தமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.

 

மாவனல்லை பிரச்சினை முடிவதற்கிடையில் இன்னொரு பிரச்சினையை முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். அதுவே கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முஸ்லிம் ஆளுனராக நியமிக்கப்பட்டமை. ஒரு தமிழ் சகோதரி இஸ்லாத்தைத் தழுவியமை என்பவற்றின் பின்னணியாக எழுந்த பிரச்சினைகளாகும்.

இந்த நிகழ்வுகள் உண்மையில் பிரச்சினைக்கான காரணமாக இருக்கக் கூடாது. முஸ்லிம் ஆளுனர் என்பது பல்லின சமூகத்தில் எதிர்பார்க்கக் கூடியது. அவ்வாறான ஒரு நிலையை – தனது இனமல்லாத ஒருவர் ஆளுனராகவோ வேறு முக்கியமான அதிகராப் பதவிகளிலோ நியமிக்கப்படுவதை அடுத்த சமூகங்கள் ஏற்றுக் கொள்ளும் மன விசாலம், சகிப்புத் தன்மை கட்டாயமாக இருக்க வேண்டும். இன்னொரு மார்க்கத்தை சுய விருப்பத்தின் படி ஏற்றுக் கொள்வது என்பது மனித சுதந்திரம். இதனை மறுப்பது பொருத்தமான போக்கே அல்ல.

உண்மைகள் இவ்வாறிருந்த போதும் நிகழ்ச்சிகள் இவ்வாறு ஓடுகின்றமைக்கான காரணம் தமிழ் சமூகம் சகிப்புத் தன்மையற்றது, முஸ்லிம் சமூகத்தின் எதிரி என்பதா என மிகவும் கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்.

அனைத்து சமூகங்களினதும் நடுத்தர, அடித்தட்டு மக்கள் அதாவது பெரும்பாலானவர்கள் இன ரீதியான முறுகல்களையும், அதனால் வரும் இனக் கலவரங்களையும் விரும்புவத்தில்லை. ஒவ்வொரு சமூகத்திலும் ஒன்றாகப் பழகுபவர்கள் இவர்களே என்ற வகையில்  சமூகங்களுக்கு மத்தியிலான உறவுப் பாலங்கள் இவர்களாவர். இனக் கலவரத்தால் பயங்கரமாகப் பாதிக்கப்படுபவர்களும் இவர்களே. இவர்கள் எப்போதும் நல்லவர்கள். அடுத்த வீட்டு முஸ்லிமோடு அல்லது அடுத்த முஸ்லிம் ஊரோடு பல வகையான தொடர்புகளை வைத்திருப்பவர்கள் இவர்கள்.

ஆனால் போதிய அரசியல், சமூக நடத்தைகள் பற்றிய விளிப்புணர்ச்சியோ, அறிவோ அற்ற இவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சில சுலோகங்கள், உணர்ச்சிபூர்வ வசனங்கள், பொய்த் தகவல்கள் என்பவற்றால் இவர்களை இலகுவாக பொங்கியெழச் செய்ய முடியும்.

இன்று எமது அரசியல் என்ன? அனைத்து ஆளுங்கட்சிகளிலும் நேர்மையும், தூய்மையும், அர்ப்பணிப்பும் அற்ற பதவி மோகம், ஆதிக்க வெறி பிடித்த தலைமைகளையே காண்கிறோம். ஒரு மாதத்திற்கு மேல் நடந்து முடிந்த அரசியல் சிக்கல் அதனை நன்றாகப் படம்பிடித்துக் காட்டியது. முன்னைய நாள் ஜனாதிபதியும் சரி, தற்போதைய ஜனாதிபதியும் சரி, எதிர்கட்சித் தலைவரும் சரி அடுத்த தேர்தலில் தாம் ஆட்சிக்கு வருவதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள் என்பது மிகத் தெளிவான உண்மை. எனவே இன முறுகல் மிகப் பெரும்பாலும் அரசியல் பின்னணி கொண்டது என்பது மிகத் தெளிவானதாகும். இது ஒரு சர்வதேச உண்மை என்பதையும் நாம் உணர வேண்டும். சமூகங்களுக்கு மத்தியில் பிளவுவேற்படுத்தவும் ஒரே சமூகத்தின் உள்ளே காணப்படும் கருத்து வேறுபாடுகளை ஊதிப் பெருப்பித்து மோதவிட்டு தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதும், தக்க வைத்துக் கொள்வதும் ஆதிக்க சக்திகளின் அசிங்கமான அரசியல் என்பது தெளிவான உண்மை.

கடந்த தேர்தல்,  நடந்த முடிந்த அரசியல் நெருக்கடி இரண்டும் காட்டிய மிகப் பெரிய உண்மை என்னவென்றால் சிறுபான்மையினர் நாட்டின் அரசியலைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். என்பதாகும். ஆனால் அந்த சிறுபான்மையினரின் பலம் மொத்த சிறுபான்மையினரில் தங்கியிருக்கிறதே ஒழிய ஒரு குறிப்பிட்ட சிறுபான்மையினரிலல்ல. எனவே சிறுபான்மையினரைத் துண்டாடினால் மட்டுமே தம் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்பது நேர்மையற்ற அரசியல் சாணக்கியம். இது தமிழர் விடுதலைப் போராட்டத்திலும் கூட மிகவும் நுணுக்கமாகக் கையாளப்பட்டது என்பது ஒரு முக்கிய உண்மையாகும். இது முஸ்லிம் தமிழ் சமூகங்கள் நன்கு கவனத்திற் கொள்ள வேண்டிய உண்மை. எனவே அவர்கள் என்ன விலை கொடுத்தும் இன ஒற்றுமையைச் சாதிப்பது ஒரு வரலாற்றுத் தேவை.

இனக் கலவரம் என்பது பல ஆண்டுகள் முயற்சித்து செய்ய வேண்டிய அழிவை ஒரு சில மணித்தியாளங்களில் அல்லது ஒரு சில நாட்களில்  சாதித்துவிடும். அது இரு சமூகங்களுக்கும் பயங்கரப் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தும். அதனை ஈடு செய்ய பல ஆண்டுகள் உழைக்க வேண்டியிருக்கும். உயிர் நஷ்டம், குடும்பங்கள் பலவற்றை மிக மோசமாகப் பாதித்து பல அடிகள் பின்தங்கச் செய்யும். இறுதியாக இரு சமூகங்களும் நஷ்டவாளி. இனக் கலவரம் முடிந்த பின்னால் அவ்வளவு விலை கொடுத்து சாதித்தது என்னவென்று பார்த்தால் எதுவுமிருக்காது. அல்லது சாதித்தது மிகச் சொற்பமானதாக இருக்கும்.

இரு சமூகங்களின் மனங்களிலும் வெறுப்புணர்ச்சி, குரோத மனங்பாங்கு இவற்றை விதைத்ததுதான் மிச்சமாக இருக்கும். மீண்டும் இன ஒற்றுமையைக் கட்டியெழுப்பும் முயற்சி கடின நிலைக்குப் போயிருக்கும்.

இப்பின்னணியில் அரசியல் ஆதிக்க சக்திகளுக்கும், அவர்களது அடியாட்களுக்கும் இடங்கொடுக்காதிருப்போம். இரு சமூகங்களினதும் புத்திஜீவிகள், தலைமைகள் இதனைக் கவனமாகக் கையாள்வோம்.

விஷேடமாக முஸ்லிம் சமூகம் அடிப்படையில்  நடைமுறையில் சாதிக்க வேண்டிய விடயங்களைக் கீழே தருகிறோம்.

அடுத்த சமூகங்களுடனான உறவு : இங்கு குறிப்பாக தமிழ் – முஸ்லிம் உறவு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பல ஆண்டு காலமாக சீர்கெட்டுப் போயுள்ளமை அவதானிக்கத்தக்கதாகும். இரு சமூகங்களிடையே காணப்படும் நம்பிக்கை அற்றுப்போன நிலை பரவலாக அவதானிக்கப்படுவதாகும். கல்வி, பொருளாதாரம், அதிகாரம் என்ற மூன்று பகுதிகளிலும் இரு சமூகங்களுக்கிடையேயும் காணப்படும் போட்டி இதற்கான அடிப்படைக் காரணமாகும்.

இந்நிலையில் என்மை நாம் ஒழுங்குபடுத்திக் கொள்வது என்பது பற்றி கீழ்வரும் அம்சங்களின் அடிப்படையில் சிந்திப்போம் :

(அ) முஸ்லிம் சமூகம் ஒரு மதக் கட்டமைப்பைக் கொண்ட சமூகம்.  அந்நிலையில் மார்க்கப் பின்னணியிலிருந்து அந்த சமூகத்தை இறுக்கமற்ற மனநிலை, சட்ட ஒழுங்கு என்பதை சாதிக்கும் சிந்தனைக் கட்டமைப்பொன்றை உருவாக்கல்.

(ஆ) அந்த சிந்தனைக் கட்டமைப்பின் பின்னணியில் மூடுண்ட சமூக நிலையிலிருந்து வெளியேறி திறந்த சமூக நிலைக்கு வரலும், மைய நீரோட்டத்தில் கலத்தலும். மைய நீரோட்டத்தில் கலத்தல் என்பது தேசிய நிலையை மட்டும் குறிக்காது சமூகங்களுக்கிடையிலான நிலையையும் குறிக்கும்.

(இ) எமது வாழ்க்கை ஒழுங்கை விமர்சணக் கண்ணோட்டத்தோடு மீளப் பார்த்தல்.

(ஈ) நாம் ஒரு முன்மாதிரி சமூகமாக இருக்க வேண்டும் என்பது இறை கட்டளை. அதனை எமது நடத்தையில் காணப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்களால் சாதிப்பது பற்றிய சிந்தனா, பயிற்றுவித்தல்  ஒழுங்குக்கு வரல்.

(உ) அடுத்த சமூகங்களோடு உறவாடல் என்ற கருப்பொருளில் கிராமம், கிராமமாக நிருவன ஒழுங்கொன்றை உருவாக்கல். கொள்கைசார் அறிவும், நடைமுறைசார் அறிவும் கொண்டோர் அதனை இயக்கும் பொறுப்பை ஏற்றல்.

(ஊ) தமிழ் சமூகத்தோடு நல்ல உறவாடல் என்பது சாத்தியம் தானா? என்ற நம்பிக்கையிழந்த கேள்வியொன்று நம்மிடையே பரவலாகக் காணப்படுகிறது. அந்த மன நிலையிலிருந்து நாம் வெளிவர வேண்டும். அதனை விரிவாகப் பார்க்க இது சந்தர்ப்பமல்ல. ஆனால் ஓர் இறை வழிகாட்டலை இங்கே தருகிறோம். அதுவே போதுமானது :

“உங்களுக்கும் அவர்களில் யாரோடு எதிர்ப்பு நிலையில் இருக்கிறீர்களோ அவர்களுக்குமிடையே ஒரு அன்புணர்வை, நேசத்தை அல்லாஹ் ஏற்படுத்தலாம். அல்லாஹ் சக்தி படைத்தவன். அல்லாஹ் மிகவும் பாவமன்னிப்புக் கொடுக்கக் கூடியவன். மிகவும் கருணை உள்ளவனுமாவான்.” ( ஸூரா மும்தஹினா 60  : 07)

 

Reply