வெள்ளைக்காரர்கள்…?!

 

முஸ்தவ்ரத் அல்குறைஷி அம்ர் இப்னு ஆஸிடம் கூறினார்: மறுமை நாள் நிகழும் போது ரோமர்கள் பெருந்தொகையினர்களாக இருப்பார்கள். அப்போது அம்ர்: நீ சொல்வதை அவதானமாகச் சொல் என்றார். அப்போது முஸ்தவ்ரத் இறைதூதர்(ஸல்) அவர்கள் சொல்வதைக் கேட்டுத் தான் நான் சொல்கிறேன் என்றார். அப்போது அம்ர் இப்னு ஆஸ் (ரழி) கீழ்வருமாறு கூறினார்:

நீ அவ்வாறு சொல்வதாயின் அவர்களிடம் ஐந்து பண்புகள் உள்ளன:

  • குழப்ப நிலைகள் ஏற்படும் போது மிகுந்த நிதானம், அமைதியுடன் இருப்பார்கள்.
  • ஒரு துன்பம், கஷ்டம் நிகழந்து விட்டால் மிக விரைந்து விழித்தெழுந்து கொள்வார்கள்.
  • தோற்றுப் பின்வாங்கினால் விரைந்து முன்னேறித் தாக்குவார்கள்.
  • ஏழை, அநாதை, பலவீனன் என்போருக்கு அவர்கள் நல்லவர்கள்.
  • ஐந்தாவது அழகான, நல்ல பண்பொன்று அவர்களிடம் உள்ளது. அரசர்களின் அநீதிகளிலிருந்து காக்கும் சக்தியைமிகவும் பெற்றவர்கள்.

(ஸஹீஹ்முஸ்லிம் – “அத்தியாயம்:அல்-பிதன்”)

 ரோமர்கள் என்போர் மேற்குலகினர்; வெள்ளைக்காரர்கள். அக்காலப் பிரிவில் அவர்களது சாம்ராஜ்யம் மேற்குலகில் இருந்தது. அதன் தலைமையாக ரோம் இருந்தது. அவர்களது சாம்ராஜ்யம் கீழைத்தேய உலகிலும் நீண்டிருந்தது. கீழை உலக ரோம சாம்ராஜ்யத் தலைநகராக கொன்ஸ்தாந்திநோபல் (தற்போதைய ஸ்தான்பூல்) காணப்பட்டது.

வட ஆபிரிக்காவில் முதலில் எகிப்தில் அவர்களோடு அம்ர்இப்னு ஆஸ்மோதினார். எனவே அவர்களோடிருந்த தொடர்பின் பின்னணியில் இவ்வாறு அம்ரிப்னு ஆஸ் அவர்களைப் புரிந்து கொண்டார். வெள்ளைக்காரர் பற்றி இவ்வளவு ஆழ்ந்தும், நுணுக்கமாகவும் ஆச்சரியப்படத்தக்க வகையிலும் அவர் புரிந்திருந்தார். இவ்வாறு தனது எதிரியையும் மிகச் சரியாக எடை போட்டிருந்தனர் அந்த நபியின் தோழர்கள்.

மேற்குலகை இப்போது சற்று அவதானித்துப் பார்த்தாலேயே வெள்ளைக்காரர்களின் இப்பண்புகளை அவதானிக்க முடியும்.

அவர்கள் துன்பங்கள், கஷ்டங்களின் போது பதறிப் போவதில்லை. துன்பங்கள், கஷ்டங்களின் பின் விரைந்து எழுவார்கள். 1ம், 2ம் உலக மகா யுத்தங்களின் போது நிறைய அழிந்தும், நொந்தும் போய் இருந்த அவர்கள் விரைந்து எழுந்து விட்டார்கள். தம்மை மேலும் வளர்த்துக் கொண்டார்கள்.

இலகுவில் தோல்வியை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் போராடுவர். பொருளாதார அநீதி அவர்களிடம் குறைவு.

இறுதியாக ஆட்சியின் அநியாயத்திலிருந்து தம்மைக்காத்துக் கொள்வதில் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். ஜனநாயகம், மனித உரிமை அமைப்புகள் நிறைந்த உலகு மேற்குலகு. இந்தயதார்த்தத்தையே அம்ர் இப்னு ஆஸ் இறைதூதர் (ஸல்) அவர்களது ஹதீஸுக்கு விளக்கம் சொல்லி சுட்டிக்காட்டினார்.

இந்த சிந்தனைகள் எமது ஆழ்ந்த கவனத்தைப் பெற வேண்டும்.

Reply