மாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்

பெரும்பான்மை சகோதர சமூகத்தின் வணக்கவழிபாட்டோடு சம்பந்தப்படும் சிலைகள் உடைக்கப்பட்டமை அந்த பௌத்த சமூகத்தில் ஓர் அதிர்வை விளைவித்தது. முஸ்லிம் சமூகத்தின் உள்ளே பீதி நிறைந்ததொரு பதட்ட நிலையைத் தோற்றுவித்தது. முஸ்லிம் சமூகத்தின் ஏறத்தாழ எல்லா மட்டங்களும் இச்செயலைக் கடுமையாகக் கண்டித்தன.

அதே வேளை முஸ்லிம் பள்ளிகள் பல உடைக்கப்பட்டமை, கடந்த கலவரத்தின்போது படுகாயமுற்ற சதகதுல்லாஹ் மௌலவி மரணித்தமை போன்ற நிகழ்வுகள் குறித்து துரித நடவடிக்கைகளில் அரசு இறங்காமை பற்றி சிலர் கடுமையாகப் பேசினர். அவற்றிக்காக முஸ்லிம்கள் குரலெழுப்பாமை குறித்து கண்டனங்களை வெளியிட்டனர்.

முஸ்லிம் சமூகத்தின் உள்ளே தீவிர மத உணர்வு கொண்ட ஒரு சிலர் இருக்கிறார்களா என்றதொரு கேள்வியையும் இந்த நிகழ்ச்சி எழுப்பி உள்ளது.

இந்நிலையில் முஸ்லிம்கள் மீண்டும் பேசத் துவங்கியுள்ளனர். ஒவ்வொரு இன நெருக்கடிகளின் போது பேசுவதும் பின்னர் அதனைத் தொடர்ந்து கொண்டு செல்லாமல் இடை நடுவே நின்று விடுவதும் எமது சமூகத்தின் போக்காக உள்ளது. முஸ்லிம் – முஸ்லிம் அல்லாதார் உறவு சம்பந்தமான தெளிவான முடிவுகளும், அவற்றை நோக்கி சமூகத்தை நெறிப்படுத்தலும் என்ற இனப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் செயற்பாடு இன்றியே எமது பேச்சுக்களும் ஒன்று கூடல்களும், கலந்துரையாடல்களும் முடிந்து போகின்றன. எனவே, சரியான இலக்கை நோக்கி எம்மால் பயணிக்க முடிவதில்லை என்பதோடு, முஸ்லிம் – முஸ்லிம் அல்லாதோருக்கிடையிலான உறவைக் கட்டியெழுப்பும் செயற்பாடு இத்தகைய நிகழ்வுகளால் எதிர்மறை விளைவுகளைக் கொடுத்துவிடுகிறது.

முஸ்லிம் சமூகத்தின் உள்ளே காணப்படும்:

 • கடுமையான சிந்தனைச் சிக்கல்
 • பிளவுபட்டு சிதறுண்ட நிலை
 • அர்ப்பணமிக்க சிவில் சமூகத் தலைமை இன்மை
 • தியாக உணர்வும், சீரிய நோக்கும் கொண்ட அரசியல் தலைமை இன்மை
 • வறுமைப்பட்ட மக்கள் கூட்டமொன்று முஸ்லிம் சமூகத்தின் ஏறத்தாழ எல்லாக் கிராமங்களிலும் காணப்படுகின்றமை.
 • கல்வியிலிருந்து விலகிச் செல்லும் இளைஞர் கூட்டமொன்று அதிகரித்து வருகின்றமை.
 • மிகவும் கடுமையாக முஸ்லிம் சமூகத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும் நுகர்வுக் கலாச்சாரம்
 • இவை எல்லாவற்றுக்கும் முதன்மையாக முஸ்லிம் சமூகத்தைப் பீடித்திருக்கும் ஆன்மீக வறுமை.

இப்படியானதொரு சமூகம் உரிமைக்காகப் போராடுவதும், தன் மீது இழைக்கப்பட்ட அநியாயங்களைத் தட்டிக் கேட்கவும் எங்கே சக்தி பெறப் போகிறது.

சமூகத்தின் இந்த யதார்த்தங்களைப் புரிந்ததன் பின்னணியில் எங்கிருந்து துவங்குவோம், எப்படியான கிட்டிய இலக்குகளையும், தவிர்க்க முடியா நிலைப்பாடுகளையும் ஒழுங்கு படுத்திக் கொள்வோம் என சிந்திப்பது முதன்மையானதாகும்.

இந்த சிந்தனைக்கு கீழ்வரும் மூன்று அடிப்படைகள் உள்ளன:

 1. முக்கியத்துவத்தின் அடிப்படையில் எமது சிந்தனைகள், செயற்பாடுகளை நிரல் படுத்தல் (பிக்ஹ் அல் அவ்லவிய்யாத்)
 2. ஷரீஅத்தின் மாறும், மாறாத் தன்மை கொண்ட சட்டங்கள், சிந்தனைகளை இனம் கண்டு அதன் நெகிழ்வுத் தன்மையைப் புரிதல்.
 3. தஃவா சமூகம் என்ற பின்னணியிலிருந்து உரிமைகளுக்காகக் குரலெழுப்பல், பௌதீக, மானசீக இருப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளல் என்பவை பற்றிச் சிந்தித்தல்.

இம் மூன்று அடிப்படைகளுமே மகாஸித் அல் ஷரீஆ என்ற கோட்பாட்டுப் பின்னணியிலிருந்து நோக்கப்பட வேண்டியவையாகும்.

இவற்றின் நடைமுறைப் பிரயோகம் மார்க்கத் தலைமைகளில் மட்டுமின்றி அதற்கு சமாந்தரமாக அமையும் சிவில் சமூகத் தலைமைகளிலும் பெருமளவு தங்கியுள்ளது.

அளுத்கம, பேருவலை, ஜின்தொட்டை, அம்பாறை, திகன, அக்குறணை எனத் தொடர்ந்தோடி வந்து மாவனெல்லைப் பிரச்சினையில் நிற்கிறோம். இனியாவது திடமான, திட்டமிட்ட, தொடர்தேர்ச்சியான செயற்பாடுகள் சமூகத்தினுள்ளே தோன்றுமா?

எதிர்பார்ப்போம்.

அப்படி ஒரு திடமான செயற்பாடு தோன்றாவிட்டால் மிகவும் அபாயகரமான எதிர்காலம் நோக்கி நாம் செல்வது தவிர்க்க முடியாது போகும்.

அல்லாஹ் இந்நாட்டில் இஸ்லாத்தையும் எம்மையும் காப்பானாக.

Reply