ஒரு தடைக் கல்!?
எமது அறிவுப் பாரம்பரியம் மிகப் பாரியது, உன்னதமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த அறிவுப் பாரம்பரியத்தினுள்ளே எப்பெறுமானமுமற்ற வெறும் பதர்களும் ஓரளவு கணிசமான அளவு உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறே அந்தக் குறிப்பிட்ட அறிஞர்களுடனேயே, அக்காலத்தோடு மட்டும் நின்றுவிடுகின்ற பல சிந்தனைகளும் உள்ளன.
இந்த இரு நிலைகளிலிருந்தும் பிரித்து எமது சிந்தனைப் பாரம்பரியத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இந்தப் பின்னணி இல்லாமல் போனால் எமது அறிவுப் பாரம்பரியமே எம்மை முன்னேற விடாது, எதிர் காலம் நோக்கிச் செல்ல விடாது இறந்த காலத்திலிருந்து வந்து விழுந்த பாரியதொரு தடைக் கல்லாக அமைந்து விடும்.
அந்த சிந்தனைகள் எம்மை விலங்கிட்டுக் கட்டிப் போட்டுவிடும்.
அல் குர்ஆன் விளக்கவுரை நூல்களில்:
‘இஸ்ராயிலிய்யாத்’ என்ற யூத, கிறிஸ்தவ கட்டுக் கதைகளை காண்கிறோம். அவை அல் குர்ஆனின் சிந்தனைகளையே மாசுபடுத்தியுள்ளமையைக் காண்கிறோம். தப்ஸீர்-அல்-தபரீ, தப்ஸீர் இப்னு கஸீர் போன்ற மிகச் சிறந்த நூல்களில் கூட இதனைக் காண முடியும்.
பலவீனமான, ஹதீஸ்களையும், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும் கூட அல் குர்ஆன் விளக்கவுரை நூல்களில் அதிகமாகக் காண முடியும்.
கிரேக்க தத்துவ சிந்தனைச் செல்வாக்கை குறிப்பாக அகீதா -நம்பிக்கை சார்- நூல்களிலும் காண முடியும்.
ஸூபித்துவ தத்துவ சிந்தனை, ஸூபித்துவ பயிற்றுவித்தல் சார் சிந்தனைகள் இந்தியா, ரோம், பாரசீகம் இவற்றின் பாதிப்போடு உருவாகின. எனவே ஸூபித்துவ நூல்கள், அல் குர்ஆன், ஹதீஸ் விளக்கவுரை நூல்கள், என்பவற்றில் கூட இவற்றின் செல்வாக்கைக் காணலாம். பிக்ஹ் -சட்ட நூல்களில் கூட இதன் செல்வாக்கு இல்லாமலில்லை.
இஸ்லாமிய சட்ட நூல்களும் குறிப்பிட்ட அக்கால சூழ்நிலைகளின் பாதிப்புக்குட்பட்டன என்பதில் சந்தேகமில்லை. பெண்களோடு தொடர்பு படும் சட்டங்கள், ஜிஹாதோடு சம்பந்தப் படும் சட்டங்கள், அழகியல் பகுதி சார் சட்டங்களை எடுத்தால் இதற்கு நிறைய உதாரணங்களைக் காண முடியும்.
எனவே பெரியதொரு வடிகட்டல், தெரிவு செய்து பொறுக்கி எடுத்தல் எமக்கு மிகவுமே தேவைப் படுகிறது.
இதனையே நவீன கால அறிஞர்கள் பலர் செய்து வருகிறார்கள்.
எமது அறிவுப் பாரம்பரியத்தில் மிகவும் அருமையான, மிக உயர்ந்த சிந்தனைகளும் உள்ளன என்பதில் சந்தேகமில்லை.
அவற்றை மட்டுமே பொறுக்கி எடுக்கும் அறிவுப் பின்னணியோடு எமது சிந்தனைப் பாரம்பரியத்திடம் நாம் செல்ல வேண்டும்.