வெறுப்புக்குரிய மூன்று விடயங்கள்

அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்: இறை தூதர் (ஸல்) சொன்னார்கள்:

அல்லாஹ் மூன்று விடயங்களில் நீங்கள் ஈடுபடுவதை வெறுக்கிறான்:

  1. சொன்னான், சொல்லப்பட்டது என்று கூறல்.
  2. அதிக கேள்விகள் கேட்டல்.
  3. செல்வத்தை பயனற்றதாக வீணடித்தல்.

(ஸஹீஹ் முஸ்லிம் – கிதாப் அல் அக்ழியா, நாஸிருத்தீன் அல்பானி: ஸில்ஸிலத் அல் அஹாதீஸ் அல் ஸஹீஹா இல: 654)

இங்கு இறை தூதர் ஒவ்வொரு முஸ்லிமும் – ஒவ்வொரு மனிதனுமே கவனத்தில் கொள்ள வேண்டிய 3 விடயங்களைக் கூறுகிறார்கள். இவை சமூக வாழ்வின் அதி முக்கிய விடயங்கள்.

1. முதலாம் விடயம்: சொன்னான், சொல்லப்பட்டது.

அர்த்தமும், தேவையுமின்றி மனிதர்களின் தனிப்பட்ட, பொது வாழ்வு பற்றி அரட்டை அடித்தல். அவன் சொன்னான், இப்படி சொல்லப்படுகிறது என வெறுமனே மூன்று, நான்கு பேர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருத்தல்.

  • இது அநியாயமாக நேரத்தை வீணாக்கும்.
  • புறமும், கோளுமாக அமையவும் முடியும்.
  • ஆதாரமின்றிப் பேசுவதாகவும் அமைய முடியும்.
  • பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் பல்வேறு பிழையான மனத் தாக்கங்களை உருவாக்க முடியும்.

2. இரண்டாம் விடயம்: அதிக கேள்விகள் கேட்டல்.

மனிதர்களது நிலையை அறியத் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டல்.
உதாரணமாக:

  • பயணம் செல்லும் ஒருவரிடம் அது பற்றி முழுமையாக அறிந்து கொள்ள மீண்டும், மீண்டும் கேள்வி கேட்டல்.
  • குடும்ப விவகாரங்கள், பொருளாதார விடயங்கள் குறித்து பல கேள்விகள் கேட்டு ஒருவரை சங்கடத்திற்குட்படுத்தல்.

இவ்வாறு மனிதர்களை சங்கடத்திற்குட்படுத்தும் வகையில் துருவி ஆராய முற்படலையே இது குறிக்கிறது.

இது:

  • பொய் சொல்ல வைக்கும், வெறுப்பையும், கோபத்தையும் உண்டாக்கும்.
  • கேள்வி கேட்டவர் மனோ நிலையைப் பாதிக்கவும் செய்யும்.

3. மூன்றாம் விடயம்: செல்வத்தை வீணடித்தல்:

ஒரு செல்வத்தை பயன்படுத்தாது பாழுக்கு விடல்: ஒரு நிலம், கட்டிடம், இயந்திரம் எதுவாகவும் இது இருக்க முடியும்.

  • ஒரு செல்வத்தை அழித்தலையும் இது குறிக்க முடியும்.
  • பயன்படுத்தத் தெரியாதவர் கையில் செல்வத்தை விட்டு வைத்தலையும் இது குறிக்க முடியும்.
  • பாவ காரியங்களில் பயன் படுத்தல், அறிவு இன்றி முதலீட்டில் ஈடுபட்டு செல்வத்தை அழித்துக் கொள்ளலும் இதில் அடங்கும்.

இறை தூதர் (ஸல்) அவர்களது சீரான சமூக வாழ்வுக்கான வழிகாட்டல் மிக அதிகம். அவற்றில் ஒன்று இது. முஸ்லிம் எவ்வாறெல்லாம் அறிவூட்டப் பட வேண்டும்; பயிற்றுவிக்கப் பட வேண்டும் என்பதன் ஒரு பகுதியை இந்த ஹதீஸ் காட்டுகிறது.

Reply