இமாம் முஹம்மத் அல் கஸ்ஸாலியின் சிந்தனைகள் – ஓர் அறிமுகம்

 

“வயிறு வெறுமையாக உள்ள மனிதனின் உள்ளத்தை நேர்வழியின் சிந்தனைகளால் நிரப்புவது கடினம். சரியான உடையின்றி இருக்கும் உடலுக்கு இறை பய உணர்வு என்ற தக்வா உடையை அணிவிப்பது வெகு சிரமம்! ஒரு விரிந்த பொருளாதார சீர்திருத்தமும், சமூக சீர்திருத்தமும் முதன்மையாக நடக்க வேண்டும். மார்க்கத்தின் பெயரால் தீமைகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தூண்மையானவர்களாக இருந்தால், மக்களை உலகங்களின் இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசையும் எம்மிடமிருந்தால் இது பற்றி நாம் கவனமாக சிந்திக்க வேண்டும்.”

“இஸ்லாமும் பொருளாதார நிலைகளும்” என்ற நூலில் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி கூறிய வார்த்தைகள் இவை. ஷெய்க் முஹம்மத் அல் காஸ்ஸாலி 1917-1996 காலப் பிரிவில் வாழ்ந்த நவீன உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். அதே வேளை சிந்தனைப் போராளிகளில் ஒருவருமாவார். அவரது சிந்தனைகளைச் சீரணிக்க பாரம்பரிய அறிஞர்களால் முடியவில்லை. அது மட்டுமின்றி நவீன இஸ்லாமிய சிந்தனை பற்றிப் பேசுவோர் ஷெய்க முஹம்மத் அல் கஸ்ஸாலியைப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்த சிலரால் அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

ஷெய்க முஹம்மத் அல் கஸ்ஸாலி ஏறத்தாழ 60 நூல்களின் ஆசிரியர். அவர் ஒரு சிந்தனையாளர், புத்திஜீவி என்பதோடு வித்தியாசமான பல சிந்தனைகளை முன்வைத்து பெரும் சிந்தனை சார் வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி இஸ்லாமிய சிந்தனையை மீளாய்வுக்குட்படுத்த மிக முக்கிய காரணமாக இருந்தவர். ஆனால் அவரது நூல்கள் முழுமையாக ஆய்வு முறைகளைப் பின்பற்றி எழுதப் பட்டவையல்ல. அவர் எப்போதும் போராடிக் கொண்டே இருந்தார். களத்திலிருந்தே அவர் எப்போதும் நூல்களை ஆக்கினார். அவரது நூல்களில் மேற்கோள்கள் குறைவு. சொந்தமாகச் சொல்வதே அவரது போக்கு. இஸ்லாமியப் பாரம்பரிய சிந்தனையினுள்ளே ஆழ்ந்து போனவர் அவர். அல் குர்ஆன், ஸுன்னாவை மிகவும் ஆழமாகப் படித்தார். அத்தோடு தாம் வாழும் உலகு, அதன் பிரச்சினைகள், அங்கு மோதும் சிந்தனைகள், தான் வாழும் தனது சமூகம், அதன் இழி நிலை இவற்றை ஆழ்ந்தறிந்தவர் ஷெய்க் அல் காஸ்ஸாலி. அந்தப் பின்னணியிலிருந்து பல புதிய சிந்தனைகளையும், பழைய சிந்தனையில் திருத்த வேண்டிய பகுதிகளையும் அவர் பேசினார். ஆழமும், நுணுக்கமும் வாய்ந்த அவரது சிந்தனைகளை பிந்தியே இஸ்லாமிய உலகம் விளங்கிக் கொண்டது.

அத்தோடு ஷெய்க அல் கஸ்ஸாலி ஆட்சிக்கும் பயப்படவில்லை. இஸ்லாமிய பாரம்பரிய அறிஞர்கள் மட்டத்தையும் அவர் தனது கணக்கில் கொள்ளவில்லை. அது மட்டுமன்றி பொது மக்கள் மனோ இச்சைகளுக்கும் அவர் பயப்படவில்லை. இந்தப் பின்னணியில்தான் அவரது, சிந்தனைகளும், கருத்துக்களும் வெளிவந்தன. எனவே கடுமையான பல அதிர்வுகளை இஸ்லாமிய சிந்தனையினுள்ளே அவர் ஏற்படுத்தினார்.

எதனையும், யாரையும் பொருட்படுத்தாது பயப்படாது அவர் சொன்ன கருத்துக்கள் பலரை எழுப்பிவிட்டன. பலரை சிந்திக்க வைத்தன. ஒரு சிந்தனைப் பள்ளியையே அவை தோற்றுவித்தன.

இங்கு ஷெய்க முஹம்மத் அல் கஸ்ஸாலியின் சிந்தனைகள் பற்றி எழுத விரும்புகிறோம். தொடராக அவரைப் பார்ப்போம்.

மேலே ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஷெய்க் அல் கஸ்ஸாலியின் சிந்தனையை உங்களது கலந்துரையாடலுக்கு விடுகிறோம்.
அது பற்றி நீங்கள் கருத்துச் சொல்லலாம்.

Reply