மதச் சார்பின்மையின் பொருள்

 

மதச் சார்பின்மை பற்றிய கலாநிதி அப்துல் வஹ்ஹாப் மிஸைரியின் நூல் அறிமுகம் செய்த போதும், அது பற்றியதொரு ‘வீடியோ’ ஒன்றைப் போட்ட போதும் சகோதரர்கள் பலர் கருத்துக்கள் தெரிவித்தார்கள். எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பலர் மதச் சார்பின்மையே சிறுபான்மைக்குச் சாதகமானது என்றார்கள். மதத்தை விட்டு அரசியலைப் பிரித்து நோக்குவதே மதச் சார்பின்மை எனவும் சொன்னார்கள்.
இக்கருத்துக்கள் எவற்றையும் பிழையென்று சொல்லவரவில்லை.

அப்துல் வஹ்ஹாப் மிஸைரி இது பற்றி சொல்ல வரவில்லை.

மதச்சார்பின்மை நாஸ்திகம், நாஸ்திகமல்ல என்பது இங்கு வாதப் பொருளல்ல.
மதச் சார்பின்மைக்கு இரு பக்கங்கள் உள்ளன.

  1. முழுமையான மதச் சார்பின்மை. அதாவது சமூக வாழ்வு முழுமையாக ஆன்மா, தூய்மை, கடவுள் புனிதம் என்ற நிலைகளை விட்டு விட்டு சடத்துவ உலகுக்கு சென்று விடல். அதாவது ஆன்மீக வாழ்வு, அது பற்றிய கருத்துக்கள் மிகச் சிறியதொரு இடத்தைப் பெறல்.
  2. பகுதி ரீதியான மதச் சார்பின்மை: அரசியல் வாழ்வில் மதத்தை ஒதுக்கி விடல். சமூக வாழ்வில் குறிப்பிட்ட எந்த மதத்தின் சார்பும் எடுக்காதிருத்தல்.

இன்று உலகில் சூழல் மாசடைதல் என்ற பயங்கர நிலையைக் காண்கிறோம். பொருளாதாரம், மருத்துவம், அரசியல் போன்ற பல்வேறு பகுதிகளில் பாரிய ‘மாபியா’ பாதாள உலகைக் காண்கிறோம்.

பசி, பட்டிணி, சுகாதாரமின்மை இவற்றால் பாதிக்கப்பட்டு பெருந் தொகை மனித சமூகமொன்று பெரும் அவலத்தில் வாழ்வதைக் காண்கிறோம். அவ்வாறே ஆயுத போராட்ட நிலைகளைக் காண்கிறோம்.

சத்தியம், பொது நலன், உண்மை என்பவை எல்லாம் அரசியல் உலகில் இல்லாமல் போய் சொந்த நாட்டு நலன், குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கம் என்ற பின்னணியில் தந்திரமும், சூழ்ச்சிகளுமே இடம் பிடித்துள்ளமையைக் காண்கிறோம்.

டார்வினிஸம், பிராய்டின் மனோதத்துவ சிந்தனைகள் பல்வேறு அறிஞர்களின் பொருளாதார, அரசியல் சிந்தனைகள். நவீன காலப்பிரிவு மனிதனுக்கான வாழ்வு முறையாக முன்வைக்கப் பட்டன. இவை அனைத்தும் மதச் சார்பின்மையை அடியொட்டி எழுந்தன. அந்த சிந்தனைகளும், அவற்றின் வளர்ச்சி நிலைகளும் தயாரித்த உலகே இது.

மதச் சார்பின்மையின் அடுத்த பக்கமே இது. மதச் சார்பின்மை என்ற சொல்லைப் பாவிக்க முடியாவிட்டால் மதத்திற்குப் பிரதியீடாக அமைந்த சிந்தனைகளின் விளைவே இது. இந்த உலகிற்கான பிரதியீடு மதமே என்று நான் சொல்லவரவில்லை.

எமது மனித வாழ்வில் எங்கோ ஒரு பயங்கரக் கோளாறு உள்ளது.அதனை இனம் காணுங்கள்.

இதுவே அந்த நூலின் செய்தி.

Reply