வரலாற்றின் ஒரு முக்கிய சந்தியில்…

 

முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவாடல் பற்றிய தெளிவானதொரு ஒழுங்குக்கு வர வேண்டிய வரலாற்றுக் காலக் கட்டத்தில் வாழ்கிறோம்.

சுதந்திரத்தின் பின்னர் ஆங்காங்கே இனக் கலவரங்கள் பல நடந்திருந்தாலும் இன்று போல் இன முறுகலும், திட்டமிடப் பட்ட துவேஷ உணர்வுகள் உருவாக்கப் படலும் நடந்ததில்லை.

வரலாற்றின் இத்தகைய ஓட்டத்தை அப்படியே விட்டுவிட்டால் அது முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மிகவும் அபாயகரமானது, பயங்கரமானது.

இரண்டு வகையாக நாம் இது பற்றி சிந்திக்க வேண்டும்.

ஒன்று உடனடி செயற்பாடுகள், உடனுக்குடனான தீர்வுகள்.
அவை அன்றாடப் பிரச்சினைகளை எதிர் கொள்வதற்காக அமையலாம்.

இரண்டாவது நீண்ட காலத் திட்டமிடல்.
அதில் இரண்டு வகை நிலைகள் உள்ளன.

ஒன்று யார் வெற்றி பெறுவது என்ற போட்டி, வேகம் கொண்ட திட்டமிடல்.
கல்வி, பொருளாதார, அரசியல் நிலைமை மீது ஆதிக்கம் செலுத்துவது எவ்வாறு?
பிராந்திய, சர்வதேச சக்திகளோடு சேர்ந்து போராட்டத்தைக் கொண்டு செல்வது எவ்வாறு?
இப்படி சிந்தித்தலே இதன் பொருளாகும்.

இரண்டாவது இந்த நாட்டின் பங்காளிகள் நாம். பங்காளிகளாகவே இருப்போம்.
நியாயமான பங்கு மட்டுமே எங்களுக்குக் கிடைக்கட்டும்.
அனைத்து நேர்மையான சக்திகளோடும் இணைந்து பங்கு கொள்வோம்.
வெற்றி, தோல்வி அல்ல. பங்கு கொள்வது.

இத்தகைய நிலைப்பாட்டை எடுக்க எமக்கு என ஒரு வாழ்வியல் ஒழுங்கு அவசியம்.
ஒரு நெகிழ்ந்து கொடுக்கும், இறுக்கமற்ற சிந்தனைப் போக்கு அவசியம்.

எமது உணவு, உடை
எமது கலாச்சார அடையாளங்கள்
இவை இந்த நாட்டோடு ஒத்துப் போகலாமா?
சில மாற்றங்கள் தேவையா? எங்கே தேவை?

வணக்கவழிபாடுகள் – இவற்றிற்கான சாதனங்கள யாவை?

அவை எம்மிடம் அளவு மீறி உள்ளனவா?

நாம் கலாச்சாரம், வணக்கவழிபாடுகள், பேச்சு, நடத்தை என்பவற்றால் ஒதுங்கி – இலங்கையினுள்ளே பௌதீக ரீதியாக இருந்து கொண்டே மானசீக ரீதியாக வெளியே நிற்கும் மூடுண்ட சமூகமா?

இவை பற்றியெல்லாம் சிந்தித்து மோதல்கள், துவேஷ உணர்வுகளுக்கு உரம் இடுபவை எவை எனக் கண்டு கொண்டு..

எமது வாழ்வுப் போக்கை மறுபரிசீலனை செய்து ஒரு கோட்பாட்டு, நடைமுறை வாழ்வொழுங்கை இடலும், நடைமுறைப் படுத்தலும் இன்றைய வரலாற்றுத் தேவை.

அத்தேவையை நிறைவு செய்வோமா?

Reply