார, அரசியல் நிலை, குடும்ப, தனி மனித நடத்தைகள், கல்வி நிலை போன்ற இவையே நடைமுறை யதார்த்தத்தை அறிவதாக அமைகிறது. இந்த அறிவற்ற சீர்திருத்த முயற்சி என்பது பல பிழையான முடிவுகள், செயற்பாடுகளுக்குக் கொண்டு வந்து விடும். இருட்டில் பயணப் படுவதாக அமையும்.

2. இரண்டாம் மையம்: நல்லவைகள்.

நடைமுறையில்  காணப்படும் நல்லவைகள் பற்றி நன்மாராயம் சொல்லல். சமூகத்தில் காணப்படும் நல்லவைகள், பலம் குறித்து சீர்திருத்தவாதி நன்மாராயம் சொல்வார். தீமைகள், குறைகளையும் மட்டுமே அவர் காண மாட்டார்.

சீர்திருத்தவாதி சில அடித்தளங்களில் நின்றே தனது சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அவர் பூச்சியத்திலிருந்து ஆரம்பிப்பதில்லை. நன்மை, தீமை கலந்த யதார்த்தத்திலிருந்தே அவர் ஆரம்பிப்பார். இதுவே பயன் அளிப்பதாகும். ஒன்றுமில்லாமை அல்ல. சில நல்ல விதைகள் அங்கே உள்ளன. அங்கு தண்ணீர் ஒன்றுசேர வேண்டும். அது முளைத்து வளர்ந்து பலன் கொடுக்க!

3. மூன்றாம் மையம்: தீமைகள், குறைபாடுகள்.

காணப்படும் குறைபாடுகளையும், தீமைகளையும் இனங்காண வேண்டும். அவற்றைச் சுட்டிக் காட்டுவதில் மிருது தன்மை வேண்டும். முன்னிலையில் தீமைகளை சுட்டாது, தன்னையும் சேர்த்து “நாம்” என்று பேச வேண்டும். இவ்வாறு தீமைகள், குறைகளைக் காண்பதுவும், சுட்டிக் காட்டுவதும் முக்கியமானதொரு பகுதி.

4. நான்காம் மையம்: பிரதியீட்டை முன்வைத்தல்
(இறை அனுமதியுடன் அல்லாஹ்வின் பக்கம் அழைத்தல்.)

தீமையை, குறைபாடுகளை அடயாளம் காணலும், சுட்டிக் காட்டலும் போதாது. அவற்றிற்கான பிரதியீட்டையும் முன்வைத்தாக வேண்டும். சீர்திருத்தத்திற்கான உயர்ந்த வழிமுறை மட்டும் போதாது. சமூகத்தை அவ்விடத்திற்குக் கொண்டு செல்லல் பாரிய வேலைத் திட்டமாகும்.

சென்றடைய வேண்டிய இடத்திற்கும் நடைமுறை யதார்த்தத்திற்குமிடையிலான இடைவெளி பாரியதாக இருப்பதுண்டு. இப்போது மக்களை படிமுறை ஒழுங்கில் படிப்படியாக அங்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

5. ஐந்தாம் மையம்: முன்மாதிரி (ஒளி வீசும் விளக்கு)

சமூகமாற்றத்தின் மிகச் சிறந்த சாதனம் முன்மாதிரி.

சீர்திருத்தவாதி தனது கொள்கையின் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

இறை தூதர் (ஸல்) அவர்களும், அவர்களோடு இருந்தவர்களும் கொள்கையின் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்தார்கள். எனவே மிகவும் குறுகிய காலத்திலேயே  ஒரு பெரும் மாற்றத்தை அவர்களால் ஏற்படுத்த முடிந்தது.

Reply