அரபு வசந்தத்திற்கு என்ன நடந்தது?

 

அரபுப் புரட்சிகள் முஸ்லிம்களின் உள்ளத்தில் ஒரு நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வளர்த்தன.

மீண்டும் பழைய கிலாபத், சாம்ராஜ்யக் கனவுகளும் எழுந்தன.

ஆனால் எகிப்தில் நடந்த எதிர் புரட்சியும், சிரியாவின் போராட்டம் முடிவின்றித் தொடர்வதும், எமன், லிபியாவில் காணப் படும் குழப்ப நிலையும் அந்த கனவுகளை சிதைத்தன. நம்பிக்கையையும் ஓரளவு தளர்த்தின.

இந்த நிகழ்வுகளை எப்படி நாம் வாசிக்க வேண்டும்? புரிந்து கொள்ள வேண்டும்.

நாகரீகங்கள் பலவற்றை ஆராயும் போது வீர உணர்வும், உயிர்த்தியாகமும் அவற்றின் பிறப்பிக்கக் காரணமாக இருந்துள்ளன என்பது தெளிவாகிறது. ஒரு சமூகம் தாராளமாக உயிர்த்தியாகிகளைக் கொடுக்கிறது என்றால் அது தனது நாகரீகத்தின் விடிவு நிலையில் இருக்கிறது என்று பொருள். உயிர் தியாகங்களை செய்வதில் கஞ்சத்ததனம் காட்டுகிறது என்றால் அந்த சமூகம் தனது நாகரீகத்தின் அஸ்தமன நிலையில் உள்ளது எனப் பொருள். இதுவே அரபு வசந்தம் பற்றி நம்பிக்கையோடு தொடர்ந்தும் நோக்க எமக்கு உற்சாகத்தைத் தருகிறது.

பத்ர் வெளியும், உஹத் மலைச் சாரலுமே இஸ்லாமிய நாகரீகத்தின் தோற்றமாயின. பின்னால் வளர்ந்த கலைகள் அதன் விளைவுகள்; நீட்சிகள் மட்டுமே.

நாகரீகத்தின் பாதையை வெட்டுபவர்கள் வீரத் தியாகிகள் – ஷஹீத்கள்.

அவர்கள் கொடுப்பார்கள்; எடுப்பதில்லை.

அறிஞர்கள் அதற்கான அத்திவாரங்களை இடுவார்கள். அவர்கள் கொடுப்பார்கள்; எடுக்கவும் செய்வார்கள்.

ஆட்சித் தலைவர்கள் பெரும்பாலும் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைபவர்கள்.

அவர்கள் எடுப்பார்கள், கொடுக்க மாட்டார்கள்.

அல்ஜீரிய தத்துவ ஞானி மாலிக் நபி: வீரத் தியாகிகள் நிலைப்பதாகப் போராடுவதில்லை, நிரந்தர வாழ்வுக்காகப் போராடுகிறார்கள்” என மிகச் சரியாகவே சொன்னார்.

அரபு வசந்தத்தின் இந்த நாட்களில் அதிகம் பேசப்படும் ஹதீஸ் கீழ்வரும் நபி வார்த்தைதான்.
“ஷஹீத்களின் தலைவர் ஹம்சா இப்னு அப்துல் முத்தலிப், அத்தோடு ஒரு ஆட்சித் தலைவனுக்கு முன்னால் எழுந்து நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தமையால் ஆட்சியாளன் அவனைக் கொல்கிறான் இவனும்தான்.” (முஸ்தத்ரக் ஹாகிம், அல் பானி: ஸஹீஹ் தர்கீப் வ-அத் தர்ஹீப்)

தொடர்ந்த சர்வாதிகாரம், சர்வதேச சக்திகளின் தலையீடு, கலாச்சாரத் தனித்துவம் பிரிந்து சிதறியமை என்ற அபாயகரமான உள் நிலையே தவிர்க்க முடியாது இப் போராட்டத்தை உருவாக்கி விட்டது.

ஓர் இந்தியக் கவிஞனின் அழகான கவிதையொன்று எமது நிலையை ஓரளவு தெளிவு படுத்தும்:

எம் அடிமைத் தனம் பெரிது…

எம்மைப் பிணைத்திருக்கும் விலங்குகளோ வலிது…

பின்

உடைத்தெடுக்கும் அடிகள் மட்டும்…

எப்படி…

மெதுவாய்…

வலிக்காமல்…

உள் முரண்பாடுகள், உள் மோதல்களோடு வெளிச் சக்திகளின் சதியும், செல்வாக்கும் பலன் கொடுக்கின்றன. வலுப் படுகின்றன.

உதாரணமாக நியூயோர்க் டைம்ஸின் யூத அமெரிக்கா ஆய்வாளர் எட்வேட் லோத்வார்க் சிரியப் போராட்டம் பற்றிக் கீழ்வருமாறு ஏழுதினார்.

“இக்கட்டத்தில் சக்திகளை உறிஞ்சும் ஒரு நீண்ட காலப் போராட்டமே அமெரிக்க நலன்களைப் பாதிக்காதிருக்கும்.”

இறுதியில் அவர் அமெரிக்காவுக்கு ஒரு உபதேசம் சொல்லி முடிக்கிறார்.

“அஸதின் படைகள் வெற்றி பெற்றுவருகிறது எனக் கண்டால் எதிர்ப் பேராளிகளுக்கு ஆயுதம் கொடுங்கள். எதிர் போராளிகள் களத்தில் வென்று விடுவார்கள் எனக் கண்டால் அவர்களுக்கான ஆயுத உதவியை நிறுத்திவிடுங்கள்.”

அமெரிக்கா செய்து வருவது இதுதான்.

எனினும் இந்தப் போராட்டம் வெல்லும். ஏனெனில் இது சமூகத்தின் இயக்க செயற்பாட்டின் முடிவு. வெறும் ஒரு சட்ட அறிஞனின் பத்வாவோ, அரசியல் தீர்மாணமோ அல்ல.

இந்தப் போராட்டம் புதிய சிந்தனைகளை எழுதுகிறது:

வேண்டத் தகாத பழைமையை அடித்துச் செல்கிறது.

சீர் கேடுகள், நாற்றமெடுத்துவிட்ட தலைமைகள், பாதாள உலக சக்திகள் அனைத்தையும் இது அள்ளி எறியும்.

அதற்குக் கொஞ்சம் காலம் தேவைப் படும்.

எனவே உள்ளத்தில் எழுந்த நம்பிக்கைத் தீபத்தை அனைத்துக் கொள்ளத் தேவையில்லை.

-அறிஞர் முக்தார் ஷன்கீதியின் கட்டுரையைத் தழுவி.

Reply