உஸ்தாத் முஹம்மத் குதுப் – ஓர் அறிமுகம்

முஹம்மத் குத்ப் இஸ்லாமிய உலகின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். 1919-04-26 இல் பிறந்த அவர் 04-04-2014 மக்காவில் காலை 8 மணியளவில் தனது 95ம் வயதில் மரணித்தார்.

இன்னா லில்லாஹி வ இன்னா லில்லாஹி ராஜிஊன்.

அறிஞர் முஹம்மத் குத்ப் இஸ்லாமிய எழுச்சியின் மிகப் பெரும் சிந்தனையாளர் ஸையித் குதுபின் சகோதரர் ஆவார். அவரை விட 12 வருடங்கள் இளையவர்.

1954ம் ஆண்டு சிறையிலிடப்பட்ட அவர் சிறிது காலத்தின் பின்னர் விடுவிக்கப் பட்டார். ஆனால் 1965ம் ஆண்டு மீண்டும் சிறைபிடிக்கப் பட்ட அவர் 1971 வரை 6 ஆண்டுகள் சிறையிருந்தார். இந்த சிறை வாழ்வு அவரது இஸ்லாமிய பணியின் விளைவு. ஸையித் குதுபின் முழுக் குடும்பமும் அப்போது சிறையிருந்தது. ஸையித் குதுப், ஹமீதா குதுப், அமீனா குதுப், முஹம்மத் குதுப் எனபவர்களே அவர்களாவர். கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட இக்குடும்பம் தாம் நின்ற கொள்கையை ஒரு போதும் விட்டுக் கொடுக்கவில்லை. அந்தக் குடும்பத்தின் இறுதி மகனே தற்போது உலகை விட்டு மறைந்த அப்பெரும் சிந்தனையாளர் முஹம்மத் குதுப்.

மேற்கத்திய சிந்தனைக்கெதிராகப் போராடியதில் அவரது பங்களிப்பு பாரியது. ‘20ம் நூற்றாண்டின் ஜாஹிலிய்யத்” என்ற நூலின் மூலம் டாவினிஸம், பிராயிடிஸம், மார்க்ஸிஸம் போன்ற சிந்தனைகள் எவ்வாறு நவீன சிக்கல் நிறைந்த உலகை உருவாக்கின என விளக்கும் முஹம்மத் குதுப் “ஜாஹிலிய்யத்” எனின் அறியாமை அன்று; அல் குர்ஆனின் பாஷையில் அது இப்பிரபஞ்சத்தை, மனித வாழ்வை, கடவுளின் இருப்பை சரியாகப் புரிந்து கொள்ளாமை என அழகுற விளக்குகிறார். இந்த அடிப்படை உண்மை புரியாத அந்த நாகரீகம் அழிவையும், சீர்கேடுகளையுமே கொண்டுவரும் என்பதை அந்நூலில் மிகுந்த உணர்வு பூர்வமாக விளக்குகிறார்.

மனோ தத்துவ துறை சார்ந்தவராக இருந்த அறிஞர்மும்மத் குதுப் ‘‘இஸ்லாமியப் பயிற்றுவித்தல் கோட்பாடு”, ‘‘மனித மனம் – சில ஆய்வுகள்”, ‘‘சடவாதத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையெ இஸ்லாம்” என்ற பல நூல்களை இத்துறையில் ஆக்கினார்.

மனோதத்துவத் துறையோடு நின்று விடாமல் பல்வேறு துறைகளிலும் ஆழமிக்க நூல்களை அவர் ஆக்கினார். குறிப்பாக இஸ்லாத்தின் தத்துவப் பின்னணிகளை விளக்கியதில் முஹம்மத் குதுபுக்குப் பெரும் பங்குண்டு.

 1. மனித ஆன்மா பற்றியும், சமூகம் பற்றியும்.
 2. வரலாற்றிற்கு இஸ்லாமியப் பின்னணியிலான விளக்கம்.
 3. இஸ்லாமியக் கலை இலக்கியம் -ஒரு கோட்பாட்டு விளக்கம்-
 4. மனித வாழ்வில் வளர்ந்து செல்பவையும், நிலையானவையும்.
 5. சமூகவியல் கலைகள் – இஸ்லாமியப் பார்வை.
 6. பாரம்பரியங்களின் போராட்டம்.
 7. சமகால சிந்தனைப் பள்ளிகள்.

போன்ற புத்தகங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கனவாகும்.

இஸ்லாமிய தஃவா, எழுச்சி போராட்டங்கள் குறித்தும் ஆழமாக அவர் எழுதினார். அவற்றில் சில:

 1. நாங்கள் முஸ்லிம்கள் தானா?
 2. மக்களை எவ்வாறு அழைக்கலாம்?
 3. ஷரீஆவை நடைமுறைப் படுத்தல் குறித்து…
 4. எமது சமகால யதார்த்தம்.

இஸ்லாமியத் துறை சார் நூல்களை ஆழ்ந்து எழுதினார். உதாரணத்திற்கு கீழே சில நூல்கள்:

 1. இறை தூதரிடமிருந்து சில ஒளிக்கற்றைகள்.
  –10 ஹதீஸ்களுக்கு வித்தியாசமான ஆழமான விளக்கவுரை நூல்.
 2. நம்பிக்கையின் தூண்கள்.
  –இஸ்லாமிய நம்பிக்கைப் பகுதியை விளக்கும் ஆழ்ந்த நூல்.
 3. சில ஆல் குர்ஆன் ஆய்வுகள்.
 4. அது போன்ற ஒன்றைக் கொண்டுவர மாட்டார்கள்.
 5. அல் குர்ஆனின் சில பயிற்றுவித்தல் பாடங்கள்.
 6. திருத்தப்பட வேண்டிய சில சிந்தனைகள்.

இப்படி ஆழமான பல நூல்களைத் தந்த மாமனிதர், முஹம்மத் குதுப் (ரஹ்).

முஹம்மத் குதுபின் எழுத்து:

 • ஆழமான தர்க்கமும், தத்துவப் போக்கும் கொண்டது.
 • இலக்கிய நயமும், கவர்ச்சியும் கொண்டது.
 • ஒரே மூச்சில் வாசிக்கத் தூண்டும் கவர்ச்சிமிக்க நடையோட்டம் அவருடையது.

அவரது சில நூல்களுக்கான அறிமுகமும், அவரது கருத்துக்கள் சிலவற்றையும் தருகிறோம்:

“மக்களை அழைப்பது எவ்வாறு?” என்ற நூல் அவர் அண்மையில் எழுதிய நூல்களில் ஒன்று. மிகவும் ஆழந்த நூல். அதன் அத்தியாயங்கள் வருமாறு:

 1. ஆரம்பத் தலை முறையின் தோற்றம் பற்றிய சில அவதானங்கள்.
 2. தனித்துவமிக்க அப் பரம்பரையின் பின்பற்றத் தக்க இடங்கள்.
 3. சமகால இயக்கத்தின் அவசரப்படலுக்கான காரணங்களும், அதன் விளைவுகளும்.
 4. பலமிக்க அடித்தளம்.
 5. அடித்தள முன்னணியினரை விரிவுபடுத்தல்.
 6. யதார்த்தமும், இலட்சிய உலகு படைத்தலும்.
 7. எதிர் காலம் நோக்கி.

இந்நூலின் கடைசிப் பக்கம் (190) தரும் அவரது வசனங்கள்:

“அது முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஒரு கிட்டிய தூர சுற்றுலவாக இருக்காது. அது தியாகங்கள், இரத்தம், கண்ணீர், கொடுமை, சித்திரவதை, சோதனை, உழைப்பு, விடாப்பிடியான உழைப்பு.“ஈமான் கொண்டவர்களை அல்லாஹ் காட்டவும், உங்களில் ஷஹீத்களை பெற்றுக் கொள்ளவும்…” (ஆல இம்ரான் 140)

மார்க்கத்தில் விட்ட குறைகளுக்கு முஸ்லிம்கள் விலை கொடுத்தே ஆக வேண்டும். பாதைக்குத் திரும்பி வர பெரும் சக்தியொன்றைச் செலவிட்டே ஆக வேண்டும்…!”

நம்பிக்கையின் தூண்கள் என்ற நூலிலிருந்து:

“நபிமார்கள் மனித வரலாற்றில் மிகப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தினார்கள். ஏனெனில் அவர்கள் மனித உள்ளத்தைச் சீர் படுத்தும், அவர்களது சீர்கேடுகளை வேறோடு களையும் கொள்கையை வைத்திருந்தார்கள். அத்தோடு அனைத்து நன்மைகளுக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகவும் இருந்தார்கள்.

ஆம்! மனித வரலாற்றில் தளபதிகள், தலைவர்கள் சீர் திருத்தவாதிகள் எனப் பெரும் தொகையினர் தோன்றினர். அவர்கள் -அவர்களில் இறை தூதை நம்பிக்கை கொண்ட ஒரு சிறு தொகையினர் தவிர- மனித வாழ்வில் வரையறுத்த பாதிப்பையே ஏற்படுத்தினர். தமது பரம்பரையும் அடுத்த சில பரம்பரையினர் மீது மட்டும் அவர்கள் பாதிப்பை ஏற்படுத்தினர்.

இதற்கு இரு காரணங்கள்:

 1. அவர்கள் பெரும் பாலும் தமது சமூகத்தில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்கு மட்டும் தீர்வு தேட முயற்சிப்பர். வரையறுத்த பார்வை கொண்ட, மனித அறிவுக்கேற்ப அதற்கவர்கள் தீர்வு காண்பர்.
 2. அவர்களது ஆளுமை சில பகுதிகளில் மனிதனுக்கே உள்ள வழி பிறழ்வுகளையும், குறைபாடுகளையும் கொண்டிருக்கும்.

இஸ்லாமியக் கலை இலக்கியம் – ஒரு கோட்பாட்டு விளக்கம்:

அத்தியாயங்கள்:

 1. இலக்கிய உணர்வு என்ற இயல்பு.
 2. இஸ்லாமியக் கோட்பாட்டின் இயல்பு.
 3. இஸ்லாமியக் கோட்பாட்டில் மனிதன்.
 4. இஸ்லாமியக் கோட்பாட்டில் யதார்த்தம்.
 5. இஸ்லாமியக் கோட்பாட்டில் மனித உணர்வுகள்.
 6. இஸ்லாமியக் கோட்பாட்டில் அழகியல்.
 7. இஸ்லாமியக் கோட்பாட்டில் விதி.
 8. இஸ்லாமியக் கோட்பாட்டில் நம்பிக்கைப் பகுதியின் யதார்த்தம்.
 9. இஸ்லாமிய இலக்கியம் அதன் உண்மை நிலையும், அதன் பகுதிகளும்.
 10. குர்ஆனும் இஸ்லாமிய இலக்கியமும்:
  i. குர்ஆனில் இயற்கைக் காட்சிகள்.
  ii. குர்ஆனில் வரலாற்று நிகழ்வுகள்.
  iii.  குர்ஆனில் மறுமைக் காட்சிகள்.
 11. இஸ்லாமிய இலக்கியப் பாதையில்: (சில மாதிரிகள்)
  i. கவிதை:
  முஹம்மத் இக்பால்
  உமர் அல் அமீரி
  தாகூர்
  ஸகீனா பின்த ஹுசைன்
  இப்னு அல்-ரூமி
  ii. கதை, நாடகம்:
  ஒரு பல்லின் கதை.
  கடலில் பிரயாணப்பட்டோர்.
 12. எதிர் காலம் – சில உலகங்கள்.”

இஸ்லாமியக் கலை, இலக்கியம் பற்றி மிக ஆரம்ப காலத்தில் வெளிவந்த கோட்பாட்டு ரீதியான நூல் இது. இஸ்லாமிய இலக்கியம் படைக்க விரும்புவோர் இங்கு விளக்கப் படும் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள மிக அவசியமானது.

இஸ்லாமியப் பயிற்றுவித்தல் கோட்பாடு என்ற நூலிலிருந்து:

“மக்கள் மீது அன்பு கொள்ளல் அவர்களிடம் காணப்படும் தீமைகளுக்கு எதிராகப் போராடும் போது கூட… அந்தப் போராட்டப் பாதையில் அவர்களிடமிருந்து பல பாதிப்புகளைப் பெற்ற போதும் கூட…!

அல்லாஹ்வை தொடர்ந்து வணங்கல், அல்லாஹ்வுடனேயே தொடர்ந்து வாழல், அல்லாஹ்வின் திருப்தியை எப்போதும் எதிர்நோக்கி நிற்றல், அன்போடு நெருங்கிய தொடர்புள்ள இந்த உணர்வு மனிதன் மீதான அன்பைத் தோற்றுவிக்கும்.

மனிதர்கள் அனைவரும் இறைவனின் படைப்பினங்கள் – படைப்பினங்கள் சகோதரத்துவம்.

மனிதர்கள் பூமி மண்ணால் ஆனவர்கள் – தோற்ற ஆரம்பத்தால் சகோதரர்கள்.

மனிதர்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள் – சென்று சேருமிடத்தால் சகோதரர்கள்.

மனிதர்கள் ஒரே ஆன்மாவிலிருந்து தோன்றியவர்கள் – மனிதம் என்ற சகோதரத்ததுவம்.

மனிதர்கள் அனைவரும் இறைவனையே வணங்குகிறார்கள் அல்லது வணங்க வேண்டும் – நோக்கும் இலக்கில் சகோதரர்கள்.

இங்கிருந்துதான் மனித சமூகத்தின் மீதான அன்பு உருவாகிறது. மனிதர்களுக்கிடையிலான தொடர்பும் உருவாகிறது.”

எங்கே அவரது எழுத்துக்களை விவரிக்க முடியும்! இது அவசரத்தில் செய்த ஓர் அறிமுகம். நவீன இஸ்லாமிய சிந்தனை எதிர் நோக்கிய மாபெரும் சவாலுக்கேற்ப தோன்றிய சிந்தனையாளர்கள் மிகவும் உயர்ந்தவர்கள், ஆழ்ந்தவர்கள் – முஹம்மத் குதுப் ஆரம்ப சிந்தனைப் போராளிகளில் ஒருவர். இந்த சிந்தனையாளர்களை ஆழ்ந்து படிக்காவிட்டால் எம்மிடம் சமூகத்திற்குக் கொடுக்க எதுவுமிருக்காது. மிகவும் அண்மையில் தோன்றிய சிந்தனையாளர்களோடு நின்று விட்டால் இஸ்லாமிய சிந்தனையின் ஆழ, அகலம் விளங்காது.

அல்லாஹ் இம்மாபெரும் சிந்தனையாளரின் தவறுகளைப், பாவங்களை மன்னித்து ஏற்றுக் கொள்வானாக.

Reply