ஊழியர் சேமலாப நிதி (E.P.F)
கேள்வி:
இலங்கையில் உத்தியோகத்தர்கள், தொழிலாளர்களுக்கான சேமிப்புச் சட்டமொன்றுள்ளது. அதன்படி தொழில் கொடுப்பவரும், தொழிலாளியும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட வீதத்தை அச்சேமிப்பிலிட நிர்ப்பந்திக்கப்படுகிறார். இந்தசேமிப்பு ஒவ்வொரு மாதமும் வளர்ந்து செல்வதோடு வட்டியாலும் வளரும்.
அரசு விதிக்கும் இந்த சேமிப்பை தொழிலாளி அவருக்குக் குறிப்பிட்ட வயதடையும்வரையும் பெறமுடியாது. தொழிலாளி சேமித்த இந்தப் பணம் வட்டியோடு இணைந்து அவருக்குத் திருப்பிக் கொடுக்கப்படும். அவரது சேமிப்புத் தொகையைவிட அது பலமடங்கு கொண்டதாக இருக்கும். சில போது 5, 6 மடங்குகள் அதிகமாகவும் இருக்க முடியும்.
வட்டியும், சேமிப்புத் தொகையும் இணைந்த இப்பணத்தைத் திருப்பிப் பெற முடியுமா? எவ்வாறு இப்பணத்துடன் நடந்து கொள்வது?
பதில்:
நீங்கள் குறிப்பிட்ட இப்பணம் தொழிலாளிக்கான சமூக உத்தரவாதம் என்ற கருத்தில் அடங்குவதாகும். அதிகமான நாடுகளில் அரசு இதற்குப் பொறுப்பாகிறது. தொழிலாளியும் இதில் ஒரு குறிப்பிட்டளவு பங்களிப்புச் செய்யுமாறு வேண்டுகிறது.
இந்த செல்வம் வட்டியின் விளைவல்ல. எனவேதான் குறிப்பிட்ட வயதின் போது அல்லது இளையாறும் நிலையின் போது கொடுக்கப்படும் இப்பணம் தொழிலாளி செலுத்திய பணத்தோடு மட்டும் தொடர்பு பட்டிருப்பதில்லை. அவ்வாறின்றி தொழிலாளியின் சேமிப்பும், வட்டியும் மட்டுமாயின் இவ்வளவு பெருந்தொகை சேர்வது சாத்தியமில்லை.
தொழிலாளி கொடுக்கும் தொகை அரசின் பொறுப்பில் சேரும் ஒரு பங்களிப்புமட்டுமே. பின்னர் சமூகப் பாதுகாப்பு உத்தரவாத அல்லது ஓய்வு நிலை சம்பந்தமான சட்டத்தோடு அது தொடர்புபடும். இது அதிகமான இஸ்லாமிய நாடுகளிலும் காணப்படும் நிலையாகும்.
எனவேதான் அல் அஸ்ஹரின் ஆய்வுமன்றம் அதன் இரண்டாவது மகாநாட்டின் போது வெளியிட்ட தீர்வொன்றில் இது பற்றிக் கீழ்வருமாறு கூறுகிறது:
“அரசின் ஓய்வூதிய ஒழுங்கும், அதனையொத்த, சில நாடுகளில் பின்பற்றப்படுகின்ற சமூக உத்தரவாத ஒழுங்குகளும், சமூகப் பாதுகாப்பு ஒழுங்குகளும் அனைத்தும் அனுமதிக்கபட்ட ஆகுமானவைகளாகும்.”
ஏனெனில் இவைபரஸ்பர உதவி, கூட்டுப்பராமரிப்பு என்ற அடிப்படையின் மீது எழுந்தவையாகும்.
இங்கு தொழிலாளிக்கும் அரசுக்கும் அல்லது நிறுவனத்திற்குமிடையிலான தொடர்பு இலாபமீட்டலை அடிப்படையாகக் கொண்டதல்ல. நன்மைகள் விடயத்திலான பரஸ்பர உதவி, கூட்டுப் பராமரிப்பை அடிப்படையாகக் கொண்டதாகும்.
(மேலதிக விளக்கத்திற்கு التأمين الإسلامي التكافلي என்ற எனது நூலை வாசிக்க)
சுருக்கமாகச் சொன்னால் தொழிலாளி அல்லது உத்தியோகத்தன் அரசிடமிருந்து அல்லது நிறுவனமிடமிருந்து பெறும் இச்செல்வம் சமூக பாதுகாப்பு உத்தரவாதம், பரஸ்பர உதவி, கூட்டுப் பராமரிப்பு என்ற கருத்தில் அடங்குவதாகும். அது அரசின் கடமைகளில் ஒன்று. இது வட்டிப் பணமன்று.
தொழிலாளி குறிப்பிட்டளவு தொகை பங்களிப்புச் செய்வது இவ்வொழுங்கைக் கடைப்பிடிக்கிறேன் என்று காட்ட மட்டுமேயாகும்.
எனவேதான் இது அதிகமான நாடுகளில் கட்டாய சட்டமாக ஆக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த செல்வம் இறை நாட்டத்தோடு ஹலால் ஆகும். அதில் எந்த மயக்கமும் இல்லை.
முஸ்லிகள் இந்த ஒழுங்குகளைப் பின்பற்றாது தம்மை ஒதுக்கிக் கொள்ளக்கூடாது எனநான் உபதேசிக்கிறேன். ஏனெனில் இஸ்லாம் சக்திமிக்க மார்க்கம். முஸ்லிமுக்கு அது கூட்டிக் கொடுக்கும், குறைக்காது. அவனை ஒரு போதும் பலவீனப்படுத்தாது.
இஸ்லாம் ஒரு போதும் நல்லவற்றை, உண்மையான நலன்களை ஹராமாக்கமாட்டாது. தீயவைகள், சீர்கேடுகள் என்பவற்றைத்தான் அதுஹராமாக்கும். அல்லாஹ் இம்மார்க்கம் பற்றிக் கீழ்வருமாறு கூறுகிறான்:
“அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்கள்; அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களுக்கு நன்மையை ஏவுவார்; இன்னும், தீமையை விட்டும் அவர்களை அவர் விலக்குவார்; தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்துவிடுவார்; இன்னும், அவர்களைவிட்டு அவர்களுடைய சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்…”
(7 ஸூரா அஃராப் 157)
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
அலி முஹிய்யித்தீன் குர்ரா தாகி,
கட்டார் பல்கலைக்கழக இஸ்லாமிய ஷரீஆ பீட தலைவர்,
சர்வதேசஉலமாசபையின்செயலாளர்,
பதிவுக்கும், ஆய்வுக்குமானஐரோப்பியமன்றத்தின்உபதலைவர்.
இது குறிப்பிட்ட அறிஞருக்கு நான் எழுதிப் பெற்ற பத்வா ஆகும்.
Update: 12.03.2014
EPF போன்ற நிதி பற்றிய பத்வாவுடன் கவனத்திற் கொள்ள வேண்டிய இன்னொரு பகுதி
ஊழியர் சேமலாப நிதி (EPF) போன்ற நிதிகளுக்கு அவை கிடைத்தவுடன் அதற்கான ஒரு வருட ஸகாத்தைக் கொடுத்துவிட வேண்டும்.
குறிப்பிட்ட சொத்தில் ஸகாத் கடைமையாவதற்கு பூரண சொத்துரிமை கொண்டதாக இருத்தல் ஒரு ஷரத்தாகும். EPF போன்ற பணத்தின் மீதான ஆதிக்கம் EPF நிதிக்கு சொந்தக் காரரிடம் கிடையாது.
அரசின் கட்டுப்பாட்டிலேயே அது இருக்கும். குறிப்பிட்ட வயதைத் தாண்டியதன் பின்னரே அந்தப் பணம் உரியவரது ஆதிக்கத்தின் கீழ் வரும்.
இந்தப் பின்னணியிலேயே நவீன இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் பலர் இந்தத் தீர்வுக்கு வந்தனர்.
எனவே EPF போன்ற பணங்களைப் பெறுவோர் உடனே அதற்கான ஒரு வருட ஸகாத்கை் கொடுப்பது அவரது கடைமையாகும்.