அறிவாலும், செல்வத்தாலும் போராடிய மாமனிதர் ஷெய்க் நாதிர் நூரி

 

ஷெய்க் நாதிர் அந்நூரி நவீன இஸ்லாமியப் பணியாளர்களில் ஒருவர். செல்வத்தாலும், ஒழுங்கு படுத்தற் திறமையாலும், அறிவாலும் போராடிய ஒருவர். கீழைத்தேய உலகோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். சிறுபான்மை முஸ்லிம் சமூகங்களோடு அவருக்கு ஆழ்ந்த தொடர்பிருந்தது. இலங்கை முஸ்லிம் சமூகத்தோடு அதன் நிறுவனங்கள் பலவற்றினூடாக நீண்ட காலம் தொடர்பு பட்டிருந்தவர்.

1954ல் பிறந்த ஷெய்க் அவர்கள் 16.04.2014 இரவு மரணமடைந்தார்.

إنا لله وإنا إليه راجعون

அவரது 60 வருட கால வாழ்வும் மிகப் பயனுள்ள உயர்ந்த வாழ்வாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

ஷெய்க் நாதிர் நூரி நிர்வாகத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். எனவே தனது தந்தையின் சகோதரரை அடுத்து பொதுப் பணிகள் ஸ்தாபனத்தைக் கையேற்று மிகத் திறம்பட நடாத்தினார். கீழைத்தேய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து போன்ற பல நாடுகளுக்கும் தமது பணியை அவர் கொண்டு சென்றார்.

இஸ்லாமிய அறிவுப் பணியிலும் ஷெய்க் நாதிர் நூரி ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவரது குடும்பத்தினர் மிகவும் ஆரம்ப காலத்திலேயே அரபுலக இஸ்லாமிய எழுச்சியோடு தொடர்புபட்டவர்கள். எனவே அவர் தமது நாடான குவைத்திலும் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டு, ஜம்இய்யதுல் இஸ்லாஹ் என்ற அமைப்போடு சேர்ந்தியங்கினார்.

இந்தியா, இலங்கை போன்ற பல நாடுகளுக்கும் இஸ்லாமியப் பணி தொடர்பான வேலைத்திட்டங்களை அவர் கொண்டு சென்றார்.

குவைத்தில் வெளிவரும் சர்வதேச தரம் வாய்ந்த அல் முஜ்தமஃ சஞ்சிகையில் அடிக்கடி பல ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதி வந்தார். அவற்றில் இஸ்லாமிய அரசியல் குறித்து எழுதிய அவரது கட்டுரைத் தொடர் பிரபல்யமானது. அதனை தமிழில் மொழிபெயர்க்கும் ஷெய்க் ஊடாகவே எனக்குக் கிட்டியது. வரலாற்றின் ஊடாக இஸ்லாமிய அரசியல் போராட்டத்தை விளக்கி, நவீன கால சூழ்நிலையையும் அந்நூல் மிகவும் நுணுக்கமாக விளக்குகிறது.

இலங்கையில் இஸ்லாமியப் பணி புரிந்த பலரோடும் அவருக்குத் தொடர்பிருந்தது. அந்தவகையில் பலரை இஸ்லாமியப் பணியில் நிலைக்கச் செய்யவும் அவர் காரணமாக இருந்தார். பல இஸ்லாமிய நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அவர் பாரிய பங்களிப்புக்களை இந்தவகையில் செய்தார்.

எப்போதும் மலர்ந்த முகத்துடனும், இனிய சுபாவத்துடனும் பழகும் ஷெய்க் அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. முதன் முதலில் இஸ்லாமிய உலகின் அறிஞர் ஒருவரோடு நெருங்கிப் பழகக் கிடைத்த வாய்ப்பு அதுவே. அவரின் ஊடாகவே அடுத்த சிலரோடும் பழகும் வாய்ப்புக் கிட்டியது.

அல்லாஹ் ஷெய்க் அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களது பாவங்களை மன்னித்து, அவருக்குச் சிறந்த, உயர்ந்த வாழ்வை அடுத்த உலகில் கொடுப்பானாக.

தனது செல்வத்தாலும், அறிவாலும், ஒழுங்குபடுத்தற் திறமையாலும் போராடிய ஒரு முஜாஹிதை நாம் இழந்து விட்டோம். அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக.

Reply